மு.கா.வில் பிளவை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளுக்கு கிழக்குப் போராளிகள் துணை போகமாட்டார்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மு.கா.வில் பிளவை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளுக்கு கிழக்குப் போராளிகள் துணை போகமாட்டார்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.ஜலால்தீன்

ஊடக அறிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளுக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எமது கட்சிப் போராளிகள் ஒருபோதும் துணை போகமாட்டார்கள் என அக்கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேற்படி மத்திய குழு சார்பாக அதன் செயலாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.ஜலால்தீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

சமீப காலமாக எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில், கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் சவால் விடுக்கப்படுவதாக வெளியிடப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

முஸ்லிம் சமூகத்தை இந்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சிறுபான்மையினரும் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் குறித்தும் தேச நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் மிகத்துணிச்சலோடு குரல் எழுப்பி வருகின்றார் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலும் தென்னிலங்கை பெரும்பான்மை சமூகத்தினருடனான நல்லுறவுக்குமான ஓர் இணைப்புப் பாலமாக திகழ்கின்ற ஒரே தலைமையாக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.

எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை ஸ்தாபித்தது தொடக்கம் 2000 ஆம் ஆண்டு மரணிக்கும் வரை தனது அரசியல் பயணத்தில் இது போன்ற பல சவால்களை எதிர்கொண்டு, முறியடித்தமை இக்கட்சிக்கு ஒன்றும் புதிதான விடயமல்ல. அவ்வாறே ஸ்தாபகத் தலைவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து ரவூப் ஹக்கீம், இக்கட்சியை பொறுப்பேற்று இன்றுவரை பல்வேறு கட்டங்களில் ஏற்பட்ட பாரிய சவால்களுக்கு எல்லாம் தைரியமாக முகங்கொடுத்து, அச்சவால்களையெல்லாம் வெற்றிகொண்டு கட்சியை மிகவும் கட்டுக்கோப்புடன் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

மு.கா.வில் பிளவை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளுக்கு கிழக்குப் போராளிகள் துணை போகமாட்டார்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தலைவர் ரவூப் ஹக்கீம்

மட்டுமன்றி, கட்சிக்குள்ளேயும் வெளியேயும் ஜனநாயக ரீதியாக மாற்றுக் கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் சுதந்திரமாக வெளியிடுகின்ற உரிமையைக் கூட வழங்கி, அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற ஒரு சிறப்பம்சம் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் காணப்படுகின்றது.

இப்படி அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியாகத் திகழ்கின்ற எமது கட்சியையும் அதன் தலைமைத்துவத்தையும் பலப்படுத்த வேண்டிய கடப்பாட்டை எமது கட்சிப் போராளிகள் கொண்டிருக்கிறார்கள். இது விடயத்தில் அவர்களிடம் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கட்சியில் பிரிவினையைத் தோற்றுவிக்க எத்தனிக்கும் வெளிச்சக்திகளின் தூண்டுதல்களுக்கு எமது போராளிகள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள் என்பது திண்ணம்.

இது கட்சியையும் தலைமையையும் மலினப்படுத்துவதற்கான தருணமல்ல. இந்த நாட்டில் இன்று எமது சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற இன ரீதியான அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்குமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

"கருத்து முரண்பாடெனும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழித்து விடாமல் பரஸ்பரம் ஒற்றுமையுடன் உரிமைக்காக ஒன்றிணையுங்கள்" என்று எமது மறைந்த தலைவர் அஷ்ரப் கூறிச் சென்ற அன்பான வேண்டுகோளை எவரும் உதாசீனம் செய்து, சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த துணைபோய் விடக்கூடாது என்பதில் போராளிகள் தெளிவாகவே இருக்கின்றனர். ஆகையினால், எமது கட்சியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் எவையும் நிச்சயம் பலிக்காது என்பதை சம்மந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும்- என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.கா.வில் பிளவை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளுக்கு கிழக்குப் போராளிகள் துணை போகமாட்டார்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்