
posted 24th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கறுப்பு ஜூலைக்காக தமிழரிடம் மன்னிப்பு - தனிப்பட கோரிய நீதி அமைச்சர்
41 வருடங்களுக்கு முன்னர் நடந்த கறுப்பு ஜூலை சம்பவத்துக்காக தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்புக் கோருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று (23) பாராளுமன்றில் உரையாற்றிய நீதி அமைச்சர் கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் ஜனஸாக்கள் தகனம் செய்யப்பட்டமைக்காக அரசாங்கம் என்ற ரீதியில் மன்னிப்பு கோரினார். இதன்போதே நாட்டின் பிரஜை என்ற ரீதியில் கறுப்பு ஜூலை கலவரத்துக்காக மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார்.
மேலும், “1983 ஜூலை 23 ஆம் திகதி இலங்கைக்கு கரும்புள்ளியாகக் காணப்படுகிறது. 41 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த சம்பவங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தின. அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை. இருப்பினும், நாட்டின் பிரஜை என்ற ரீதியில் தமிழர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்றார்.
1983 ஜூலை 23ஆம் திகதி கொழும்பில் திட்டமிட்ட ரீதியில் பேரினவாத கும்பலால் நடத்தப்பட்ட வன்முறைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வெட்டியும் - எரித்தும் - சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியும் கொல்லப்பட்டனர். பலர் அவயவங்களை இழந்தனர். பல பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் உடைமைகள், சொத்துகளை இழந்து தென்னிலங்கையிலிருந்து துரத்தப்பட்டார்கள். இந்த சம்பவத்துக்கு அரசாங்கம் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)