
posted 24th November 2021
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமான எழுத்தாளர்களின் பல காத்திரமான நூல்களைத் தெரிவு செய்து பதிப்பிக்கும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்மாதிரி செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக நூறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
“கிழக்கின் 100 சிறுகதைகள்” எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டு விழா, அண்மையில் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
மாகாணப் பணிப்பாளர் சரவண முத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிழக்கு பல்கலைக்கழக திருமலைவளாக முதல்வர் பேராசிரியர் வ.கனக சிங்கம் பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாணப்பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும், பயிற்சியும்) திருமதி ஜே.ஜே.முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறு கதைகளைத் தொகுத்து, நூலுருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய உலகறிந்த எழுத்தாளர் உமா வரதராஜன் விழாவில் ஆற்றிய உரையின் தொகுப்பு;
ஒரு கனவுப்புத்தகம் நனவான நன்நாளில் இங்கே கூடியிருக்கிறோம்.
கிழக்கு மாகாணத்தின் நூறு படைப்பாளிகளின் நூறு சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு நூல் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இன்று வெளியிடப் படுகின்றது. இத்தகைய பெருந்தொகுப்பொன்று உருவாவதில் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ச.நவநீதன் காட்டிய அக்கறை மிகப் பெரியது. அவருடைய பணிக்காலத்தில் வெளிவரும் இந்தப் பெருந்தொகுப்பு அவரது வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாக வரலாற்றில் குறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நூல் பாரத்தினால் மட்டும் கனமானதல்ல. அது உள்ளடக்கியுள்ள பெரும்பான்மையான கதைகளினாலும் கனதியானது என்பதைத் துணிவுடன் சொல்ல முடியும்.
1950 அளவில் கிழக்குமாகாணத்தின் முதலாவது சிறுகதை எழுதப்பட்டிருக்கலாம் என்பது பலரதும் ஊகம். இதன் படி 15.01.1950 ஞாயிறு வீரகேசரியில் ‘சிவா’ என்ற பெயரில் மட்டக்களப்பை சேர்ந்த திரு. சிவசுப்பிரமணியம் எழுதிய ‘தாய்’ கதையை ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றாகக் கொள்ளலாம். ஆனால் இந்தக் கதையைக் கிழக்குப் பிரதேச வாழ்வியலுக்குரிய ஒரு கதையாகக் அடையாளம் காண்பதற்கு எவ்வித முகாந்தரங்களும் இல்லை.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘கல்கி, கலைமகள்’ எழுத்தாளர்களின் பிரதிபலிப்பையே அவரிடமும் அவர் காலத்திய கிழக்கு எழுத்தாளர்கள் பலரிடமும் காணக் கூடியதாக இருந்தது. கல்கி, அகிலன் வழியாகத் தொற்றிய இந்தப் போக்கு இன்று வரை இங்கு தொடர்வதையும், சிவசங்கரி, இந்துமதி, ரமணிசந்திரன் என அது நெட்டுருப் பண்ணுவதையும் போலி செய்வதையும் நாம் காண முடியும்.
கிழக்கில் இத்தகைய ஜனரஞ்சகக் கதைகள் ஒரு கிளையாக இருக்கின்றனவென்றால் , மறுகிளையாக தீவிரமான பிரக்ஞை பூர்வமான சிறுகதைகள் உள்ளன. கிழக்கின் சிறுகதை வரலாறாகவும் போக்காகவும் இதனைக் கொள்ளலாம்.
தீவிர எழுத்து என்றால் என்ன? மலினமான ஜனரஞ்சக எழுத்து என்றால் என்ன? என்ற கேள்விகள் இங்கே பலருக்கும் எழலாம். ஏனெனில் எல்லா வகை எழுத்தாளர்களுமே தத்தம் படைப்புகள் உன்னதமானவை; மகத்தானவை என்றே எழுத்துத் துறையில் இயங்குகிறார்கள்.
தங்களைப் பெருந்திரளான மக்கள் விரும்பிப் படிப்பதால் அவைதான் உயர்ந்த படைப்புகள் என ஜனரஞ்சக எழுத்தாளர்கள் நம்புகிறார்கள்.
தீவிர இலக்கியம் என்பது ஒருபோதும் பெருந்திரளான மக்களைக் குறி வைத்து இயங்குவதில்லை. பொழுதுபோக்கையோ அல்லது கேளிக்கையையோ அது ஊக்குவிப்பதில்லை. படைப்புடன் ஆத்மார்த்த உறவை அது கொண்டிருக்கும். படைப்பின் மூலம் வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொள்ள அது முனையும். படைப்புருவாக்கத்தின் போது விழிப்புணர்வுடன் இயங்கிக் கொண்டிருக்கும். கலை நுட்பங்களை வெளிப்படுத்தும். தேய்வழக்குகளைத் தவிர்த்து / கலை உத்திகளில் கண்டுபிடிப்பை நிகழ்த்த எத்தனிக்கும். சுயவிமர்சனத்தை அது எப்போதும் கொண்டிருக்கும். காலந்தோறும் அயலிலும் உள்ளிலும் பண்பாட்டுத்தளங்களில் நிகழும் மாற்றங்களை அவதானித்து உகந்தவைக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். விசாரணைக்கு உட்படுத்தாமல் கண்மூடித்தனமாக எவற்றையும் பின்பற்றாது.
எல்லாவற்றுக்கும் மேலாகப் படைப்பு என்பதை ஒருவகை மன எழுச்சியாக .அல்லது புத்தாக்கம் ஒன்றுக்கான வாசலைத் திறப்பதாக அது காண்கின்றது.
ஜனரஞ்சக எழுத்துக்கு இந்தக் குணாம்சங்கள் கிடையாது. நுகர்வோனைக் கருத்தில் கொண்டு ஒரு படைப்பை அது உற்பத்திப்பொருள் போல் தயாரிக்கின்றது. கதை அல்லது புனைவு என்பது அரிய தத்துவங்கள், நீதி சாஸ்திரங்கள், உயரிய சிந்தனைகள், கொள்கை கோட்பாடுகள், செய்திகள் போன்றவற்றைப் பரப்புவதற்கான வடிவம் என்ற நம்பிக்கை இந்தப் படைப்புகளையும், இதன் படைப்பாளிகளையும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய இருபோக்குகளிலும் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக உள்ள எழுத்தையும் வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்தும் எழுத்தையுயே தீவிர எழுத்தாக உலகெங்கும் கண்டறிந்தார்கள்.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில், பிரக்ஞைபூர்வமாக சிறுகதை வடிவத்தை உணர்ந்து தன் சமகாலத்து வாழ்க்கை முறையை விசாரணைக்கு உட்படுத்திய முதலாவது எழுத்தாளராகப் பித்தன் ஷாவையே கொள்ள முடியும். பித்தன் ஷாவும், அவரைப் போன்ற படைப்பாளிகளுமே பெருமளவில் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை முதலில் சுட்டிக்காட்டி விட விரும்புகிறேன்.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த, எழுபதுவயது தாண்டியும் வாழும் நபரொருவர் சந்தித்திருக்கக் கூடிய பொற்காலங்களும், இருண்டகாலங்களும் ஏராளம் இருக்கின்றன. கூடிக் களித்திருந்த இனங்கள் முட்டிமோதுவதை அவர் பார்த்திருப்பார். 1958ல் இடுப்பளவு வெள்ளத்தில் திக்குத் திணறியிருப்பார். அவ்வப்போது இனக்கலவரங்களின் கோரமுகத்தைப் பார்த்திருப்பார். 1978 ல் வீசிய புயலையும் வீழ்ந்த ஒருதொகை மரங்களையும் கடந்திருப்பார். ஊர் எல்லைகளில் மூளும் இனக்கலவரங்களின் போது அங்குமிங்கும் ஓடியிருப்பார். 1983 இனக்கலவரத்தின் போது ஒடுங்கிப் போய் வானொலி முன்னால் குந்தியிருந்திருப்பார். பால்வழியும் சிறுவர் முகங்களில் திடீரென கருமீசை வெகுவேகமாக முளைத்த அதிசயத்தைப் பார்த்திருப்பார். ஊரெங்கும் ஒலித்த ஒப்பாரிப்பாடல்களைக் கேட்டிருப்பார். அமைதி காக்கவென வந்து அட்டூழியம் புரிந்த வானர சேனையைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பார். சொந்தச் சகோதர்கள் அந்நியர் சூழ்ச்சியில் இராவணர்களாகவும் , விபீஷணர்களாகவும் எதிரெதிர்த் திசைகளில் நின்று ஆளையாள் வஞ்சம் தீர்க்க முனைந்ததையும், வீழ்ந்ததையும், ஒருவரையொருவர் கொன்று மண்ணின் மடியில் மாண்டதையும் வாய்பொத்திப் பார்த்திருப்பார். ஆற்றுவதற்கும், தேற்றுவதற்கும் ஆளில்லாமல் அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்திருப்பார். 2004 ல் கடல் பொங்கி ‘ஓராயிரம் கிராமங்களைத் தின்ற வெள்ளாடு’ போலானதைப் பீதி நிறைந்த கண்களினால் பார்த்திருப்பார். இந்தமண்ணுக்கே உரிய பண்பாட்டம்சங்கள் மருகியதையும், அருகியதையும் பழையன மறைந்து புதியன புகுவதையும் பார்த்தபடியிருந்திருப்பார்.
இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்பதற்கமைய இந்தத் தொகுப்பின் பல படைப்புகளிலும் மேற்சொன்ன அம்சங்கள் பிரதிபலிக்கின்றன.
இந்த மாகாணத்தின் மூவின மக்களும் வெவ்வேறு வகைகளில் துன்பங்களை எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் அதன் பிரதிபலிப்புகளை இந்தத் தொகுப்பின் கதைகளில் காணலாம். துயரம் சுமக்கும் மனிதர்களின் இருண்ட பக்கத்தை மறைத்து விட்டு ‘வெள்ளையடிக்கப்பட்டதொரு சுவரைத் தொகுப்பாகக் காட்டுவது வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாக அமையும்.
இங்குள்ள எழுத்தாளர்களுக்கும், இலக்கிய வாசகர்களுக்கும், அறிஞர்களுக்கும் தெரியும். சுதந்திரத்துக்குப் பின்னான ஐம்பதுகளும் /அறுபதுகளின் முற்பகுதியும்/ சகல தரப்பிலும் தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்ட காலப்பகுதியாகும். இக் காலகட்டத்தில் படைப்புகளின் உட்பொருளாக சமுதாய சீர்திருத்தம் அமைந்திருந்தது. சமய, சமூக மறுமலர்ச்சிக் கருத்துகளையும் பழைய பண்பாட்டம்சங்களையும் சிலாகித்துக் கூறும் சிந்தனையோட்டம் வலுப்பெற்றிருந்தது.
1967க்குப் பின்னரான காலத்தில் இலக்கியம் சமூகப்பார்வை உள்ளதாக இருக்கவேண்டும்; எழுத்தென்பது சமூக யதார்த்த நெறியின் பாற்பட்டதாய் அமையவேண்டும் என்ற கோட்பாடு படைப்புகளில் முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கோட்பாடுடன் தங்களை இணைத்துக் கொண்டு பலரும் எழுதினார்கள். 1980 வரை இந்தக் கருத்தோட்டம் செல்வாக்குடன் விளங்கியது.
எழுபதுகளின் பிற்பகுதியில் அல்லது எண்பதுகளில் இந்த சோஷலிஸவாதக் கோஷமும், வறட்டுத்தனம் மிக்க சமூக யதார்த்தவாதமும் படைப்புகளிலிருந்து விடைபெறுகின்றன.
எழுபதுகளின் பிற்கூறுகளில் அல்லது எண்பதுகளில் புதிய எழுத்தாளர்கள் நுழைகிறார்கள். சமூகப் பிரக்ஞைகளைப் புறந்தள்ளி தனிமனித உணர்வுகள் மேலோங்கும் அகவயமான படைப்புகள் பிறக்கின்றன. இன்ப துன்பங்கள், வேதனைகள், சோதனைகள், விரக்திகள் , தார்மீகக் கோபங்கள், அலுப்புகள் எல்லாம் படைப்புகளில் பதிவாகின்றன. படைப்புகளில் அழகியல், அகத் தூண்டல் அல்லது மனக்கிளர்ச்சி அல்லது பாதிப்பு என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. ‘சொல்லப்படுவது எது’ என்பதை விட ‘எப்படிச் சொல்லப்படுகிறது' என்ற பார்வை முன்னிலைப் படுத்தப் படுகின்றது.
இந்நாட்டில் 1983 ல் நிகழ்ந்த இனக்கலவரம் சகலவற்றையும் புரட்டிப் போடுகிறது. இந்த ஆறாக்காயத்தின் வலி எழுத்துகளிலும் பிரதிபலித்துக் கூர்மை பெறுகின்றது. 1990 களுக்குப் பின்னரான காலத்தில் தமிழ்த்தேசிய உணர்வுகள் படைப்புகளில் எவ்விதம் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியதோ, அதே போன்று முஸ்லிம்களும் தங்கள் மீதான ஒடுக்குமுறை, நெருக்குவாரம் நிமித்தம் தமக்கான தனித்துவ அடையாளமொன்றை இலக்கியத்தில் கண்டடைய முனைந்தார்கள்.
இக்காலத்தில் வெளியான பல படைப்புகளும் சூழ்நிலை கருதி, இடம், பொருளறிந்து தத்தம் உருவங்களையும் உள்ளடக்கங்களையும் தேர்வு செய்து கொண்டன. சூசகமாகச் சொல்வதிலும் , குறியீட்டுமுறையில் உரைப்பதன் மூலமும் இருதரப்பினருமே பாதுகாப்பை உணர்ந்தார்கள்.
இன ஐக்கியம் பற்றிப் பேசும் ஒரு குழாத்தினருடனும், தீவிர இனப்பற்றுடன் இயங்கும் இன்னொரு குழாத்தினருடனும் இருமுகாம்கள் இயங்கின.
மேற்குலகச் சிந்தனை மரபில் வந்த பின் நவீனத்துவம் பற்றி இன்று பேசுகிறோம். அதன் செல்வாக்குக்கு உட்பட்ட எழுத்தாளர்கள் கிழக்கிலும் வந்தார்கள். நிலையான வடிவமென்ற ஒன்றைப் பின்நவீனத்துவம் நிராகரித்தது. எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டவை என்றது. படைப்பு என்பது ‘ஒரு மொழி விளையாட்டு‘ எனக்கூறியது. நவீனத்துவத்தின் நோக்கம் ‘மையப்படுத்தல்’ என்றால் பின்நவீனத்துவத்தின் இலக்கோ ‘வடிவத்தை சிதைத்து மையத்தை இல்லாமலாக்குவதாக அமைந்தது. கிழக்கின் பிந்திய தலைமுறைப் படைப்பாளிகள் பலருக்கு இந்த மொழிவிளையாட்டு, மையம்தகர்த்தல், உருவச்சிதைப்பு என்பவை கவர்ச்சியைத் தந்தன.
மேற்கூறிய வெவ்வேறு காலகட்டங்களின் பல்வேறு போக்குகளையும் இந்தத் தொகுப்பு ஒரு காலக்கண்ணாடி போல் பிரதிபலிக்கின்றது.
கற்பனாவாதம், ஜீவனோபாய நெருக்கடிகள், தனிமனித ஆசாபாசம், பாலுணர்வு, மனிதநேயம், இன ஒற்றுமை, இன விரிசல், அரசியல், தத்துவ விசாரம், சமூக சீர்திருத்தம், பெண்மனம், பரீட்சார்த்த எழுத்து முறைகள் என்ற வகைமைகளுக்குள் கொண்டு வரக்கூடிய 100 கதைகளை இந்தத் தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. கிழக்குக்கேயுரிய சடங்கு சம்பிரதாயங்களையும், விருந்தோம்பல் பண்புகளையும், பலம், பலவீனங்களையும் நம்பிக்கைகளையும், நாட்டுப்புற இசை போன்ற வட்டார வழக்குகளையும், மாற்றமடைந்து வரும் பெண்களின் நோக்கு நிலையையும் இந்தக் கதைகளில் சந்திக்கலாம்.
இன்றிருந்தால் நூறு வயதைத் தொட்டிருக்கக்கூடிய படைப்பாளிகள் தொடக்கம் முப்பத்துமூன்று வயது இளைஞர் வரை இந்தத் தொகுப்பில் உள்ளார்கள். இந்த மண்ணில் பிறந்து இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர்கள், மண்வாசத்தை சுவாசித்து இங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். பல்வேறு காரணங்களால் மண்துறந்து வெவ்வேறு திக்குகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றவர்கள், காரண காரியமாக கிழக்குமண்ணில் காலடியெடுத்து வைத்துக் காலப்போக்கில் ‘பாயோடு ஒட்டி வேரோடியவர்கள்’...எனப் பலருக்கும் இந்தத்தொகுப்பு விரிந்து இடமளித்திருக்கிறது.
இதிலுள்ள எழுத்தாளர்களில் சிலர் கிழக்குமாகாண சிறுகதை வரலாற்றின் ஆரம்ப அடையாளங்களைத் துலக்கப்படுத்தும் நோக்கத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள். இன்னும் சிலர் காலம்தோறும் மாற்றமடைந்த அதன் போக்குகளின் வகைமாதிரிகளை சுட்டுவதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். வேறு சிலர் தாம் சார்ந்த இனக்குழுமங்களின் காலத்திற்கொவ்வா சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆசாரங்கள், மற்றும் மதநிறுவனங்களின் ஆஷாடபூதித்தனங்களுடன் முரண்பட்டு தம் படைப்புகளில் வெளிப்படுத்திய ஒர்மைக்காக அடையாளம் காணப்பட்டவர்கள். இன ஐக்கியத்துக்கான அவாவைப் பிரதிபலிக்கும் படைப்பாளிகளையும், தாம் சார்ந்த இனங்கள் ஓரவஞ்சனைக்குள்ளாகுவதாக மனங்குமுறும் படைப்பாளிகளையும் இத் தொகுப்பில் ஒருங்கே காணலாம். இன்னும் சிலர் கிழக்கின் ஆறு, வயல், கடல் சார்ந்த வாழ்வியல் கூறுகளைத் தத்தம் படைப்புகளில் பிரதிபலித்தவர்கள் என்பதற்காக இதில் இடம் பெற்றவர்கள். ஓர் இலக்கியவாதி அரசியல் அந்தகனல்ல என்பதற்கு சாட்சியமாக முன்வைக்கக் கூடிய உக்கிரமான படைப்புகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதேவேளை தனிமனித உணர்வுகளைப் புறந்தள்ளாமல் முன்னிலைப் படுத்தும் மென்மையான கதைகளும் உண்டு. 90 களின் பின் எட்டுத்திக்கும் சென்றவர்களின் அனுபவங்களும் அவர்களின் கதைகளும் கூட இத்தொகுப்புக்கு வேறொரு பரிமாணத்தை அளிக்கின்றன. ஒட்டுமொத்தத் தமிழ்சிறுகதையுலகில் மொழிதலின் அசாத்தியமான எல்லைக்கோடுகளை எட்டிப்பிடித்த சில படைப்புகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியிருப்பது இத்தொகுப்பினைப் பெருமைப்படுத்துகின்றது. சம்பிரதாயபூர்வமான சிறுகதை முறையிலிருந்து துண்டித்துக் கொண்டவர்களாக சொல்லும்முறை, கூறும்பொருள் என்பவற்றால் நமது தமிழ் சிறுகதை இலக்கியத்தை பரிசோதனை மனோபாவத்துடன் புதுத்திசைக்கு இழுத்துச் செல்ல முனையும் படைப்பாளிகளும் இதில் இருக்கிறார்கள். இவ்விதமான பல்பரிமாணத் தன்மைகளால், இந்தத் தொகுப்பு முக்கியத்துவம் பெறும் என்பது எங்கள் நம்பிக்கை.
கிழக்கு மாகாணத்தின் அரசாங்கத் திணைக்களமொன்றின் வெளியீடு என்ற வகையில் மூன்று மாவட்டங்களும் இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. 810 பக்கங்களைக் கொண்ட இந்தப் பெருந்தொகுப்பு நூலில் இடம் பெறாத சில எழுத்தாளர்கள் ‘நாங்கள் என்ன , எழுத்தாளர்கள் இல்லையா?’ எனப் பொங்கியெழக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இத்தகைய தொகுப்புகள் எத்தனை பாகங்கள் வந்தாலும் இந்த ‘உரிமைக் குரல்கள்’ எங்கிருந்தாவது ஒலித்துக் கொண்டுதானிருக்கும் என்பது நாம் அறியாததல்ல.
இந்தத் தொகுப்பு தனிநபர் செயலல்ல . கூட்டு முயற்சி.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி தன்னுடைய ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலில் கால்ப் பந்தாட்டத்தைப் பற்றி ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுவார்.
‘தோல்விகளுக்குப் பின் நாம் எப்போதும் காணும் பலவீனம்;
‘குழு அல்ல, நான்தான் முக்கியம் என்ற விளையாட்டுக் காரனின் மனோபாவமே. காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல , என் குழுவினுடையது என்று எப்போதும் நினை! . உனக்குக் கொண்டு போவதற்குச் சாத்தியமானதற்கு மேல் ஒரு அங்குலம் கூடப் பந்தைக் கொண்டு போக முடியும் என்று ஒருபோதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது , பந்தை மேலேடுத்துச் செல்ல, வசதியுடன் உன் சக ஆட்டக்காரன் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே’
சுந்தர ராமசாமியின் இந்த வரிகள் கால்ப் பந்தாட்டத்தைப் பற்றிய குறிப்புகள் மட்டுமல்ல. எல்லாத் துறைகளுக்குமானது என்பதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது.
இந்தத் தொகுப்பு சிறப்பாக வெளிவருவதன் பின்னணியில் திணைக்களப்பணிப்பாளர், படைப்பாளிகள், படைப்பாளிகளின் குடும்பத்தினர், சிரேஷ்ட கலாசார அலுவலர்கள், கதைத்தேர்வுகளிலும், பிரதிகள் சேகரிப்பிலும் உதவிய கலாசார அலுவலர், நண்பர் த.மலர்ச்செல்வன், முகப்போவியம் வரைந்து அட்டையை அலங்கரித்த இனிய நண்பர் றஷ்மி, நூல் வடிவமைப்பை அச்சுருவில் கன கச்சிதமாக்கிய வணசிங்க அச்சகத்தின் ஷங்கர், மற்றும் ஊழியர்கள், என்னுடன் சேர்ந்து அச்சுப் பிரதியை மெய்ப்புப் பார்த்த தம்பி சிவ-வரதராஜன் ஆகியோரின் கூட்டு முயற்சியிலேயே இது சாத்தியமானது.
இந்தத் தொகுப்பில் எஸ்.பொ. வும் இடம் பெற்றுள்ளார் என்ற செய்தியை அறிந்ததும் சிலர் என்னிடம் கேட்டார்கள்.
எழுத்தாளர் எஸ்.பொ வடக்கா, கிழக்கா? என்பது அந்தக் கேள்வி.
எஸ்.பொ.வின் தன் வரலாற்று நூலான ‘வரலாற்றினை வாழ்தலின் முதலாம் பாகத்தின் பக்கம் 530 இலிருந்து பக்கம் 788 வரை படித்துப் பார்த்தால் இந்தக் கேள்விக்கான விடை கிடைத்து விடும்.
அறியாமையினதோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினதோ இருளில் இருந்து இந்தத் தொகுப்புக்கான கதைகள் தெரிவு செய்யப்படவில்லை. நீண்ட அலசல், ஆய்வு, கலந்துரையாடலுக்குப் பின்னரே இதிலுள்ள கதைகள் தேர்வு செய்யப் பட்டன.
இப்படியொரு தொகுப்பு வெளிவருவதாக முகநூலில் பதிவொன்றைக் கண்டதும் சிங்கள வாசகர்கள் காட்டிய ஆர்வமும், வரவேற்பும் எதிர்பாராதது. ‘இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்க முடியாதா' என அவர்களில் பலரும் கேட்டார்கள்.
அரசியல் என்பது பிரித்ததைக் / கலை இலக்கியம் இணைத்து வைத்தால் அதை விட வேறென்ன வேண்டும். உன்னதமான கலை-இலக்கியப் படைப்புகளின் இலக்கும் அதுதானே ? இந்தப் பெருந்தொகுப்புக்கு அந்தப் பெருமை கிட்டட்டும்.

ஏ.எல்.எம்.சலீம்