மன்னாரில் இறப்பு வீதம் அதிகரித்து வருவதனால் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும்படி அறைகூவல். பணிப்பாளர் த.வினோதன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மன்னாரில் இறப்பு வீதம் அதிகரித்து வருவதனால் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும்படி அறைகூவல். பணிப்பாளர் த.வினோதன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏனைய மாவட்டங்களை விட மன்னாரில் கொவிட் தொற்றாளர்களாக இருந்து மரணிப்பவர்களின் மரண வீதம் குறைவாக காணப்படுகின்றபோதும் இன்றைய நிலையில் மன்னாரில் கடந்த காலங்களை விட இம் மாதம் மரண வீதம் அதிகரித்துள்ளது. தற்பொழுது மன்னார் மக்களின் சுகாதார நடைமுறைகளில் முன்னேற்றம் காணப்பட்டு வருவதுடன் தொடர்ந்து இந் நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (20.08.2021) மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தொடர்ந்து தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் வியாழக் கிழமை (19.08.2021) வரை மொத்தமாக 59,126 பேருக்கு கொவிட் தொற்று நோய்க்கான முதலாவது தடுப்பூசி மருந்துகள் எற்றப்பட்டுள்ளன.

இதில் சுமார் 1300 பேர் கர்ப்பிணி தாய்மார்களாக இருக்கின்றனர். இதேவேளை இரண்டாவது டோஸ் வியாழக்கிழமை மாலை வரை 47,406 பேருக்கு இத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த மாதம் (ஆவணி) மட்டும் இதுவரை கொவிட் தொற்றாளர்களாக 327 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத் தொகையானது கடந்த காலத்தைவிட ஒரு மாத கணக்கில் இதுவே அதிகமான தொற்றாளர்களின் எண்ணிக்கையாக மன்னாரில் காணப்படுகின்றது.

அத்தோடு புத்தாண்டு கொத்தணியோடு தொடர்புடைய 1016 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த அடிப்படையில் இம் மாவட்டத்தில் மொத்தமாக 1368 பேரும் 2021ம் ஆண்டு 1351 நபர்களும் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் மொத்தமாக 1500 பிசீஆர் பரிசோதனைகளும், இதுவரைக்கும் மொத்தமாக 27,400 பிசீஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த மாதம் 86 ஆக காணப்பட்ட மரண வீதம் இந்த மாதம் இம் மரண வீதம் உயர்வடைந்து தற்பொழுது 96 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கை நாட்டின் மரணத்தோடு ஒப்பிடுகையில் இம் மரண வீதம் குறைவாக காணப்படுகின்றபோதும் எமது மாவட்டத்தில் மரண வீதம் அதிகரித்து செல்வதையே இது காட்டுகின்றது.

ஆகவே மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

நோய் அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள் வீட்டிலே தரித்து நிற்காது உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

அத்தோடு தற்பொழுது வீடுகளிலிலேயே வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுவதால் எந்த விதமான அச்சமும் இன்றி நோயாளிகள் அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்து தமது சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இதேவேளை மன்னார் மாவட்டத்திலுள்ள மக்கள் தற்பொழுது சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் முன்னேற்றம் காணப்படுகின்றபோதும் இன்றைய சூழ்நிலையில் இதைவிட கூடுதலான முறையில் அத்துடன் இறுக்கமான முறையில் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து தற்பொழுது நாடு முழுதும் பரவி வருகின்ற டெல்டா தொற்று மன்னார் மாவட்டத்திலும் தாக்கம் செய்வதை தடுத்துக் கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு கேட்டு நிற்கின்றேன் என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் இறப்பு வீதம் அதிகரித்து வருவதனால் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும்படி அறைகூவல். பணிப்பாளர் த.வினோதன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ