
posted 8th November 2021
அரசாங்கம் அதன் அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி, இது சிங்கள- பௌத்த நாடு என்று நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அதன்பிரகாரம் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் பௌத்த சிதைவுகள் இருக்கின்றன என்று கூறி முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வாராய்வுகளும் இலங்கையை தனிச் சிங்கள - பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்தும் முன்நகர்வேயாகும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலையில் அண்மைக்காலமாகவே இந்துக்கோவில் என்ற ரீதியில் பூசைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், முன்னர் அங்கு பௌத்த விகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டன என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க கூறியிருந்தார்.
இதேவேளை காரைநகர் பகுதியில் பௌத்த தொல்பொருள் சிதைவுகள் காணப்படுகின்றன எனக் கூறி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர். இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இவை தொடர்பில் கருத்துரைத்த போதே சி. சிறீதரன் எம். பி. மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
அரசாங்கம் அதன் அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி, இதுவோர் சிங்கள பௌத்த நாடு என்று நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே, தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் பௌத்த சிதைவுகள் இருப்பதாகக்கூறி முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வாராய்வுகளும் இலங்கையை தனிச் சிங்கள -பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்துவதற்கான முன்நகர்வேயாகும். வரலாற்று ரீதியான சான்றாதாரங்களின் அடிப்படையில் நோக்குகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாகர் வழிவந்த தமிழர்களே பூர்வீக குடிகளாக வாழ்ந்திருக்கின்றார்கள்.
அதுமாத்திரமன்றி வரலாற்றைப் பொறுத்தமட்டில் ஆரம்பகாலங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவ்வாறிருக்கையில் மஹிந்த தேரர், சங்கமித்தை போன்றோரின் இலங்கைக்கான வருகை உள்ளடங்கலாக சில குழுக்களின் வருகையைக் காரணங்காட்டி, இலங்கையை ஒரு சிங்கள - பௌத்த நாடாக நிறுவ முயற்சிக்கின்றார்கள்.
மறுபுறம் கடந்த காலங்களில் வரலாற்றாசிரியர்களாலும் தொல்லியலாளர்களாலும் எமது நாட்டின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ரீதியான ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்வுகளுக்குச் சமஅளவிலான ஆய்வுகள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை.
அதுமாத்திரமன்றி தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் குறித்த தொல்லியல் சான்றாதாரங்களையும் கருத்துக்களையும் வெளியிடுவதற்குப் பலரும் தயங்குகின்றார்கள். மறுபுறம் இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களால் எழுத்தப்படும் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களில் உண்மையான தகவல்கள் திரிபுபடுத்தி எழுதப்படுகின்றன. ஆகவே எமது அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளின்போது நாம் இவ்விடயங்கள் குறித்தும் கரிசனை கொள்ளவேண்டியிருக்கின்றது - என்றார்.

எஸ் தில்லைநாதன்