2004ல் ஆனந்த சங்கரி போன்று இன்று சம்பந்தன் சுமந்திரன் செய்திருக்கின்றார்கள் -  ஜனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

2004ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சூரியன் சின்னத்தையும், கட்சியையும் ஆனந்தசங்கரி ஐயா எவ்வாறு தூக்கிச் சென்றாரோ அதேபோல் இன்று சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் வீட்டுச் சின்னத்தையும், தமிழரசுக் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா பாணியில் சம்பந்தன் ஐயா உட்பட்டவர்கள் தூக்கிச் சென்றிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

துயர் பகிர்வோம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் நாங்கள் ஒரு தேர்தலைச் சந்திக்க இருக்கின்றோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் இறுதித் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வேளையிலே ஒரு தரப்பு தேர்தல் நடத்தப்படக்கூடாது எனவும், மற்றுமொரு தரப்பு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். இருப்பினும் நாங்கள் அரசியற் கட்சியாக தேர்தலை முகங்கொடுக்க வேண்டிய ஒரு தேவைப்பாட்டுடன் இருக்கின்றோம்.

இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது வடக்கு கிழக்கிற்கு வெளியிலே கடந்த கால அரசியற் சூழ்நிலையை ஒட்டி தங்களது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு தேர்தலாகவே கருதப்படும். குறிப்பாக மொட்டுக் கட்சியின் கோட்டபய பதவி விலக்கப்பட்டிருக்கின்றார். இந்த வேளையிலே பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் தேசியப் பட்டியல் மூலம் வந்த ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாரத்திலே இருக்கின்றார். எனவே இவ்வாறன கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் உட்பட இந்தத் தேர்தலை தங்களது எதிர்காலத் தேர்தலுக்கான பரீட்சார்த்தமாகவே பார்ப்பார்கள்.

The Best Online Tutoring

ஆனால் எங்களைப் பொருத்தமட்டில் எந்தவொரு தேர்தலும் தமிழ் மக்களின் ஆணையாக, தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஒற்றுமையாக இருந்து தங்களது பலத்தை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துகின்றார்கள் என்ற அடிப்படையிலான தேர்தலாகவே நாங்கள் நோக்கிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் சந்திக்க இருக்கும் நேரத்திலே பலமாக இருக்க வேண்டிய நாங்கள் பலவீனப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இன்று முஸ்லீம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் நீண்ட காலமாக முஸ்லீம் காங்கிரஸிலிருந்து தனது சொந்த அரசியலை செய்து கொண்டிருந்த ஹிஸ்புல்லா அவர்கள் தனது ஆரம்பக் கட்சியான முஸ்லீம் காங்கிரஸில் இணைந்து தங்களது சமூகத்திற்காக ஒற்றுமையாகி இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையில் இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் அனுசரணையுடன் முரண்பாடுகளுக்கு மத்தயிலே இருந்த ஆயதப் போராட்ட இயக்கங்களையும், மிதவாதக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காக ஒருமித்த குரலாகப் பலமானதொரு அரசியற் சக்தியொன்று இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் 2001லே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு முதலாவது தேர்தலை சூரியன் சின்னத்திலே சந்தித்து 18 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.

2004லே ஆனந்த சங்கரி ஐயாவிற்கும் ஏனையவர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் தமிழர் விடுதலைக் கூட்ணியையும், அந்தச் சூரியன் சின்னத்தையும் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார். இதன் போது சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டிலே இருக்காமல் இருந்த வீட்டுச் சின்னத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தூசுதட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக அறிமுகப்படுத்தியிருந்தார்கள். 2009 மே 18 வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பலமான சக்தியாக இருந்தது. அன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னிருந்து ஒரு சக்தி இயக்கிக் கொண்டிருந்ததையும் அனைவரும் அறிவர்.

2009 மே 18ற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக தலைமை சம்மந்தன் ஐயாவிடமும், தமிழரசுக் கட்சியிடமுமே இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்குமுகமாகவே மக்கள் மத்தியில் பிரதிநிதித்துவத்தைப் பெற்று வந்தது. இறுதியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் என மூன்று கட்சிகள் தான் மிகுதியாக இருந்தன.

தற்போது நாங்கள் எங்களது பலத்தைக் காட்ட வேண்டிய நேரத்திலே, குறிப்பாக இந்த நாடு பொருளாதார நிலையில் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக ஒரு பேச்சுவார்தையை நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலே, நாங்கள் ஒற்றுமையாக இருந்து எமது பலத்தைக் காட்ட வேண்டிய இந்தத் தருணத்திலே இருக்கின்ற இந்த மூன்று கட்சிகளில் இருந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனியாகப் போட்டியிடுவதாக மட்டக்களப்பிலே நடைபெற்ற மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று சொல்லி அறிவித்துள்ளார்கள்.

ஆனால் இந்தத் தனித்துப் போட்டியிடுவதென்ற அறிவிப்பு மத்திய குழு கூட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்ததையும் யாரும் மறக்கமாட்டார்கள்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுவான சின்னத்திலே கட்டமைப்பொன்றை ஏற்படுத்தி நாங்கள் பலமானதொரு சக்தி என்பதை வெளியுலகிற்குக் காட்ட வேண்டிய இந்த நேரத்திலே தமிழரசுக் கட்சி தனித்துச் செல்கின்றது. தமிழத் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக அரசியல் ரீதியாகப் போராடுவதற்காகவே. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய நோக்கம் இன்னும் இறுதிபெறவில்லை. தமிழ் மக்கள் இன்னும் தங்கள் அதிகாரங்களைப் பெறுவற்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் எமக்குள்ளான ஒற்றுமையே முக்கியம். அதன் காரணமாக கடந்த காலங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியில் இருந்த ஒரு சிலரின் தன்னிச்சையான நடவடிக்கைகளினால் வெறுப்பு ஏற்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியில் சென்ற கட்சிகளுடனும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியுடனும் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இறுக்கமான தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு பேரியக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபைக் கட்டியெழுப்புவதற்கும், எதிர்ரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் அழிக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டுவதற்காகவும் எதிர்வரும் சனிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கின்றோம். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து சபைகளையும் கைப்பற்றி தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் இருக்கின்றார்கள் என்பதை இந்த நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் தெரிவிப்போம்.

தமிழரசுக் கட்சி பிரிந்து சென்றதற்கு தொழில்நுட்ப, அட்சர கணித ரீதியான விடயங்கள் இருப்பதாக தமிழரசின் பேச்சாளர் கூறியிருந்தார். அண்மையில் கொழும்பில் இறுதியாக இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே நானும் அந்த அட்சர கணிதம் ரீதியான விடயத்தை அவருக்கு விளங்கப் படுத்தினேன். அவர் அதனை ஏற்றும் கொண்டார். கடந்த தேர்தலிலே மூன்று கட்சிகள் சேர்ந்து மட்டுக்கு மட்டான வாக்குகள் அடிப்படையிலேயே நாங்கள் வாக்ககளைப் பெற்றோம். இந்த நிலையில் அவரின் அட்சரகணித தொழில் நுட்ப ரீதியான முறைப்படி இம்முறை நாங்கள் பிரிந்து கேட்கும் போது அந்த வாக்குகள் மூன்றாகப் பிளவடைந்து நான்காமவருக்கே அதிகப்படியான வாக்குகள் செல்வதற்கு வழிவகுக்கும் என்ற தெளிவினை நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதனை அவர் சரியெனவும் ஏற்றுக் கொண்டார். குறைவளவாகக் கிடைக்கக் கூடிய விகிதாசார ஆசனங்களுக்காக பெருமளவான வட்டாரங்களை இழக்க வேண்டிய நிலைமை அவரது தொழில்நுட்ப ரீதியான முறையில் ஏற்படும்.

அந்த தொழில் நுட்ப ரீதியான செயற்பாடு எங்களுக்கு வீழ்ச்சியைத் தான் கொடுக்கும் அதற்காகத தான் நாங்கள் கூறினோம் ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலம்பொருந்திய அணியாக மாற்றி கூடிய வாக்கு வித்தியாசத்தில் வட்டாரங்களை நாங்கள் வென்றால் அந்த வட்டாரங்களும் கிடைக்கும் அதிகூடிய வாக்குகள் பெற்றமையால் விகிதாசாரத்திலும் குறிப்பிட்டளவு உறுப்பினர்களைப் பெற்று நாங்கள் தனியே ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை உருவாகும்.

தனித் தனியாகக் கேட்டால் தமிழ்த் தேசியக் கூட்மைப்பும் இல்லை. தமிழ்த் தேசியமும் இல்லை. தனித்தனியே தேர்தல் கேட்கும் போது அவரவர் கட்சிகளை முதன்மைப் படுத்தி பிரச்சாரங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறாகின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பிரச்சாரம் செய்வது யார்? இந்த நிலையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் தனித்து தனித்து போட்டியிடுவோம் என்றால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒன்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்குமே தவிர அங்கு தேசியம் இருக்காது.

எனவே நாங்கள் மற்றைய கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பயணிக்கவுள்ளோம். அதற்கு நிச்சயமாக ஒரு கட்சியின் சின்னம் இருக்காது ஒரு பொதுவான சின்னமே இருக்கும். ஏனெனில் ஒரு கட்சியின் சின்னத்திலே கேட்டால் என்ன நடக்கும் என்பதை இரண்டாவது தடவையாக நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கின்றது. தற்போது குறி;த்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிருவாக ரீதியாக அறிவிப்பு வெளியிட்டு பொதுவானதொரு சின்னம் வெளியிடப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழிவதற்கோ, இல்லாமல் போவதற்கோ நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம். 2004ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்தசங்கரி ஐயா எவ்வாறு தூக்கிச் சென்றாரோ அதேபோல் இன்று சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் வீட்டுச் சின்னத்தையும் தமிழரசுக் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா பாணியில் சம்மந்தன் ஐயா உட்பட்டவர்கள் தூக்கிச் சென்றிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

2004ல் ஆனந்த சங்கரி போன்று இன்று சம்பந்தன் சுமந்திரன் செய்திருக்கின்றார்கள் -  ஜனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

2004ல் ஆனந்த சங்கரி போன்று இன்று சம்பந்தன் சுமந்திரன் செய்திருக்கின்றார்கள் -  ஜனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 18.05.2026

Read More
2004ல் ஆனந்த சங்கரி போன்று இன்று சம்பந்தன் சுமந்திரன் செய்திருக்கின்றார்கள் -  ஜனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 18.05.2026

Read More
2004ல் ஆனந்த சங்கரி போன்று இன்று சம்பந்தன் சுமந்திரன் செய்திருக்கின்றார்கள் -  ஜனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 16.05.2026

Read More
2004ல் ஆனந்த சங்கரி போன்று இன்று சம்பந்தன் சுமந்திரன் செய்திருக்கின்றார்கள் -  ஜனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 15.05.2026

Read More