
posted 29th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ரணிலே எமது தெரிவு. அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்
மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்பட வேண்டும் என தாம் விரும்புவதாகவும், அதுவே தற்கால சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும் சரியான தெரிவாக இருக்கும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட மற்றும் பிரதேச பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதே நேரம் குறித்த திகதியில் தேர்தல் நடைபெற்றாலும் சரி, இல்லாதுவிட்டாலும் சரி தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் நாம் தயாராகவே இருக்கவேண்டும்.
தற்போதைய தேர்தல் களத்தில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தாலும் குறித்த ஒரு சிலருக்கிடையேதான் கடும் போட்டி நிலவும் என நினைக்கின்றேன்.
இதில் தற்போதைய ஜனாதிபதியே முதன்மையானவராக இருப்பார். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் ஒன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.
2005 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்த பொழுது தமிழ் மக்களை சுயநலன்களுக்கு அப்பால் சிந்தித்து, அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால் அன்று தவறவிட்டுவிடப்பட்டுவிட்து
ஏனென்றால் தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005 இருந்தது. அன்று அந்த வாய்ப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாய்ப்போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்களை துயரங்களை இடம்பெருவுகளை எமது மக்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள் .
அதே நேரம் எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம் என நான் நம்புகின்றேன்.
ஆனால் கடந்த இரண்டு வருடத்திற்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால் தன்னுடைய செயல்பாட்டால் நாட்டுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றர். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று விருப்புகின்றேன்.
அந்த வகையில் எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் மூலமாகவும், அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)