
posted 15th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விகாரைக்கு காணி ஆக்கிரமிப்பு - அதிகாரிகள் பார்வையிட்டனர்
விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகளை திருகோணமலை மாவட்ட அரச அதிபர், குச்சவெளி பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்தனர்.
திருகோணமலை - குச்சவெளியில் - இலந்தைக்குளம் 5ஆம் கட்டையில் கடந்தமாதம் 25ஆம் திகதி பிக்கு ஒருவர் மக்களுக்கு சொந்தமான காணிகளை விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமித்து துப்பரவு செய்தார்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் குச்சவெளி பிரதேச செயலரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, இந்தத் துப்புரவு பணி இடைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்நது, இந்த விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (13) திருகோணமலை மாவட்ட அரச அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் அங்கு சென்று காணிகளை பார்வையிட்டனர். இதன்போது, மக்களின் ஆவணங்களையும் பரிசோதித்தனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் விகாராதிபதியுடனும் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் உறுதியளித்தார்.
இலந்தைக்குளம் மக்கள் 1990ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்தனர். மீளக்குடியமர முயன்ற மக்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையிலேயே விகாரை அமைப்பதற்காக அந்த மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)