
posted 23rd January 2022

அனோஜன்
இந்திய ஜனநாயகப் பேரரசின் 73 வது ஆண்டு குடியரசு தின விழாவை கொண்டாட பாரத தேசமே தயாராகிக்கொண்டு இருக்கிற இவ்வேளையில் 'அந்நியன்' என்று கூறி வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. நட்பு வட்டத்தில் பெருமையோடு உலா வந்த நான் அப்போது முதல் கூனிக்குறுகி தனிமைப்படுத்தப்பட்டவனாக ஆனேன். எனக்குள் ஏற்பட்ட விரக்தியின் வீரியத்தை நிச்சயம் வார்த்ததைகளால் ஒருபோதும் விவரிக்க முடியாது. கல்வியின் மூலம் அகதி நிலையை வெல்லலாம் என்ற கனவுகளோடு படித்த எனக்கு, அந்த நம்பிக்கை பகல் கனவாகவே ஆனது. இன்றுவரை அது என் சமூகத்தில் ஒரு கானல் நீராகவே தெரிகிறது, அது தொடர்கிறது என திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவரான டேவிட் அனோஜன் தெரிவிக்கையில்;
இந்திய ஜனநாயகப் பேரரசின் 73 வது ஆண்டு குடியரசு தின விழாவை கொண்டாட பாரத தேசமே தயாராகிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, குடியாட்சி மலர்ந்த நாளான ஜனவரி 26 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடெங்கும் அனைத்து கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுக்கூரும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மக்களால் மக்களுக்காக என்பதே குடியரசு தத்துவத்தின் கோட்பாடு. இந்தியாவிற்குள் அனைவருக்கும் சம பாதுகாப்பு, வேறுபாடுகள் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை இந்த குடியாட்சி சாசனம் வலியுறுத்துகிறது என்று பாடசாலையில் நடைபெற இருந்த குடியரசு தின விழா பேச்சுப்போட்டிக்காக தயாராகி வந்த எனது 8 வயது மகள் திடீரென சோகமாக இருந்ததால், காரணம் கேட்டால் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால்இ இந்த நிகழ்ச்சியில் தன்னால் இந்த ஆண்டு கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற கவலை அவளை ஆட்கொண்டு இருப்பதை விசாரித்தல் மூலம் அறிந்துகொண்டேன்.
அவளுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இன்றி, அகவை எட்டில், மிட்டாய் வாங்கி சாப்பிடுவதிலும், விடுமுறையை ஜாலியாக சக மாணவர்களுடன் கழிப்பதிலும் தொடங்கிய என் பள்ளி நாட்களை அவள் நினைவூட்டுவதாக இருந்தது.
இலங்கையின் உள்நாட்டு போரின் காரணமாக அங்கு சுதந்திர காற்றை சுவாசம் செய்யும் பாக்கியம் வேரறுக்கப்பட்டு, உயிர்காக்க தஞ்சம் கோரி இந்திய மண்ணில் அடைக்கலாமானவர்களில் நானும் ஒருவன். அகவை எட்டில் ஆரம்பமாகின்றன எனது பள்ளி நாட்கள், பேச்சு மொழியின் நடையை தவிர வேறு எதுவும் வேற்றுமை தெரியாததால் கற்றல் என்பது இனிமையாய் தொடங்கியது.
ஆண்டுகள் செல்லச்செல்ல தினமும் பள்ளியில் நடக்கும் காலை வழிபாட்டில் 'இந்தியா என் தாய்நாடு, இந்தியர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்' என்றும், தேசிய கீதத்தை உணர்வில் கலந்து பாடுவதிலும் ஈர்க்கப்பட்டு, மெல்ல மெல்ல தேசிய உணர்வும் தேச பக்தியும், தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் படிப்படியாக எனது உள்ளத்தில் ஆழமாக பதிகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசத்தில் நானும் ஒருவனாக உணரத்தொடங்கினேன்.
ஆண்டுகள் பல கடந்த பின்பு, மேல்நிலை வகுப்பு பருவத்தில் நடந்த தேசிய தின விழாக்களில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு 'சுதந்திரம் என்பது தூரிகையின் சித்திரமல்ல, அது உதிரங்கள் ஈன்றெடுத்த வரலாற்று சரித்திரம் என்போம்' என்றும் 'வாக்கு என்பது சாமானியனின் வலிமை மிகுந்த பேராயுதம்' என்றும் கவிதை பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தேன். சக மாணவர்கள் மத்தியில் ஒருவித பெருமித உணர்வுடன் வலம் வந்தேன். மற்றவர்களைவிட சிறப்பாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று மூவர்ணக்கொடியை தேடித்தேடி வாங்கி சட்டைப்பையில் குத்திக்கொள்வேன். இதயப்பூர்வமாக அதை நேசிப்பதன் அடையாளமாகவே அது எனக்கு இருந்தது.
கல்லூரியில் பயிலும்போதும் அந்த தேசிய உணர்வு மென்மேலும் வளர்ந்தது.
கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தபின், உடன் படித்த நண்பர்கள் அரசுத்துறை களிலும், தனியார் நிறுவனங்களிலும், மேற்படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கும் செல்லத் தொடங்கினார்கள். எல்லோருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படும்போது என்னை மட்டும் 'அந்நியன்' என்று கூறி வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. நட்பு வட்டத்தில் பெருமையோடு உலா வந்த நான் அப்போது முதல் கூனிக்குறுகி தனிமைப்படுத்தப்பட்டவனாக ஆனேன். எனக்குள் ஏற்பட்ட விரக்தியின் வீரியத்தை நிச்சயம் வார்த்ததைகளால் ஒருபோதும் விவரிக்க முடியாது.
கல்வியின் மூலம் அகதி நிலையை வெல்லலாம் என்ற கனவுகளோடு படித்த எனக்கு, அந்த நம்பிக்கை பகல் கனவாகவே ஆனது. இன்றுவரை அது என் சமூகத்தில் ஒரு கானல் நீராகவே தெரிகிறது தொடர்கிறது.
சிறு சங்கிலியால் கட்டுண்ட யானை தன் பலத்தை அறியாமல் அதற்கு அடிமை ஆவதுபோல், அத்தனை திறமைகளும் இருந்தும் அகதி என்ற அடைமொழியும் சூழலும் தும்பிக்கையின் பலம் அறியா யானையைப்போல் நம்பிக்கை இழந்து நம்மை நாமே குருக்கிக்கொண்டோம்.
கடந்த 32 ஆண்டுகளில், உள்ளூராட்சி தேர்தல், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் என எத்தனையோ தேர்தல்கள் நம்மை கடந்து சென்றுள்ளன. இந்திய தேசமே கொண்டாடும் சிறப்பு வாய்ந்த ஒரு மாபெரும் ஜனநாயக திருவிழாவில் நாம் மட்டுமே விதிவிலக்காக வெறும் பார்வையாளராகவே இருந்து வருகிறோம்.
வாக்குரிமை என்பது ஒரு தனி மனிதனுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற பேராயுதம். தன்னை ஆள்பவர் யார் என்பதை தானே தீர்மானிக்கும் ஓர் வலிமை வாய்ந்த பிரம்மாஸ்திரம் அது. அந்த கடமையைக்கூட செய்ய விரும்பாமல், செய்யாமல் கடந்து போகும் எத்தனையோ பேர் மத்தியில் கையறு நிலையில் நிற்கும் மக்கள் கூட்டமாக நாம் மட்டுமே அதற்காக ஏங்கித் தவிக்கிறோம்.
இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல்கள் மிக முக்கிய இடம்பெறுகின்றன. மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளால் தான் இந்த நாடு வேகமாக வளர்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. தேசத்தின் வளர்ச்சியிலும் நாட்டு மக்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொள்ளாத, மக்கள் விரோத போக்கை ஆளும் அரசுகள் கையில் எடுக்கும்போது, அதை மக்கள் தங்கள் வாக்கு எனும் பேராயுதத்தால் வீழ்த்தி புதிய அரசுகளை அமைத்து வருவது வரலாற்றுக் கண்கூடு.
தனது ஜனநாயக கடமையாக அந்த ஓட்டை செலுத்திவிட்டு வரும் ஒவ்வொருவரும் அதன் அடையாளமாக தங்கள் விரலில் தடவியிருக்கும் கருப்பு மையை பார்க்கும் போதும், பிறருக்கு காண்பிக்கும்போதும், என்னுடைய ஆள்காட்டி விரல் மட்டும் என்னைப்பார்த்து 'நீ யார்? உனக்கு அந்த கடமை இல்லையா?' என்று கேட்கும்போது உரிமை இழந்தவனின் கொதிக்கும் இரத்தம் எரிமலை பிளம்பைவிட வீரியம் மிக்கது என்பதை உணரச் செய்யும்.
தேர்தல் சமயத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் தீவிர பிரச்சாரத்தின்போது கிராமம் கிராமாக, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள். ஆனால், அகதிகள் முகாமை மட்டும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும்போது, நாம் அனைவரும் தீண்டத்தகாதவர்களா? என்று எண்ணத் தோன்றும். வெற்று வாக்குறுதிகளையாவது கொடுத்துவிட்டு போயிருந்தாலும், நம்மையும் சக மனிதர்களாக மதித்தார்கள் என்று சுய ஆறுதல் சொல்லி மகிழ்ந்திருப்போம். தலைவனையும் தலை வணங்க வைக்கும் வலிமையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் ஒவ்வொரு வாக்காளனின் வாக்குக்கும் உண்டு என்பதை அப்போதுதான் உணர முடிந்தது.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குரிமை இருந்தும் அதை செலுத்தாதவர்களின் எண்ணிக்கையை விட, மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் ஓர் புலம் பெயர் சமூகத்தின் வேண்டுதலை, ஏன் அரசுகள் பரிசீலிக்கக்கூடாது? பணத்திற்காக தன் வாக்கை விற்பவன் சட்ட விரோதியா?? வாக்குரிமைக்காக ஏங்கும் ஒரு சமூகம் சட்ட விரோதியா? என்ற கேள்வி ஐயத்துடன் மனதில் தோன்றி மௌனத்துடன் கேட்கத்தோன்றுகிறது.
ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் போதும், வாக்களித்தவர்களை விட வாக்குரிமையற்று இருக்கும் மக்களாகிய நாம்தான் வெற்றி தோல்விகளை அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பவர்கள். நாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால், எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறதோ, அந்தக் கட்சியை இயல்பாகவே வரவேற்கும் மனநிலை கொண்ட மக்கள் கூட்டத்தினராகவே நாம் இருக்கிறோம். ஏனென்றால், அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரத்திலும் இலங்கைத் தமிழர்கள் கண்டிப்பாக ஒரு முக்கிய பேசுபொருளாகவே இடம்பெற்று வருவதே இதற்குக் காரணம்.
அரசியலுக்காக தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும் நாம், அரசியலமைப்பு சட்டத்தில் ஏன் இடம்பெறக்கூடாது? அதற்கான ஒரு வாய்ப்பு உருவாகும் என்றே ஒவ்வொரு ஆட்சியும் மாறும்போது அவர்களை நம்பிக்கையோடு மனதார வரவேற்று இறுதியில் ஏமாற்றம் அடைந்து வந்திருக்கிறோம். நம்பிக்கை வைப்பதும், ஏமாற்றம் அடைவதும், இயலாமையை நினைத்து வருந்துவதும் மட்டுமே எங்களுக்கு முன் இருக்கும் உரிமைகள் என்றாகிப்போயுள்ளது. எல்லாவற்றிக்கும் காலம்தான் ஒரு தீர்வினை உருவாக்கும் என்ற நிலையில், தற்போது அதற்கான ஒரு களமும், காலமும், அரசும் தமிழ்நாட்டில் அமைந்திருப்பது அனைவருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.
டீக்கடையில் வேலை பார்த்த ஒரு சிறுவன் இந்த நாட்டின் பிரதமராக வரும் அளவிற்கு மிக உன்னதமான ஜனநாயக அரசியல் யாப்பை கொண்டுள்ள பாரத தேசத்தில் ஒரு அகதிக்கு வாக்களிக்கும் உரிமையை ஏன் பரிசீலிக்கக்கூடாது? என்பதே எங்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இந்தியாவில் பல்வேறு நாட்டு அகதிகள் இருக்கிறார்கள், அனைவருக்கும் குடியுரிமை வழங்குவது சாத்தியமற்றது என பல்வேறு காரணங்களில் ஒன்றாக இதுவும் சொல்லப்படுகிறது. வரலாற்றுத் தொடர்புகளால், இனத்தால், மொழியால், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டால் என அனைத்தாலும் ஒன்றுபட்டு எந்த ஒரு காரணியாலும் வேறுபடுத்திப்பார்க்க முடியாத விதத்தில் ஒன்றுபட்டு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் வாழும் ஒரு இனத்தை, பிற நாட்டு அகதிகளுடன் ஒப்பிட்டு பார்க்காமல், பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களை துன்புறுத்தலுக்கு உள்ளான மத ரீதியிலான சிறுபான்மையினர் என்று கருதி, எப்படி இந்திய குடியுடிமை வழங்க முன்வந்ததோ, அதே போன்று இலங்கைத் தமிழர்களையும் வரலாற்று ரீதியிலான தொடர்பு உள்ளவர்கள் என்ற ரீதியிலும், துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையின தமிழர்களாகவும் கருதி, மனிதாபிமானத்துடன் இந்த பிரச்சினையை அணுகி, குடியுரிமை சட்டத்தின் ஊடாக வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே எங்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும்.
முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைமுறை மாறும் என்பது நியதி. அந்த விதத்தில், கடந்த முப்பத்தி இரண்டு ஆண்டு கால புலம்பெயர் வாழ்க்கையில் மூன்றாம் தலைமுறையினர் இங்கு பிறந்து அகதி என்ற அடைமொழியுடன் வளரத் தொடங்கியுள்ளார்கள். ஒரு நாட்டில் பிறக்கும் குழந்தை அந்த நாட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், அகதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிலும், கல்விச் சான்றிலும் தேசிய நாட்டவர் என்ற இடத்தில் 'இலங்கைத் தமிழ் அகதி' என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது.
சர்வதேசம் வரையறுத்துள்ள 'அகதிகள்' என்பதற்கான விளக்கக் காரணிகளில் அகதிகளுக்கு பிறக்கும் ஒரு குழந்தை 'பிறப்பாலும் அகதியாகவே கருதப்படுவார்' என்று எங்கும் கூறப்படவில்லை. அப்படி இருக்கையில், இங்கு பிறக்கும் ஒரு குழந்தையை அகதி என்று குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம். ஒருவர் தன் பிறப்பால் எப்படி அகதியாக முடியும்? மத்திய அரசின் சட்ட விளக்கப்படி தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படும் நிலையில், இங்கு பிறந்தவர்களையும் சட்டவிரோத குடியேறிகளாகவா கையாளப்போகிறது?
பல்வேறு விதமான கேள்விகள் மனதுக்குள் தோன்றி மறையும் இவ்வேளையில், 'எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்' என்று சொல்வதுபோல், குடியுரிமை வழங்க இங்கு வாய்ப்புகளே இல்லை என்றும், இலங்கையில் அமைதி நிலவி விட்டது, அங்கு சென்றால் சுபீட்சமாக அனைவரும் வாழலாம் என்றும், வாருங்கள் நாங்கள் உங்களுக்கு அனைத்தையும் செய்து தருகிறோம் என்று சில அமைப்புகள் செய்துவரும் மதிமயக்க வார்த்தைகளை துறவிபோல் தவிர்த்து, அவற்றை பொதுபுத்தியில் ஆய்வுக்குட்படுத்தி, குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இங்கேயே தொடர்ந்து வாழ்வது என்று வைராக்கியத்துடன் முடிவெடுத்து வாழும் மக்களின் உணர்வுகளை யாராவது புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற நீண்டநாள் கவலையில் ஆழ்ந்திருந்தோம்.
அண்மையில், தமிழர்களின் நலன் பேணும் தமிழக அரசு அகதிகள் முகாம்களை 'மறுவாழ்வு முகாம்கள்' என்றும் இலங்கை அகதிகள் என்று குறிப்பிடப்பட்டு வந்தவர்களை 'இலங்கைத் தமிழர்கள்' என்றும் அழைக்க வேண்டும் என்று ஒரு கண்ணியமான அடையாளத்தை நமக்கு கொடுத்திருக்கிறது. குடியிரிமைக்கான சட்ட தீர்வுகள் பற்றி ஆராய சிறப்பு குழுவும் அமைத்துள்ளது; நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதேவிதத்தில், இனிமேல் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றில் 'இலங்கைத் தமிழர்' என்று குறிப்பிட நடவடிக்கை எடுக்கும் என்றும் நம்புகிறோம். அனைவரது சான்றிதல்களிலும் இந்திய குடிமகன் என்று குறிப்பிடும் படியாக தமிழக அரசு முன்னெடுத்துள்ள தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்ற நடவடிக்கையில் வெற்றிபெற்று அனைவரின் கனவும் மெய்ப்பட வேண்டும் என்று நம்புகிறோம்.
நீண்டநேர யோசனையில் ஆழ்ந்து, கடந்துவந்த சம்பவங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டு இருக்கும்போது, மீண்டும் என் மகள் என்னிடம் கேட்கிறாள் 'எப்போ அப்பா பாடசாலை திறக்கும்? எப்போ நான் பேச்சு போட்டியில் கலந்துகொள்வது என்று'?. பொறுமையாக இரு, எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும் என்று எப்படி அவளுக்கு நான் புரிய வைப்பேன்? என்னுடைய கடந்த கால அனுபவங்களின் நீட்சிதான் உன்னுடைய இந்த ஆர்வத்தின் தொடக்கம் என்று!!. வேடிக்கை மனிதர்களாகவே நாம் கடந்துவந்த பாதையில் நீயும் நிராகரிக்கப்படுவதை தடுப்பது காலத்தின் கையிலும் கருணை உள்ளம் கொண்ட இதயங்களின் மனசாட்சிகளிடம் மட்டுமே உள்ளது என்று என் மனதுக்குள் மட்டுமே மௌனமாய் சொல்லி புன்முறுவலை பதிலாக அளிக்கிறேன்..
உலகின் மிகப்பெரிய ஜனநாயகக் குடியரசு நாடு என்ற பெருமையும், உலகிலேயே மிக நீளமான அரசியல் யாப்பைக் கொண்டதுமான அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகள் நமக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அதே அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படும் ஒரு குடிமகனுக்கான அடிப்படைக் கடமைகளை நாம் ஒவ்வொருவரும் கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக மதித்து கடைபிடித்து வருவதை இதற்கான தகுதிகளாக கொண்டு வாய்ப்பளிக்க வேண்டும்.
முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த குடியாட்சி, அகதிகளுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பினை தருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
பாரத மாதாவின் மடியில் தஞ்சம்கோரி அடைக்கலமான எங்களை மனிதாபிமானம் எனும் நீதி தேவதையின் முன் நிறுத்தி தேசிய இனமாக எங்களை அங்கீகரிக்கப் போகிறதா அல்லது தேசிய அவமானமாக தொடர்ந்தும் எங்களை கையாளப்போகிறதா என்பதை காலத்தின் முன்பும், இந்த சமூகத்தின் முன்பும் கேள்விகளாய் முன்வைத்து, அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என இவ்வாறு தனது மனக் குமுறலை தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House