விவசாயிகளும், மீனவர்களும் 17ஆம், 18ஆம் நீதி கோரி போராட்டம் நடத்த தீர்மானம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்னைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். குறிப்பாக தென் பகுதியிலும் இந்தப் பிரச்னையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென் பகுதியில் அரசுக்கு எதிராக எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விவசாய அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல. அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதை கருத்திற் கொண்டு வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் முன்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 28 கமநல சேவைநிலையங்கள் இருக்கின்றன. அனைத்து நிலையங்களுக்கு முன்னாலும் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சமூகப் பொறுப்போடு சமூக இடைவெளியை பின்பற்றி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரே நேரத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

தெற்கில் உள்ள ஏனைய எதிரணி அரசியல் தலைவர்களுடன் பேசி உள்ளோம். அவர்களும் தங்கள் பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்னை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக தமது பகுதியில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதாவது எமக்கு பசளை கிடைக்கும் வரை இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் வடக்கு மீனவர்கள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளினால் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்துவதற்கு ஏற்கனவே சட்டமூலம் இயற்றப்பட்டு உள்ள நிலையில் அதனை அரசு நடைமுறைப்படுத்த தயங்குகின்றது. குறிப்பாக கடற்தொழில் அமைச்சராக ஒரு தமிழர் இருந்தும்,அவர் அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் இலகுவான விடயம். ஆனால் அவர் அதனைச் செயற்படுத்தாதன் காரணமாக இந்திய இழுவைப் படகுகளின் தொல்லை வடக்குப் பகுதியில் மீனவர்களை பெரிதாக பாதிக்கின்றது.

எனவே குறித்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் இருந்து பருத்தித்துறைக்கு கடல் வழியாக வந்து அமைச்சருக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம். அனைத்து போராட்டங்களுக்கும் எமது மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்-என்றார்.

விவசாயிகளும், மீனவர்களும் 17ஆம், 18ஆம் நீதி கோரி போராட்டம் நடத்த தீர்மானம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்