
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடகவியலாளர் இசைப்பிரியன் திடீர் மறைவு
ஊடகவியலாளரும் சமூகசெயல்பாட்டாளருமான இசைப்பிரியன் என்று அறியப்பட்ட அச்சுதநாயர் சேகுவேரா (வயது 38) நேற்று (25) வியாழக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் தொழில் நிமித்தம் நண்பருடன் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று அவர் காலமானார்.
வவுனியாவை சேர்ந்தவரான இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுசரணையில் இயங்கிய புனிதபூமி இல்லத்தில் வளர்ந்தவர். பாடசாலை கல்வியை முடித்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் வெளியீட்டு பிரிவு, தமிழீழ தேசியத் தொலைக்காட்சி என்பவற்றில் பணியாற்றியிருந்தார்.
2009 போர் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்ற இவர் நிமிர்வு, சமூகம், எழுநா ஆகிய ஊடகங்களில் பணியாற்றியிருந்தார். இவர், பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் கட்டுரையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் தடம் பதித்ததுடன், ஆவணப்பட, குறும்பட தயாரிப்பாளராகவும் செயல்பட்டிருந்தார். இதேநேரம், வவுனியா பிரஜைகள் குழுவிலும் அங்கம் வகித்திருந்தார்.
இசைப்பிரியனின் சகோதரனான செஞ்சுடர் தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனையின் பயிற்சி ஆசிரியராக இருந்தவர். இவர் இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
இசைப்பிரியனின் தாயார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் காலமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)