
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திராய்க்கேணி படுகொலை - உணர்வுபூர்வ நினைவேந்தல்
அம்பாறை - திராய்க்கேணியில் இராணுவம், முஸ்லிம் ஊர்காவல் படைகளால் படுகொலை செய்யப்பட்ட 54 அப்பாவித் தமிழ் மக்களின் 34ஆவது நினைவுதினம் நேற்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
படுகொலை இடம்பெற்ற முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துரையப்பா காத்தவராயன் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆலயத்தில் விசேட பூசை நடைபெற்றது.
தொடர்ந்து, படுகொலை சம்பவத்தில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமது நினைவுகளை மீட்டி உரையாற்றினர்.
கடந்த 1990 ஓகஸ்ட் 6ஆம் திகதி திராய்க்கேணியை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். அங்கு நுழைந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் குண்டர்கள் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த 54 பொதுமக்களை சுட்டும் - வெட்டியும் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த வன்முறையின்போது தமிழ் மக்களுக்கு சொந்தமான வீடுகள் எரியூட்டப்பட்டன. திராய்க்கேணியிலிருந்து இடம்பெயர்ந்து காரைதீவு அகதிமுகாமில் தஞ்சமடைந்த பொதுமக்கள் மீண்டும் 4 ஆண்டுகள் கழித்தே சொந்த இடம் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)