யாழ்/ஆரியகுளம் அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்புகளும் இல்லை- யாழ். மேயர் வி.மணிவண்ணன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
யாழ்/ஆரியகுளம் அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்புகளும் இல்லை- யாழ். மேயர் வி.மணிவண்ணன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ். மாநகர சபையின் மேயர் வி.மணிவண்ணன்

யாழ்ப்பாணம், ஆரியகுளம் அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை; உட்புகுத்தப்போவதுமில்லை என்று யாழ். மாநகர சபையின் மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

ஆரியகுளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக நேற்று ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஊடகங்களுக்கும் சமூகவலைத்தள நண்பர்களுக்கும் நன்றிகள். செய்திகளில் தொடர்ச்சியாக என்னைப் பற்றி எழுதி எனது பெயரை மக்களின் மனங்களில் நிலைத்து நிற்க உதவியுள்ளீர்கள்.

பத்திரிகையாளர்களிடமும், சமூக வலைத்தள எழுத்தாளர்களிடமும் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். உங்களுடைய எழுத்துக்கள் பிரதேச மக்களுடைய அபிவிருத்தியை பாதிக்காததாக இருக்க வேண்டும். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் அதனை நான் கண்டுகொள்ளமாட்டேன். ஆனால், என்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியை பாதிக்குமாறு எழுதாதீர்கள்.

ஆரியகுளம் புனரமைப்பு என்பது என்னால் தயாரிக்கப்பட்ட திட்டம். அதில் என்ன உள்ளன என்பதைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளோம். ஆரியகுளம் அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை; உட்புகுத்தப் போவதுமில்லை.

நான் மேயராக இருக்கும் வரை குளத்தில் எந்தவொரு மதமும் பிரதிபலிக்க இடமளிக்கப்படமாட்டாது. இது தொடர்பில் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் அச்சப்படும் வகையில் போலியான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகம் மற்றும் சமூக வலைத்தள எழுத்தாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

விகாராதிபதியால் அனுப்பப்பட்ட கடிதத்தில் புத்தர் சிலை பற்றி எதுவும் கூறவில்லை. மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது பற்றியே கூறப்பட்டிருக்கின்றது.

ஒரு கடிதம் வந்தால் அதனை மாநகர சபைக்கு விடுவதுதே என்னுடைய வழமை. நாவலர் மண்டப விவகாரத்திலும் அதையே செய்தேன். நான் தனித்து முடிவெடுக்க இது என்னுடைய சொத்தல்ல. அதைச் சபையே தீர்மானிக்க வேண்டும். இதை என்னால் நிராகரிக்க முடியும். ஆனாலும், நான் நிராகரிக்காமல் அதைச் சபைக்கு விடுவதே வழமை. மத நல்லிணக்க மண்டபம் அமைக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் உடனடியாக ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு, ஆணையாளர் ஊடாக செயலாளருக்கு அனுப்பப்பட்டது.

கூட்ட நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது செயலாளரே. இந்தக் கடிதம் அடுத்த சபையில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்போது, "மதச்சார்பற்ற இடமாகத் தொடர்ந்தும் ஆரியகுளத்தைப் பேணுவதுடன் மக்களுக்கான பொழுதுபோக்கு மையமாகப் பேணப்பட வேண்டும்" என்று நான் தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோளை விடுப்பேன். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் சபையின் வேலை.

இப்போது ஆரியகுளம் பகுதியில் முதலாம் கட்ட அபிவிருத்திப்பணிகள் இடம்பெறுகின்றன. முதலாம் கட்டமாக நடைபாதை மற்றும் குளத்தைச் சுற்றி கம்பி வேலியடைத்தல் என்பன இடம்பெறும். இரண்டாம் கட்டப் பணிகளுக்குரிய நிதிகளை நன்கொடையாளர்கள் தர முன்வந்தால் அபிவிருத்திப் பணிகள் தொடரும்.

இப்போது ஆரியகுளம் பற்றி முகநூலில் எழுதுபவர்கள் நாவற்குழியில் விகாரை கட்டப்பட்டபோது எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. டிசம்பருக்குப் பின்னர் நாங்கள் அதிகாரத்தில் இருக்கமாட்டோம். அதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டால் அதனை அரசியல்வாதிகளும் சமூக ஆவலர்களுமே தடுக்க வேண்டும்" - என்றார்.

யாழ்/ஆரியகுளம் அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்புகளும் இல்லை- யாழ். மேயர் வி.மணிவண்ணன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்