முசலியில் அடிக்கடி சூறையாடப்படும் பிள்ளையார் சிலை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மதங்களுக்கு எதிரான வன்முறைகள் சமூகத்தில் எதிர்பாராத விதமான பாரிய விளைவுகளுக்கு வித்திட்டு ஒற்றுமையை சீர்குலைக்கும் எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில் உள்ள பாசித்தென்றல் குளத்தடி பாலைமரத்தடிப் பிள்ளையார் ஆலயத்தில் காணப்பட்ட பிள்ளையார் திருவுருவம் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனது கண்டன அறிக்கையில்;

பத்து மாதங்களுக்கு முன்னர் மத வெறியர்களால் உடைத் தெறியப்பட்ட முசலி-பாலைமரத்தடிப் பிள்ளையார் திருவுருவம் மீண்டும் 07/10/2021 அன்று மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக உருத்திர சேனை அமைப்பினால் சிலாவத்துறை விகாராதிபதியின் பங்கேற்புடன் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலை காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடாகும்.
வடக்கில் அண்மைக் காலமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்து ஆலயங்கள் திட்டமிட்டு இடிக்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிலைகள் திருடப்படுவதும் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றது.

மதங்களுக்கு எதிராத வன்முறைகள் அடியோடு நிறுத்தப்பட வேண்டும். மத சம்பிரதாயங்களுக்கு மதிப்பளியுங்கள்.அதுவே நாட்டில் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முசலியில் அடிக்கடி சூறையாடப்படும் பிள்ளையார் சிலை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்