
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
34 வருடங்கள் கடந்தும் தமிழர்கள் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை
திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 34 வருடங்கள் கடந்தும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்தார்.
திராய்க்கேணி படுகொலையின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சுதந்திரத்துக்கு பின்னர் திட்டமிட்டவகையில் 1956, 1985, 1990, 2009 வரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இதுவரை இந்தப் படுகொலைகளுக்கு நீதியோ, நஷ்டஈடோ கிடைக்கவில்லை.
எந்த இனமாக இருந்தாலும் ஆலயம் என்பது புனிதமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் இந்து ஆலயங்களில்தான் அதிகமான படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. அரசாங்கமே இராணுவத்தையும், முஸ்லிம் ஊர்காவல் படையினரையும் பயன்படுத்தி இந்த திட்டமிட்ட படுகொலைகளைச் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
வீரமுனையிலும் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த வரலாற்றை எல்லாம் நாங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துசெல்ல வேண்டும். சமகால சந்ததியினர் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)