
posted 12th February 2023
நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்ப்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்கள் இணைந்து செயற்பட்டால் நாட்டை வேகமாக முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் எனவும் கூறினார்.
இந்திய அரசின், ஆயிரத்து 350 கோடி ரூபாய் நன்கொடையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ நேற்று சனி (11) முற்பகல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் கொண்டாட நாம் தீர்மானித்தோம். அந்த வேலைத்திட்டத்தை நாம் இந்த கலாசார மையத்திலிருந்தே ஆரம்பிக்கின்றோம். இது எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொடுத்த பரிசு ஆகும். அதனால் அவருக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிப்பதே நான் செய்யும் முதல் விடயம்.
இந்தியாவும், இலங்கையும் முன்னெடுத்து வரும் வேலைதிட்டங்களில் பிரதானமானதொரு அம்சம் இதுவாகும். ஒரு புறத்தில் இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும், மறுபுறத்தில் விசேடமாக திருகோணமாலை துறைமுகத்தின் பாரிய அபிவிருத்தி வேலைதிட்டம் தொடர்பிலும் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.
வலுசக்தி தொடர்பிலும் நாம் பேச்சு நடத்தி வருகின்றோம். அதுபோலவே எமது பொருளாதார நெருக்கடியின் போது இந்த கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நாம் பாராட்டுகின்றோம்.
இக்கலாசார மையம் ஒரு பொதுவான மையமாகும். நான் எப்போதும் கூறுவேன் எம்மிடையேயுள்ள கலாசாரத்தை வேறு பிரிக்க முடியாது என்று. ஒரு நாயணத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியாவாகும்.
எம்மிடமுள்ளது ஒரு கலாசாரம். அதனை நாம் பாதுகாத்து மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதனால் இந்த மையத்தை பொதுமக்களிடம் கையளிப்பதை முன்னிட்டு உங்கள் அனைவர் சார்பிலும் இந்தியாவுக்கும், இந்தியாவின் பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களிடமிருந்து எமது சுதந்திரப் போராட்டத்துக்கு கிடைத்த ஒத்துழைப்புக்காகவே 75ஆவது சுதந்திர தினத்தை நாம் இம்முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானித்தோம்.
யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சி வேலைத் திட்டத்தை தொடர்ந்தே ஹிக்கடுவே சிறி சுமங்கல தேரர் பௌத்த மறுமலர்ச்சியை ஆரம்பித்தார். எனவே ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் எமது சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.
பொன்னம்பலம் இராமநாதனுக்கு நன்றி கூறும் வகையிலேயே வெசாக் தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் தலைவரே பொன்னம்பலம் இராமநாதன் ஆவார். 1915 ஆம் ஆண்டு குழப்பங்கள் நிலவிய காலத்தில் எமது சிங்கள பௌத்த தலைவர்களை பாதுகாத்துக் கொடுத்தவர் பொன்னம்பலம் இராமநாதன் என நான் இவ்விடத்தில் கூற விரும்புகிறேன்.
பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கை தேசிய சபையை உருவாக்கினார். தொழிற்சங்கங்களுக்கு தலைமைத்துவம் தாங்கினார். சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருந்த போதும் துரதிஷ்டவசமாக அவர் 1924ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிலிருந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் எப்.ஆர் சேனாநாயக்க காலமானார்.
அவர் வாழ்ந்திருந்தால் இதை விடவும் வித்தியாசமானதொரு வரலாற்றை நாம் கண்டிருந்திருப்போம். சிங்கள கலையை எமக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தியவர் ஆனந்தகுமாரசுவாமி . அவரின் காலத்திலேயே இது மேம்படுத்தப்பட்டது.
அருணாச்சலம் மஹாதேவாவும் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அது போலவே இந்து தர்மத்தை முன்னேற்றுவதற்கும், கொழும்பு சிவன் கோவிலை கட்டுவதற்கும், இங்கு கோவில்களை உருவாக்கவும் இந்த குடும்பம் உதவி செய்தது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் சிங்களம், தமிழ், பௌத்தம், இந்து ஆகிய பிரிவுகள் முன்னேற உதவி செய்தனர்.
இலங்கையர் சார்பாகவும், யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்கள் சார்பாகவும் அக்குடும்பத்துக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அவர்களைப் போலவே வைத்தியலிங்கம் துரைசாமியையும் எம்மால் மறக்க முடியாது. சுதந்திரத்தைப் பெறுவதற்காக டி.எஸ்.. சேனாநாயக்க அவர்களுக்கு உதவிய அமைச்சர் சி. சுந்தரலிங்கம், அமைச்சர் சி. சிற்றம்பலம், அமைச்சர் நல்லையா ஆகியோரையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூரவேண்டும்.
நாம் ஜி.ஜி. பொன்னம்பலத்தையும் இங்கே நினைவு கூரவேண்டும். நாம் செல்வநாயகத்தையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். அதுபோலவே அமைச்சர் எம். திருச்செல்வத்தையும் நினைவுபடுத்துகின்றோம்.
இந்த தலைவர்களே ஏனைய தலைவர்களுடன் இணைந்து இலங்கையை உருவாக்குவதற்காக பணியாற்றினர். அதன் காரணமாகவே இப்பிரதேசத்தில், இந்த யாழ்ப்பாணத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இந்த அரசாங்கம் தீர்மானித்தது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)