சிங்கள மக்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை புரியத் தொடங்கியுள்ளனரா? - சி.அ. யோதிலிங்கம்

“கோத்தா கோ கம” போராட்டக்களம் தேக்கமடையத் தொடங்கியுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்றமை, அதன் காரணமாக மேற்குலகம் ரணிலைப் பாதுகாக்க முனைந்தமை, அரச சார்பற்ற அமைப்புக்களின் மந்தமான பங்களிப்பு, மார்ச் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறை, அரசாங்கத்தை மட்டும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளையும் பகைக்க முற்பட்டமை, தமிழ் மக்கள் போராட்ட களத்திலிருந்து ஒதுங்கியமை, முஸ்லீம், மலையக தரப்பின் பங்கேற்பில் ஏற்பட்ட தேக்கம் போன்றன இதற்கு காரணமாக இருக்கலாம். பொதுவான ஒரு போராட்டம் தற்போது ஜே.வி.பி, முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிற்சங்க சம்மேளனம் என்பவற்றின் களமாக மட்டும் சுருங்கியது போன்ற தோற்றம் தெரிகின்றது. எனினும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் அதிகரித்து செல்வதற்கு வாய்ப்பு இருப்பதனால் போராட்டக் களம் மீளப்புத்துயிர் பெறலாம்.

போராட்டம் நீண்டுகொண்டு செல்வதால் ஏற்படும் சலிப்பும் தேக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். அண்மைய வரலாற்றில் தொடர் போராட்டமென்றால் புதுடில்லியில் விவசாயிகள் நடாத்திய போராட்டம்தான். இந்திய அரசாங்கம் விதித்த அனைத்து தடைகளையும் தாண்டி போராட்டம் நாளுக்கு நாள் முன்னேறியது. பல நெருக்கடிகள் வந்தபோதும் போராட்டம் வன்முறைப்பக்கத்திற்கு செல்லவில்லை. இறுதியில் இந்திய அரசாங்கம் பணிந்து விவசாயிகளுக்கான எதிரான சட்டங்களை வாபஸ் பெற்றுக்கொண்டது.

தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்டக்களத்திலிருந்து ஒதுங்கியிருந்தனர். சுமந்திரன், சாணக்கியன் போன்றோர் சில முயற்சிகளைச் செய்தாலும் அது பெரியளவிற்கு வெற்றியளிக்கவில்லை. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடாத்திய தீப்பந்த போராட்டத்தில் நூறுபேர்கூட கலந்துகொள்ளவில்லை. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மட்டுமல்ல தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களைக் கூட அங்கு காணவில்லை. கூட்டமைப்பின் யாழ்மாவட்ட உள்ளூராட்சிச்சபை உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தால் கூட அது நூறைத்தாண்டியிருக்கும்.

மட்டக்களப்பில் சாணக்கியன் நடாத்திய போராட்டத்தில் கணிசமானோர் பங்குபற்றியிருந்தனர், ஆனாலும், அது பேரெழுச்சியாக வளரவில்லை. இதைத் தவிர மட்டக்களப்பு வந்தாறு மூலையில் “கோத்தா கோகம” கிராமம் தொடக்கப்பட்டபோதும் அதன் தொடர்ச்சியைக் காணமுடியவில்லை. தற்போது காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தேக்க நிலையை ஒத்துக்கொள்கின்றனர். இதற்கான காரணங்களையும் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

போராட்டகளத்தில் நிற்போர் தேக்க நிலைக்கு தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதையும் அடையாளம் கண்டுள்ளனர். அதன் விளைவாக தமிழ் மக்களைத் தேடி உரையாடலை தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் போராட்டக் களத்தில் இருந்து மூன்று குழுக்கள் யாழ்ப்பாணம், வவுனியா என்பவற்றிற்கு வருகை தந்து இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருந்து தமிழ் மக்களோடு சினேகபூர்வமாக உரையாடியுள்ளனர். தொழிற்சங்க சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள், முன்னிலை சோசலிஸக் கட்சியினர், கண்டி “கோத்தா கோ கம” கிளையைச் சேர்ந்தவர்களுமே அந்த மூன்று குழுக்களுமாவர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த இந்த மூன்று குழுக்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு தரப்புக்களைச் சந்தித்து பேசினர். ஊடகச் சந்திப்புகளையும் நடாத்தினர். இந்த மூன்று குழுக்களில் முதல் இரண்டு குழுக்களையும் இக் கட்டுரையாளரும் சந்தித்தார். இக் கட்டுரையாளரை இயக்குனராகக் கொண்ட சமூக விஞ்ஞான ஆய்வுமையத்துடனும் இக் குழுவினர் கலந்துரையாடல்களை நடாத்தினர்.

முதற்சந்திப்பு, இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் ஜோசேப் ஸ்ராலின் தலைமையில் வருகை தந்த தொழிற்சங்க சம்மேளனத்துடன் இடம்பெற்றது. இரண்டாவது சந்திப்பு, முன்னிலை சோசலிசக் கட்சியுடன் நடைபெற்றது. கண்டிய “கோத்தா கோ கம” வினருடனான சந்திப்பில் உடல்நலக்குறைவு காரணமாக இக் கட்டுரையாளர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அங்கு நடந்த உரையாடல் பற்றி கட்டுரையாளருக்கும் தெரியப்படுத்தினர்.

இம் மூன்று தரப்பினருடனான உரையாடல்களும் மிவும் சினேகபூர்வமாக திறந்த மனதுடன் இடம்பெற்றது என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

சில குழுவினர் முள்ளிவாய்க்காலுக்கு சென்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோருடனும் கலந்துரையாடினர். இறுதியுத்த நிகழ்வுகளைக் கேட்டு, ஒளிப்படங்களைப் பார்த்து வருகை தந்த குழுவினர் கதறி அழுத சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றது. இது போன்ற திறந்த மனதுடனான உரையாடல் முன்னெப்போதும் நடக்கவில்லை என்றே கூறலாம்.

இம் மூன்று குழுவினரும் பிரதானமாக எழுப்பிய கேள்வி இந்தப் போராட்ட களத்திலிருந்து தமிழ் மக்கள் ஏன் ஒதுங்கியிருக்கின்றனர் என்பதுதான். சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தோடு இடம்பெற்ற கலந்துரையாடலில், அவ் அமைப்பு இது தொடர்பாக விளக்கமளித்தது. இந்த அமைப்பு தமிழ் மக்கள் ஒதுங்கியமைக்கு பிரதானமாக மூன்று காரணங்களை முன்வைத்தது.

அதில் முதலாவது “கோத்தா கோகம” போராட்டம் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான போராட்டமாகும். போராட்டத்தின் விளைவாக உருவாகும் புதிய ஆட்சி தமிழ்மக்களின் நலன்கள் தொடர்பாக உத்தரவாதம் தராமல் தமிழ் மக்கள் எவ்வாறு போராட்டத்தில் கலந்து கொள்வது என்பதாகும்.

இனப்பிரச்சினை என்பதே தமிழ் மக்கள் ஒரு தேசமாக, தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதுதான். அதாவது ஒரு தேசிய இனத்தை தாங்குகின்ற தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பதை அழிப்பதுதான். இதன் உச்ச நிலைதான் உயிர் அழிப்பு. தமிழ் மக்களின் இதுவரை கால போராட்டம் என்பது இவ்வின அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான தற்காப்புப் போராட்டமே.

எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது வரலாற்று ரீதியான இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கோட்பாடு ரீதியாக தமிழ் மக்களின் தேச அந்தஸ்து, இறைமை அந்தஸ்து, சுய நிர்ணய உரிமை அந்தஸ்து ஏற்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சிப்பொறிமுறையை உருவாக்கப்படவேண்டும். இக் கோட்பாட்டிற்கு அரசியல் யாப்பு வடிவம் கொடுக்கும்போது வடக்கு-கிழக்கு இணைந்த தாயகம், சுய நிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் தேசிய இனமாக பங்குபற்றுவதற்கான பொறிமுறை, சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன உள்ளடக்கப்படல் வேண்டும். துரதிஸ்டவசமாக இது பற்றிய உரையாடலே தென்னிலங்கையில் இடம்பெறவில்லை.

இரண்டாவது “கோத்தா கோ கம” போராட்டம் சிங்களக் கொடியின் கீழேயே இடம்பெறுகின்றது. இக்கொடி தமிழ் மக்களை அரச அதிகாரத்தில் இருந்து அகற்றிய கொடி. இதன் கீழ் தமிழ் மக்களினால் எவ்வாறு போராடமுடியும்? வாளேந்திய சிங்கம் இலங்கையின் இறைமையைக் குறித்தபோது அதற்குள் தமிழ் மக்களை குறிக்கும் செம்மஞ்சள் கோட்டை இடுங்கள் எனத் தமிழ்த் தலைவர்களினால் தேசியக் கொடி உருவாக்கத்தின்போது கேட்கப்பட்டது. சிங்களத் தலைவர்கள் அதனை நிராகரித்தனர். தமிழ், முஸ்லீம் மக்களைக் குறிக்கும் செம்மஞ்சள், பச்சைக் கோடுகள் வாளேந்திய சிங்கத்திற்கு வெளியிலேயே இடப்பட்டன. இது இலங்கையின் இறைமைக்குள் தமிழ், முஸ்லீம் மக்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. தேசியக் கொடி உருவாக்கக் குழுவில் இருந்த செனட்டர் நடேசன் இதனை எதிர்த்து குழுவிலிருந்து வெளியேறினார் என்பது வரலாறு.

மூன்றாவது “கோத்தா கோ கம” போராட்டக்காரர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக குறிப்பாக தமிழ் மக்கள் முன்வைக்கும் அரசியல் தீர்வு தொடர்பாக எவற்றையும் முன்வைக்காமையாகும். குறைந்தபட்சம் தமிழ் மக்கள் முன்வைக்கும் சமஸ்டித்தீர்வை ஏற்றுக்கொள்கின்றோம் என அறிவித்தால் கூட தமிழ் மக்கள் பங்குபற்றி இருப்பார்கள்.

இவை தவிர தென்னிலங்கை அரசியல் செயற்பாட்டாளர்களின் நம்பகத் தன்மை தொடர்பாகவும் சமூக விஞ்ஞான ஆய்வுமையம் கேள்வி எழுப்பியிருந்தது. பச்சை அணி தொடர்பாகவும், நீல அணி தொடர்பாகவும் கசப்பான அனுபவங்கள் பல உண்டு.

ஒன்று தமிழ் மக்களின் முதுகில் குத்தியது என்றால் மற்றயது நெஞ்சில் குத்தியது. சிவப்பு அணியான ஜே.வி.பி பச்சை, நீலத்தை விட மோசமாக தமிழ் மக்களின் விவகாரத்தில் செயற்பட்டது. பச்சை, நீல அணிகள் கைவைக்காத தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான விடயங்களில் கைவைத்துக் காயப்படுத்தியது. வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அதனை இல்லாமல் செய்தது. சுனாமி பொதுக் கட்டமைப்புக்கு எதிராகவும் வழக்குத்தொடர்ந்து அதனைச் செயலற்றதாகியது. இது தொடர்பாக சிறிய வருத்தத்தைக் கூட தமிழ் மக்களுக்கு ஜே.வி.பி. இதுவரை தெரிவிக்கவில்லை.

சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகளை விட்டுவிடுவோம். புலமையாளர்கள் கூட தமிழ் மக்களோடு நிற்கவில்லை. தயான் ஜயதிலக தமிழ் ஈழத்தையே ஆதரித்தவர். தமிழ் மக்கள் மத்தியில் வகுப்புக்களும் எடுத்தவர். இன்று பெருந்தேசியவாதத்தின் காவலனாக நிற்கின்றார். குமார்ரூபசிங்கா போன்றவர்களும் நீண்டகாலத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவில்லை.

வடக்கிலிருந்து வந்த மூன்று குழுக்களும் தமிழ் மக்களின் அதிர்ப்திகளை அனுதாபத்தோடு கேட்டனர். அதிர்ப்திகளை நிராகரிக்கவில்லை. தொழிற்சங்க சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக உத்தரவாதம் எதனையும் எங்களால் தரமுடியாது. ஆனால் தமிழ் மக்களின் அதிர்ப்திகளை சிங்கள மக்களிடம் கட்டாயம் கொண்டுசெல்வோம் என்றனர். நீங்கள் தென்னிலங்கைக்கு வந்தால் சிங்கள மக்களுடன் பேசுவதற்கான களங்களை உருவாக்கித்தருவோம் என்றனர். கண்டி “கோத்தா கோகம” வைச் சேர்ந்தவர்களும் இதனையே கூறினர்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தமது கட்சி இனப்பிரச்சினையை தீர்க்கப்படவேண்டிய தேசியப் பிரச்சினையாக கருதுவதாகவும் தங்களது 18வகுப்புகளில் இதுவுமொன்றாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். தாங்கள் ஜே.வி.பி.யிலிருந்து விலகியமைக்கு ஜே.வி.பி.யின் இனவாதமும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை தமது கட்சி ஏற்றக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கை பற்றி கட்சியின் நிலைப்பாடு என்ன எனக் கேட்ட போது நழுவலாகவே பதிலளித்தார். எழுத்தில் முன்வைப்பதை விட நடைமுறையில் செய்வது பற்றியே நாம் யோசிக்கிறோம் எனக் குறிப்பிட்டார். நாம் எமது நிலைப்பாட்டை எழுத்தில் வைக்கலாம். அது வெறும் காகிதமாக இருக்குமே தவிர நடைமுறைக்கு உதவாது. எங்களுடன் இருப்பவர்களும் வெளியேற முற்படலாம் என்றும் கூறினார். இதனைத் தவிர்த்து சிங்கள மக்களுக்கு அறிவூட்டி நடைமுறையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்கவைக்க முனைகின்றோம் என்றார்.

இனப்பிரச்சினை பற்றி உரையாடும் களத்தை தென்னிலங்கையில் நாம் உருவாக்கியிருக்கிறோம். அந்தக் களத்தை தமிழ் மக்களும் பயன்படுத்தலாம் என்றார்.

மொத்தத்தில் மூன்று குழுக்களுடனான உரையாடல் சுமூகமாக இருந்தது எனலாம். தற்போது ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் குறைகளை காது கொடுத்துக் கேட்கும் புரிந்துணர்வே அது. இந்தப் புரிந்துணர்வு சிங்கள மக்கள் மத்தியிலும் வளர்ச்சியடையும்போது அங்கு அரசியல் கலாச்சார மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். சிங்களக் குழுக்களின் வருகையில் தமிழ் மக்களுக்கு சாதகமான விடயம் சிங்கள மக்கள் மத்தியில் உரையாடலுக்கான வெளி திறந்திருக்கின்றது என்பது தான். அந்த உரையாடல் வெளியைப் பற்றிப்பிடிக்க தமிழ் மக்கள் ஒருபோதும் தயங்கக் கூடாது.

சிங்கள மக்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை புரியத் தொடங்கியுள்ளனரா? - சி.அ. யோதிலிங்கம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY