மட்டக்களப்பு மாவட்டத்தில்  அதிகாரிகளின் பயங்கரவாதம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகாரிகளின் பயங்கரவாதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகாரிகளின் பயங்கரவாதம் உருவெடுத்திருக்கின்றது. அது அங்கு மிகவும் மோசமாக இருக்கின்றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கூறினார்.

பிரதமரின் கீழ் உள்ள பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் நடைபெற்றபோது சபையில் உரையாற்றுகையிலேயே இதனைச் சொன்னார்.

அங்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

இந்த அமைச்சுக்கு பொறுப்பான பிரதமர் தினேஷ் குணவர்தணவும், ராஜாங்க அமைச்சர்களான ஜனக்க வக்கும்புற, அசோக பிரியந்த ஆகியோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

இந்த நாட்டின் பொது நிருவாகத்தில் முதுகெலும்பாகக் கருதப்படுகின்ற கிராம அலுவலர்கள் 14,000 பேர் ஆற்றுகின்ற பணி மகத்தானது. அவர்களது கொடுப்பனவுகள், அலுவலக தேவைகள் போன்றவை உரிய முறையில் நிறைவு செய்யப்பட வேண்டும் .

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் சமயா சமய ஊழியர்கள் 8000 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

அலி சாஹிர்மௌலானா எம்.பி இன்று (28) இங்கு உரையாற்றவிருந்தார். அவசர காரணத்துக்காக அவர் மட்டக்களப்புக்குச் சென்றிருக்கின்றார். உள்நாட்டு அலுவல்கள் பொது நிர்வாக அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு அவர் சமர்ப்பித்திருக்கும் முன்மொழிவுகளைப் பற்றி இங்கு குறிப்பிட்டு பேசும் படி அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

சட்ட ரீதியாக, உத்தியோபூர்வமாக கிராம அலுவலர் பிரிவுகள் வர்த்தமானியில் வெளியிடப்படாத, சில பிரிவுகளை உள்ளடக்காத பிரதேச செயலகமாக தற்போது இருக்கக் கூடிய கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலக பிரிவுக்கு தாமதமின்றி 206, 206(B), 207(D), 206(A), 206(C), 206208(A) 208(D) 210(C)211(B) 211(H) 211(G-2) என்கின்ற கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக அது அறிவிக்க பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் இங்கு இருக்கிறார். இது அவரும் அறிந்த விடயம். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றின் போது இந்த விடயத்தைச் சுட்டிக் காட்டி அவர் எங்களுக்கு பதில் வழங்கியிருந்தார். புதிய குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. புதிய குழுவின் பரிந்துரையையும் இதன் போது கவனத்தில் கொள்வதாகச் சொன்னார்.

இந்த அமைச்சுக்குப் பொறுப்பாக தற்போதைய பிரதமர் அவர்கள் இருப்பது போல இதற்கு முன்னரும் பிரதமர் ஒருவர் இந்த அமைச்சைப் பொறுப்பெடுத்திருந்தார். அவர் ரத்தின சிரி விக்கிரமநாயக்க ஆவார். அவருடைய காலப்பகுதியில் பனம்பலம எல்லை நிர்ணயக் குழு நியமிக்கப்பட்டது. அதன் சிபாரிசுக்கு அமைவாக, குழுவின் அறிக்கையின்படி பல இடங்களில் பிரதேச செயலக பிரிகளை உருவாக்கினார்கள். அவை இரத்மலானை, இங்கிரிய, வலஸ்முல்ல மற்றும் நான் இங்கு குறிப்பிடுகின்ற கோறலைபற்று மத்தி என்கின்ற பிரதேச செயலக பிரிவுகளாகும். கோறலைபற்று தெற்கு, சாய்ந்தமருது, நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்டன. கோறலைப் பற்று மத்திக்கு சொந்தமான பிரதேச செயலக பிரிவு தொடர்பாகத்தான் பிரச்சினை இருக்கின்றது. கோறலைபற்று தெற்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் பிரிவு. அந்த பிரிவு வர்த்தமானியூடாக சட்ட ரீதியானதாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், முஸ்லிம் பெரும்பான்மை இருக்க கூடிய கோரளைப் பற்று மத்தி பிரதேச செயலக பிரிவு அந்த சந்தர்ப்பத்தில் சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட்ட போதிலும், அந்த பிரதேச செயலக பிரிவுக்குரிய கிராம அலுவலர் பிரிவுகள் தொடர்பாக வர்த்தமானியில் வெளியிடாமல் வைத்துக் கொண்டு 20 வருடங்களாக முறையற்ற வகையில் நிர்வகிக்கின்ற இடமாகத்தான் இதை காட்ட முயற்சிக்கின்றார்கள்.

ஆகவே, நான் வேண்டுகோளொன்றை விடுக்க விரும்புகின்றேன். தேவையற்ற வகையில் நான் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற ஒருவனல்ல. மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவட்டச் செயலகத்தில் இருக்கக்.கூடிய உயர் அதிகாரிகளுக்கு இடையில் பலர் இடமாற்றம் பெற்று இருக்கின்றனர். அங்கு இருக்கின்ற உயர் அதிகாரிகள் பலரும் மாறுதல் பெற்று இருக்கின்றார்கள். மாவட்ட அரசாங்க அதிபர்களும் மாற்றப்பட்டு இருக்கின்றார்கள். இருந்த, இருக்கின்ற அதிகாரிகளின் செல்வாக்கு அங்கு அதிகமாக இருப்பதை நான் உணர்கின்றேன்.

உண்மையில் சொல்லப் போனால் அதை அதிகாரிகளின் பயங்கரவாதம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. துப்பாக்கி பயங்கரவாதத்திற்கு நாங்கள் முகம் கொடுத்தோம். ஆனால், அதிகாரிகளின் பயங்கரவாதம் அங்கு உருவெடுத்திருக்கின்றது. அது அங்கு மோசமாக இருக்கின்றது.

இருபது வருடங்களாக சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட இந்த பிரதேச செயலகப் பிரிவுக்கு சொந்தமான அதன் ஆளுகைப் பிரதேசத்தை நிர்வகிக்க விடாமல் அதற்கு தடை ஏற்படுத்திக் கொண்டிருக்க கூடிய இந்த அதிகாரிகளுக்கு எடுக்க கூடிய நடவடிக்கை என்ன?

எங்களது கட்சியில் இருந்து வெளியேற்றபட்ட நஸீர் அஹமட் அவர்களும் உங்களிடம் (பிரதமர்) இது தொடர்பான விபரங்களை சொல்லியிருப்பார் என நினைக்கின்றேன். அவரும் இது தொடர்பாக நேர்மையுடன் தலையிட்டார். அவரை கட்சியில் இருந்து துரத்தியது வேறு காரணத்திற்காக. அது வேறு விடயம். ஆனால், இது தொடர்பாக அவரும் முன்வந்து விடயங்களைச் சுட்டி காட்டியிருக்கிறார் என்று நம்புகிறேன்.

பிரதமர் அவர்களே, இது அதிகாரிகளுடைய பயங்கரவாதம். அதிகாரிகள் இனவாத அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்க கூடிய பிரதேசத்திற்கு மாத்திரம் செய்திருக்க கூடிய இந்த பாதகமான செயல் தொடர்பாக நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். வாழைச்சேனை, பிறந்துறைச்சேனை, மாவடிச்சேனை கிராம அலுவலர் பிரிவுகளில் மீன்பிடித் துறைமுகம், வைத்தியசாலை, பொலிஸ் நிலையம், புகையிரதநிலையம், கால்நடை அலுவலகம், நீதவான்நீதிமன்றம், விவசாய திணைக்கள அலுவலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உப அலுவலகம் முதலான அரச அலுவலகங்கள் பல இருக்கின்றன.

முழுமையாக சட்ட விரோதமான முறையில் இந்த பிரதேசத்திற்குள் பிழையான வரைபடங்களைத் தயாரித்துக் கொண்டு விசேடமாக வாக்காளர் பதிவேடு அதை கண்காணித்தல் மற்றும் சனத்தொகை மதிப்பீட்டுப் பணிகள் ஆகிய அனைத்தையும் கோறளைபற்று தெற்கு செயலக உத்தியோகத்தர்கள்தான் செய்ய முயற்சிக்கின்றார்கள். இதை முழுமையாகத் தவறான செயல் என்றுதான் சொல்லவேண்டி இருக்கின்றது. பிரஸ்தாப எல்லை நிர்ணயக் குழு வழங்கிய அந்த சிபாரிசை அல்லது அந்த ஆணையை எங்கள் மக்களுக்கு அனுமதிக்காமல் இருப்பது தவறாகும். எனவே, அதற்கு எதிராகச் செயல்படுகின்ற அதிகாரிகள் மீது குற்றம் சுமத்த வேண்டி இருக்கின்றது.

கோறளைபற்று மேற்கு கிராம சேவகர் பிரிவும், கோறளைபற்று வடக்கு கிராம சேவகர் பிரிவும் இருக்கின்றன. ரிதீதென்ன, காரமுனை அதுபோல இன்னுமொரு கிராம அலுவலர் பிரிவை புதிதாக ஏற்படுத்தி, இந்த கிராம அலுவலர் பிரிவுகளை கோறளைப்பற்று மத்தி என்று சொல்லக்கூடிய பிரதேச செயலக பிரிவுக்கு உள்வாங்குமாறு வழங்கப்பட்ட சிபாரிவு முழுமையாக தவிர்க்கப்பட்டு, இந்த அதிகாரிகள் முன்னெடுக்கின்ற "பயங்கரவாதம்" தொடர்பாக நாங்கள் அடிக்கடி கதைத்து வருகின்றோம். ஏன் அவர்கள் நியாயமாக நடந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள்?

இந்த நடவடிக்கையின் மூலம் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் அதற்கு வெளியிலும் செயல்படுகின்ற இந்த அரச அதிகாரிகள் மேலதிகாரிகள் வேண்டுமென்று அங்கு நான் இங்கு குறிப்பிட்ட பிரதேசங்களில் ரிதிதென்ன, ஜெயந்தியாய, காரமுன போன்ற கிராம அலுவலர் பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்டு, அந்த கிராம அலுவலர் பிரிவுகளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தோடு இணைத்திருப்பதான அறிக்கை வெளிவந்த பிறகும் கூட இதுவரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. அவ்வாறு வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு தடை விதித்துக்கொண்டு அதை நடக்க விடாமல் தடுத்துக்கொண்டு அந்த பிரதேசங்களை கோறளைப்பற்று தெற்கின் ஊடாக நிர்வகிக்க முயற்சிக்கின்ற மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தினூடாக நிர்வகிக்க முயற்சிக்கின்ற வேளையில் ஒரே கிராம அலுவலர் பிரிவுக்கு கிராம அலுவலர்கள் இருவர் செயல்படுகின்ற ஒரு விசித்திரமான நிலைவரம் அங்கு காணப்படுகின்றது என்பதை நான் உங்களுடாக கௌரவ பிரதமருடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

இதனுடைய பாரதூரம் என்னவென்றால், இன்று தியாகுவெட்டுவான் போன்ற பிரதேசங்களிலிருந்து ஒரு மைல் தூரத்திற்குள் இருக்கின்ற கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குச் சென்று தங்களுடைய அலுவல்களை முடிக்கக்கூடிய நிலையில் மக்கள் இருக்கின்ற போது அவர்கள் முப்பது கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருக்கின்ற வாகரை பிரதேசத்திற்குப் போய் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் தங்களுடைய அலுவல்களை முடிக்க வேண்டிய ஒரு நிர்பந்தத்துக்கு வேண்டுமென்றே இந்த நிர்வாகப் பயங்கரவாதம் இடமளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம்.

இந்த பிழையான நடவடிக்கையின் மூலம் ஏராளமான ஏறத்தாழ இருநூற்று நாற்பது சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு இந்த கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்தின் கீழ் வர வேண்டியதைத் தடுக்கின்ற நிலைவரம் மிகவும் பாரதூரமானது. இதை கவனத்தில் எடுத்து இதை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் மிக தாழ்மையுடன் வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோன்று கல்முனை பிரதேச செயலகத்தை தமிழ் பிரதேச செயலகம், முஸ்லிம் பிரதேச செயலகம் என்று வைத்துக்கொண்டு அதற்கு ஒரு கணக்காளரை நியமிக்கவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டை இன்று பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இங்கு சொன்னார். எங்களுடைய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கு இருக்கின்றார்கள்.

ஆனால் , இந்த நியமனம் சம்பந்தமாக இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதை தரம் உயர்த்துகின்ற விவகாரம் சம்பந்தமாக இருக்கின்ற விஷயம் இப்போது நீதிமன்றத்திற்கும் போயிருக்கின்றது.

ஆனால் இதை தீர்ப்பதாக இருந்தால் அங்கு இருக்கின்ற கிராம அலுவலர் பிரிவுகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். எழுபது வீதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இருபத்தி ஒன்பது கிராம அலுவலர் பிரிவுகளும், முப்பது சதவீதமாக இருக்கின்ற தமிழர்களுக்கும் இருபத்தி ஒன்பது கிராம அலுவலர் பிரிவுகளுமாக இந்த கிராம அலுவலர் பிரிவு எல்லைகளைப் பிரிக்கின்ற விவகாரத்திலும் அநீதி நடந்திருக்கின்றது. அதை திருத்துகின்ற விவகாரத்தில்இ அதைப்போன்று ஒரு குழுவை அமைச்சர் நியமித்திருந்தை அறிந்திருந்த முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூட அதை செய்வதாக உறுதியளித்திருந்தார்.

வஜிர அபேவர்தன அமைச்சராக இருந்தபோதும் இதை நாங்கள் அன்றும் சொல்லி இருந்தோம். இன்று பிரதமர் இதற்கு பொறுப்பாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில் இந்த நிர்வாகச் சிக்கல்கள் வேண்டுமென்றே ஒரு விதமான பாரபட்சத்துடன் நடந்து கொண்டததால் ஏற்பட்ட எல்லை பிரிப்பின் காரணமாக நடந்த சிக்கல்கள்தான். எனவே பாரபட்சம் இல்லாத ஓர் எல்லை மீளமைப்பு நடைபெற வேண்டும்.அவ்வாறு நடைபெற்ற பிறகுதான் இவற்றை நாங்கள் தீர்க்க முடியும் என்ற விஷயத்தை நான் தெட்டத்தெளிவாக இங்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

அதை தவிர்த்து இதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்ககள் மீது அல்லது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நியாயமாக, நேர்மையாக இதற்கு ஒரு சாதாரண தீர்வை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்

இதேவேளை, இங்கு பிரதமரிடம் பணிவான வேண்டுகோளொன்றை விடுக்கின்றேன். இப்பொழுது பின் போடப்பட்டிருக்கின்ற தேர்தல்களை அவசரமாக நடத்துவதற்கு ஏதாவது செய்யுங்கள். இதைச் சொல்லும்போது பிரதமர் எழுந்து எந்த நாளும் சொல்லுகின்ற விஷயம் என்று என்னைத்தான் குற்றம் சொல்லுவார். நான்தான் சீர்திருத்தங்களை சரியாக செய்வதற்கு ஒத்துழைக்கவில்லை என்று சொல்வார். ஆனால், உண்மை அதுவல்ல என்று அவருக்கு நன்றாக தெரியும். அவரின் மனசாட்சிக்குத் தெரியும்.

அவர் ஜனாதிபதியுடைய இந்த திருகுதாளங்களுக்கு துணை போகாமல் தயவுசெய்து மிக அவசரமாக தேர்தலை நடத்தி இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு வழிகோலுவார் என்ற விடயத்தை முன்வைத்து விடைபெறுகின்றேன் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அதிகாரிகளின் பயங்கரவாதம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More