posted 21st November 2021
தவறான புரிதல்களை தவிர்க்கும் முகமாக வடக்கு - கிழக்கு ஆயர் மன்றம் தமிழ்த் தேசியம் சார் விடயங்களில் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய சமயத் தலைவர்களோடும் சிவில் சமூக அமைப்புக்களோடும் நெருக்கமான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணும் என்று எதிர்பார்ப்பதாக நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள் துறவிகள் அமைப்பு வடக்கு, கிழக்கு அமைப்பு தெரிவித்துள்ளது.
நவம்பர் மூன்றாவது சனிக்கிழமையை போரில் கொல்லப்பட்டோரை நினைவு கூருமாறு வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் விடுத்த அழைப்பு பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள் துறவிகள் வடக்கு - கிழக்கு அமைப்பு நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அருட்பணி. சா. ம. செல்வரட்ணம் அ. ம. தி., அருட்பணி. றோகான் டோமினிக் சி. எம். எவ், அருட்பணி. அ. தேவதாசன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டவை வருமாறு;
அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் வடக்கு - கிழக்கு ஆயர் மன்றம் வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் கத்தோலிக்க மக்களின் கிறிஸ்தவ வாழ்வை பண்பாட்டு மயமாக்கி அதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதையும், ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களின் கூட்டுரிமைகளுக்காக குரல் கொடுப்பதையும், இலங்கை தீவில் நீதியில் அடித்தளமிடப்பட்ட அமைதியை நிலைநாட்டுவதற்காக உழைப்பதையும் நோக்காகக்
கொண்டு செயல்படுகின்றது.
இந்த நிலையில், அண்மையில் அவர்களால் வெளியிடப்பட்ட ‘போரில் இறந்த அனைவரையும்’ நினைவு கூர்ந்து இறை வேண்டல் செய்வதற்கான அழைப்பு தமிழ் தேசியத் தரப்பில் பல எதிர்ப்பலைகளை உருவாக்கியிருப்பதை அவதானித்து நாம் மிகுந்த மனவேதனை அடைகின்றோம்.
ஆகவே ஈழத்தமிழ் மக்களின் விடிவுக்கான கத்தோலிக்க திரு அவையின் தொடர் அர்ப்பணத்தை உறுதி செய்ய பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறோம்.
நவம்பர் மாதம் இறந்த அனைவரையும் இறை வேண்டல் செய்யும் மாதமாக உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் காலம் காலமாக அனுசரிக்கப்படுகின்றது. கல்லறைகளை தரிசிக்கவும், இறந்தோருக்காக வழிபாடு மேற்கொள்வதையும், கிறிஸ்தவ மக்கள் தமது கடமையாக கருதுகின்றனர். இத்தகைய நீண்ட மரபின் ஒரு பகுதியாகவே நாம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தின் வேண்டுகோளை பார்க்கின்றோம். அதற்கு அப்பால் இதற்கு எந்தவித அரசியல் பரிமாணமும் இல்லை என்பதே எமது நிலைப்பாடு.
நவம்பர் மூன்றாவது சனிக்கிழமையில் போரில் இறந்த அனைவருக்காகவும் செபிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதே தவிர நவம்பர் 20 அல்ல. இது அடுத்தடுத் ஆண்டுகளின் திகதிகளில் மாறுபடும்.
மே 18ஐ இதே ஆயர் ன்றம் ஈழத் தமிழ் இனப்படுகொலை நாளென பிரகடனப்படுத்தி நினைவுகூர கடந்த மே மாதத்தில் அழைப்பு விட்டிருந்ததையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறோம். ஆகவே போரில் இறந்த அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வது என்பது தமிழர் நெஞ்சங்களில் வாழும் மாவீரர்களையும், இன அழிப்புக்குள்ளான தமிழ்மக்களின் தியாகங்களையும் சமரசம் செய்வதாகாது. ஏற்கனவே தமிழ் மக்கள் நினைவுகூருகின்ற நாட்களில் அவர்களை நினைவுகூர்வது வரலாற்றுக் கட்டாயம்.
தமிழ்த் தேசியப் பரப்பு மத வரையறைகளை கடந்து ஈழத் தமிழ்மக்களை, ஈழத் தமிழ் தன்மையில் ஒருங்கிணைக்கின்றது. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எமது தமிழ்த் தேசிய ஒற்றுமையை குலைக்க முயலும், ஆபத்து பற்றியும் நாம் அனைவரும் விழிப்பாயிருக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் அண்மையில் அதிகரித்துவரும் மத முரண்பாடுகள் குறித்து விரைந்து செயல்பட்டு நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேண நாம் முன்வரவேண்டும்.
எதிர்காலத்தில் இத்தகைய தவறான புரிதல்களை தவிர்க்கும் முகமாக வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம், தமிழ்த் தேசியம் சார் விடயங்களில் வடக்கு, கிழக்கிலுள்ள ஏனைய சமயத் தலைவர்களோடும், சிவில் சமூக அமைப்புக்களோடும் நெருக்கமான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணும் என எதிர்பார்க்கின்றோம்.
ஈழத்தமிழர்களின் கூட்டு நினைவுகூர்தல் என்பது தமிழ்த் தேசகட்டுமானத்தின் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளது என்பதை நினைவூட்டி, ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான எமது தொடர் அர்ப்பணத்தையும் அனைத்துத் தரப்புக்கும் மீண்டுமொருமுறை உறுதி செய்கிறோம் என்றுள்ளது.
எஸ் தில்லைநாதன்