இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும் – தர்மலிங்கம் சித்தார்த்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

“புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும். தெய்வீகன், அப்பன் போன்றோர் நேரடியாக காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவர்களை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் நான் தற்போது கூற விரும்பவில்லை. அது தமிழரசுக் கட்சிக்கு நல்லதல்ல.”

- இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

தான் உள்ளிட்டவர்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொது வெளியில் பேசப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரிடம் நான் தெரிவித்தேன். கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைக்கும் விதமாக சிறிதரன் உள்ளிட்டவர்கள் கூறிவரும் கருத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பில் விசாரிப்பதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் இரா.சம்பந்தன் கூறியிருக்கின்றார். நாங்கள் ஏதோ காட்டிக்கொடுத்தோம், துரோகம் செய்தோம் என்ற ரீதியில் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

சுமந்திரன் ஒருதடவை கூறியிருந்தார், அவருடன் நாங்கள் பேசி சில விடயங்களை சுமூகமாக தீர்த்திருக்கிறோம். சிறிதரனைப் பொறுத்தவரை இதனை அடிக்கடி கூறுவார். அதேபோல தேர்தல் காலத்தில் மிகவும் கூடுதலாகக் கூறுவார்.

ஆனால் நெடுங்கேணியில் அப்பன், தெய்வீகன் என்ற இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் யுத்தம் முடிந்து ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குப் பின்னர் யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்?அவர்கள் மாத்திரமல்ல வேறு சிலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அந்த அந்த நபர்களை யார் காட்டிக் கொடுத்தார்கள், எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள், ஏன் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள் என்பதை பகிரங்கமாக நான் கூறினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லதல்ல. தமிழரசுக்கட்சிக்கும் நல்லதல்ல. அடுத்ததாக அது நிச்சயமாக மக்களுக்கும் நல்லதல்ல.

எங்களை பொறுத்தவரை நாங்கள் காட்டிக் கொடுக்கவில்லை. எந்த காலத்திலும் காட்டிக் கொடுக்கவில்லை. எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்,வேறு ஆயுத குழுக்களுக்குமிடையில் ஆயுத வழியில் போராட்டங்கள் இடம்பெற்றமை மக்கள் அனைவரும் அறிந்த விடயமே. நீண்ட காலமாக ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றன. நாங்கள் சண்டை பிடித்திருக்கின்றோம்.

இங்கு மாத்திரமல்ல உலகில் உள்ள அனைத்து ஆயுத விடுதலைப் போராட்டங்களிலும் இவை இடம் பெற்றிருக்கின்றன. அதற்குப் பின்னர் ஜனநாயக வழியில் நாங்கள் இறங்கியுள்ளோம்.

எனினும் தெய்வீகன், அப்பன் போன்றோர் நேரடியாக காட்டிக் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது மக்களுக்கு தெரியும். அவர்களை யார் காட்டிக் கொடுத்தார்கள் என்பது தொடர்பில் நான் தற்போது கூற விரும்பவில்லை -என்றார்.

இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும் – தர்மலிங்கம் சித்தார்த்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்