
posted 6th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பங்களாதேஷில் பிரகடனப்படுத்தப்பட்ட இராணுவ ஆட்சி
பங்களாதேஷில் இராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்த நாட்டின் இராணுவத் தளபதி வாக்கர் உஸ் - ஷமான் நேற்று (05) மாலை அறிவித்தார்.
இதேநேரம், மாணவர்களின் போராட்டத்தையடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜிநாமா செய்து தலைநகர் டாக்காவிலிருந்து வெளியேறிய இந்தியாவில் அவர் தஞ்சம் புகுந்துள்ளார். தற்போது திரிபுராவில் தங்கியுள்ள அவர், அங்கிருந்து லண்டன் செல்லவுள்ளார் என்று அறிய வருகிறது.
இதைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி வாக்கர் உஸ் - ஷமான் இடைக்கால அரசாங்கத்தை இராணுவம் அமைப்பதாக பிரகடனம் செய்தார். அத்துடன், ஜனாதிபதி, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடப்பதாகவும் விரைவில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேநேரம், பங்களாதேஷில் அனைத்து பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியவர். அவர் பங்களாதேஷ் விடுதலைக்கு காரணமான தேசத் தந்தை எனப் போற்றப்பட்டவர். ஆனால், பங்களாதேஷ் விடுதலையான சில ஆண்டுகளிலேயே முஜிபுர் ரஹ்மானும், அவரின் குடும்பத்தினரும் சொந்த நாட்டு இராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது ஷேக் ஹசீனாவும், ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். ஆட்சியிலிருந்த ஷேக் ஹசீனாவும், ரெஹானாவும் சொந்த நாட்டு மக்களின் புரட்சியினார் சொந்த நாட்டை விட்டே தப்பி ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)