
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இனவாத நோக்கத்திலேயே ஜனஸாக்கள் எரிக்கப்பட்டன - சஜித் பிரேமதாஸ
கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் மத உரிமைகளை பறிக்கும் இனவாத நோக்கத்துடன் ஜனஸாக்களை எரித்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கம்பஹாவில் நேற்று (21) நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் கல்வியறிவு இல்லாத ஒரு முட்டாள் கூட்டம், முஸ்லிம் சமூகத்தின் கலாசார மற்றும் மத உரிமைகளை தடுத்து தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் முட்டாள்கள்போல் நடந்து கொண்டனர். கோவிட் மரணம் ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.
கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் மத உரிமைகளை பறிக்கும் இனவாத நோக்கத்துடன் ஜனஸாக்களை எரித்தனர். உலக சுகாதார ஸ்தாபனத்தை பார்க்கிலும் புத்திசாலிகள் என்ற மமதையில் செயல்பட்டனர். இது அறிவில்லாத செயல்பாடாகும். ஜனாஸா எரிப்பு என்பது முட்டாள்களின் முட்டாள்தனமான தீர்மானமாகும். எமது நாட்டின் ஆட்சியாளர்கள் முஸ்லிம் மக்களை ஒடுக்கி, இனவாதத்தையும் மதவாதத்தையும் தலைதூக்கி செயற்பட அனுமதித்து, முட்டாள்கள் போல் தீர்மானங்களை எடுத்து, முட்டாள்தனமான நடந்து கொண்டனர்.
இதன் காரணமாக, எமது நாட்டில் தரமான சிறந்த கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வியின் மூலம் இனவாதம், மதவாதம், தீவிரவாதம் ஒழிக்கப்படும். சிங்கள சமூகமோ, தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ, பர்கர்களோ, தீவிரவாதப் போக்கை கடைப்பிடிப்பார்களானால் அதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். எல்லா சமூகத்தையும், எல்லா மதத்தையும், எல்லா இனத்தையும் மதிக்கும் நாகரிகம் மிக்க குடிமக்களை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இஸ்லாமிய மக்களை, முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து எடுக்கப்பட்ட சகல விடயங்களுக்கும் சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் முன் பதில் அளிக்க வேண்டும். இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இங்கு இடமில்லை. இந்த பிரிவினைகளை சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும். இனவாதம் என்பது விஷக்கிருமியாகும். இந்த புற்றுநோயை சமூகத்திலிருந்து இல்லாமல் செய்ய வேண்டும். நாடு பட்டினி வாடிய போது, வரிசைகளில் இருந்த போது மத அடிப்படையில் பிரித்து பார்க்கவில்லை. அனைவரும் ஒன்றாக இருந்தோம். பட்டினி மத பார்த்து வருவதில்லை. எனவே, வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்க இன, மத ஒற்றுமை அத்தியாவசியம் என்றும் அவர் கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)