
posted 16th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்ப்பாணத்தின் தமிழ் தமிழ்நாட்டில் இல்லையே - இந்திய உயர்நீதிமன்ற நீதியரசர்
தமிழ்நாட்டில் இவ்வாறான தமிழ் இல்லையே என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கின்றன என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டையில் சிவபூமி தேவார மடம் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவில் தமிழ்நாடு என்று பெயர் இருந்தும், அங்கே தமிழ் இவ்வாறு இருக்காதா என்று யோசிக்க வைக்கிறது. அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கின்றன.
சைவத்துக்கும் தமிழுக்கும் சேவை செய்ய கலாநிதி ஆறு. திருமுருகன் தமிழ்நாட்டுக்கு வருகை தரவேண்டும். சாதாரண தொண்டு செய்பவர்கள் விளம்பரங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விளம்பரத்துக்காகவே தொண்டு செய்கிறார்கள். ஆனால், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் தன்னலம் இல்லாது எவ்வளவோ திருப்பணிகளை செய்துவருகிறார். இத்தகைய பணிகள் மன்னர்கள் செய்யவேண்டிய பணி இவர் சாதாரணமாக செய்துவருகிறார். இது இறைவனின் அருள் இல்லாமல் செய்யமுடியாது. இறைவனின் அருள் அவருக்கு உள்ளது.
சைவமும், தமிழும் எல்லோரையும் வாழவைக்கும். அத்தகைய பணி செய்பவரை யாழ்ப்பாணம் பெற்றுள்ளது. இத்தகைய பணி தமிழகத்தில் இல்லையே. கால மாற்றத்தால் சுருங்கிப்போயுள்ளது. ஆறு. திருமுருகனின் பணி உலகில் பல இடங்களுக்கும் தேவையாக உள்ளது என்றும் கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)