சைவ வணக்க ஸ்தலங்களுக்கு வணங்கத் தடை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

திருக்கோணேசுவரர் ஆலய நிர்மாணப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் விடயம் தொடர்பில் உடனடியாக தொல்பொருள் அமைச்சின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானய தெரிவித்தார் என தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் கூறினார்.

தொல்லியல்துறை பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானவுக்கும், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆகியோருக்கும் இடையில் சனிக்கிழமை (28) விசேட சந்திப்போன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன், முக்கியமாக கீரிமலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் மூன்று கோவில்கள் நீண்ட காலமாக பூசை வழிபாடுகள் இடம்பெறாது உள்ளன. எனவே, அந்த மூன்று கோயில்களிலும் உடனடியாக பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்.

அதேபோல் கீரிமலையில் சமாதிகள் சிலவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றையும் பெற்றுத் தருவதற்கு உதவவேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததோடு, திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் திணைக்களத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூறினோம். தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் இந்த விடயத்தை உடனடியாக அமைச்சு மட்டத்துக்கு தெரியப்படுத்தி தீர்வை தான் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், முல்லை தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை நீண்ட காலமாக சைவ மக்களால் வணங்கப்பட்டு வந்த நிலையில் வேறு சில கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றன. எனவே, அந்த விடயங்களை நிறுத்தி உரிய தீர்வை பெற்று தரவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும் திருகோணமலை விடயம் தொடர்பில் உடனடியாகத் தான் அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வைப் பெற்று தர முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார் என்றார்.

சைவ வணக்க ஸ்தலங்களுக்கு வணங்கத் தடை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)