அனுமதியின்றி இயங்கும் சுத்திகரிப்பு நீர்விற்பனை நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சுத்திகரித்த குடிதண்ணீர் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நேற்று திங்கள் அன்று நடைபெற்றது.

அதன்போது , மாநகர சபை உறுப்பினர் வ. பார்தீபன் “மாநகர சபை எல்லைக்குள் அனுமதி இன்றி சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனை நிலையங்கள் பல இயங்கி வருகின்றன. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ” என கோரி பிரேரணையை ஒன்றை சபையில் முன் வைத்தார்.

அதனை சபை ஏக மனதாக ஏற்றுக்கொண்டதுமல்லாமல் தீர்மானமாகவும் நிறைவேற்றியது. மேலும் நாடு கொறனாவின் பின்பு சகஜநிலைக்கு வரும்போது, நீதிமன்ற நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் இந்நிலையங்கள் மேல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை , சுத்திகரிக்கப்பட்ட நீரினை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் எந்தவிதமான அனுமதியையும் பெறாமலே நீரை விற்பனை செய்து வருகின்றன. அந்த நீரின் தரம் குறித்து எவரும் சான்று வழங்கியதாகவும் தெரியவில்லை. அத்துடன், நீர் வடிகட்டப்படுவதனால், கனியுப்புகள் குறைந்த நீரையே இந்நிலையங்கள் விற்பனை செய்து வருகின்றன. யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்கியமாக நிலத்தடி நீர் ஆதாரம் மட்டுமே உண்டு.

அனுமதியின்றி இயங்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஒரு லீற்றர் சுத்திகரிக்கப்பட்ட நீரை பெறுவதற்காக சுமார் 4 லீற்றர் நீரை விரயம் செய்கின்றன.
நீரை வீண் விரயமாகாது தடுப்பதாக கூறிப் பலர் மீண்டும் கிணற்றுக்குள் அந்த நீரை விடுகின்றனர். அது மிகவும் ஆபத்தானது

ஏனெனில் மழை பெய்து நிலத்தில் தேங்கும் நீர் கற்பாறைகள் ஊடாக வடிகட்டப்பட்டு நிலத்தடி நீருடன் கலக்கின்றது. ஆனால் இவர்கள் நீர் சுத்திகரிப்புக்கு எடுத்த நீரில் விரயமாகும் நீரை மீள கிணற்றுக்குள் விடுவதனால் அது கிணற்று நீரை மாசுபடுத்துவதுடன் நிலத்தடி நீர் நிலைகளையும் மாசுபடுத்துகின்றது. இதனால் யாழ்ப்பாணம் குடிதண்ணீருக்கு பாரிய ஆபத்தை எதிர்நோக்கும் அபாயம் காணப்பட்டது.

இப்படியான பல காரணங்களின் நிமித்தம் பல தரப்பினராலும் குடிதண்ணீர் விற்பனை நிலையங்கள் தொடர்பில் சுட்டிக்
காட்டப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் யாழ். மாநகர சபையில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுமதியின்றி இயங்கும் சுத்திகரிப்பு நீர்விற்பனை நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்