சில செய்தித் துளிகள்
சில செய்தித் துளிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

சில செய்தித் துளிகள்

வவுனியா நகரில் உள்ள இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகவுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் வர்த்தக நிலையங்களும் அதிகமாகவுள்ளன.

இப் பகுதியில் மரம் ஒன்றின் கீழ் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பல வருடங்களாக அப் பகுதி வர்த்தகர்களும், வீதியால் செல்வோரும் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள வன்னி பௌத்த இளைஞர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக வீதியில் செல்வோர் தரிசிக்கும் வகையில் புதிதாக பீடம் நிறுவப்பட்டு புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு, மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த புத்தர் சிலை உள்ள பகுதியில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் தொல்பெருள் திணைக்கள பிராந்திய காரியாலயத்தில் வீதியில் செல்வோர் காணக்கூடியதாக ஏற்கனவே புத்தர் சிலை உள்ள நிலையில் தற்போது புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா-மன்னார் வீதியில் இயங்கி வரும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டு பிரித்தோதுதல் இடம்பெற்றிருந்தது.

மேலும், இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பாக உள்ள பிள்ளையார் ஆலயத்தில் காணப்பட்ட பிள்ளையார் சிலை ஜனவரி 23 ஆம் திகதி காணமல் போயிருந்த நிலையில் மீள பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களாலும், வர்த்தகர்களாலும் வழிபடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழக அரசினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகளை வழங்குவதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்;

இன்னும் எங்களுக்கு பொதிகள் வந்து சேரவில்லை. அதேபோல் பால்மாவை பொறுத்தவரை 3,964 குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தெரிவுகள் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன.

உண்மையில் 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியானவர்களாக இருக்கின்றன. ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டது 15,857. ஆகவே இதற்குள் அவர்களை தெரிவு செய்து வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம்.

அந்த தெரிவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எங்களுக்கு பொருட்கள் வந்து சேரும் பட்சத்தில் அதனை நாங்கள் அவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றோம் என்றார்.


சில செய்தித் துளிகள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மன்னாரில் எரிபொருள் நிலையங்களில் அமைதியை சீர்குழைக்கும் வெளி மாவட்டத்தவர்.

மன்னார் பகுதியில் திட்டமிடப்பட்ட முறையில் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வரும்பட்சத்தில் சுமூகமான முறையில் எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரால் அமைதியை சீர்குழைக்கும் விதத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை (24.05.2022) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் மன்னார் மாவட்டத்தின் மக்கள் பஞ்சம் தாண்டவமாடும் காலத்தில் எவ்வாறு ஈடு செய்வது எனவும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை எவ்வாறு தற்பொழது நிவர்த்தி செய்யப்படுகின்றது எனவும் எதிர்காலத்திலும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடப்பட்டது

இதன்போது இங்கு தெரிவிக்கப்பட்டதாவது மன்னாருக்கு ஏனைய மாவட்டங்களைவிட ஓரளவு திருப்திகரமான முறையில் எரிபொருட்கள் வரவழைக்கப்பட்டு திட்டமிட்டவாறு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும்

பல கஷ்டங்கள் இருந்தாலும் மன்னார் மக்கள் பொறுமையுடன் இருந்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றபோதும் வெளி மாவட்டத்திலிருந்து இங்கு தொழில் நோக்கக்துடன் வரும் ஒரு குழுவினர் எரிபொருள் நிலையங்களில் பிரச்சனைகளை உருவாக்கி குளிர்காய முனைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவ் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பல் கொண்டவர்களின் வாகனம் மற்றும் ஆள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இனிவரும் காலத்தில் இவர்கள் தொடர்ந்து மன்னாரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்பாட்டில் ஈடுபடும்பட்சத்தில் பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு செல்வது எனவும் தெரிவிக்கப்பட்டது.