
posted 19th September 2021

நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்
“இன்றைய ஆட்சியாளர்களோடு ஒன்றித்துப் பயணிப்பது மிகவும் ஆபத்தானது. அதே வேளை மீண்டுமொரு முறை தமிழ், முஸ்லிம் இரு சமூகங்களும் ஒன்றித்துப் பயணிக்கின்ற காலம் நெருங்கிவந்துள்ளது. மேலாதிக்க அணுகுமுறை தற்போது தோற்றமளிப்பதைப் பற்றி நாம் ஒன்றாக இருந்து சிந்திக்க வேண்டிய தருணமும் வந்திருக்கின்றது”
இவ்வாறு, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 21ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இணையவழியூடாக (Zoom) அவரது நினைவு தினத்தில் இடம்பெற்றபோது , அதற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
தலைவர் ரவூப் ஹக்கீம் தமது தலைமைப் பேருரையில் மேலும் பின்வருமாறு கூறினார்.
எமது மறைந்த தலைவருக்குச் செய்கின்ற மிகப் பெரிய நன்றிக்கடனாக கட்சியுடைய தற்கால அரசியல் முழுமையாக பரிமாண மாற்றமடைய வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இதை என்னுடைய சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு உள்வாங்க வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
சமகால அரசியல் சம்பந்தமாக பெரும் தலைவர் அஷ்ரபை மீள்வாசிப்புச் செய்கின்ற போது, அன்னாரின் மறைவின் பின்னர்,கட்சியின் உள்ளும் புறமும் நடைபெற்றுவரும் விடயங்கள் குறித்து இன்று பலருக்கும் மத்தியில் நிறைய விசனங்களும், விமர்சனங்களும் இருப்பதை நாம் அனைவரும் உள்வாங்கியே ஆக வேண்டும்.
இன்று இருக்கின்ற நிலைமையில் எம்மைச் சூழ நடந்துக் கொண்டிருக்கின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது ,கடந்த நாட்களில் வெலிக்கடை மற்றும் அநூராதபுரச் சிறைசாலைகளுக்குச் சென்று சிறைச்சாலைக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் செய்திருக்கின்ற அட்டகாசத்தைப் பார்த்தால் மிகவும் பாரதூரமானது. அவ்வாறு இராஜாங்க அமைச்சரொருவர் தமிழ் கைதிகளை எவ்வாறு தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார் என்பதைப் பார்த்தபோது , அழுத்தம் கொடுத்து அவரை அந்தப் பதவியிலிருந்து விலக வைத்திருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள அவமானத்திலிருந்து அரசாங்கம் விடுபட முடியாது. இது சாமான்யமானதொரு விடயமல்ல.
இன்று தமிழ் சமூகம் இதற்காக ஆத்திரமடைந்திருக்கின்றது. முஸ்லிம் சமூகமும் இவ்வாறான விடயங்களில் ஆத்திரமடையவே செய்யும். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த ஆட்சியாளர்களோடு ஒன்றித்து பயணிப்பது மிகவும் ஆபத்தானது.
தலைவர் என்கின்ற பேராத்மா எங்களிடத்தில் விட்டுச் சென்றிருக்கின்றதில் ஏதாவதொரு சிறு பாகமாவது எங்களிடத்தில் எஞ்சியிருக்குமாயின், இவ்வாறான ஆட்சியை இனிமேலும் நாங்கள் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பது எந்தக் காரணம் கொண்டும் இந்த சமூகம் அங்கீகரிக்கின்ற விடயமாக இல்லை என்பதை எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உளம்கொள்ள வேண்டும்.
அடிக்கடி மனச்சாட்சியை பற்றிக் கதைப்பவர்கள், தங்களுடைய பிரதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இருக்கின்ற சந்தர்ப்பங்களை தாங்கள் இழந்துவிடுவோம் அல்லது வலிந்து வம்புகளுக்குள் மாட்டுகின்ற பலருக்கு இது வாய்ப்பாக போய்விடும் என்று வெறும் நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லிக்கொண்டு , அபிவிருத்தி மாயையில் அள்ளுண்டு போகின்ற ஓர் அரசியல் சமகாலத்திற்கு ஒவ்வாத விடயம் என்பதை எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றாகப் புரிந்தக்கொள்ள வேண்டும்.
தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் எம்முடைய பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகியோரை நினைவுபடுத்தி பார்க்கின்ற போது, இந்த இரண்டு ஆளுமைகளும் பொதுவான சில தன்மைகளைக் கொண்டிருந்தன. ஆரம்பத்தில் தந்தை செல்வாவுடைய காலத்தில் வன்முறை அரசியல் இல்லாமல் அஹிம்சை அரசியலை அடியொட்டிச் செய்து வந்த அரசியல் ஈற்றிலே வன்முறையின் பால் சென்ற பின்னர் சகோதர தமிழ் பேசும் சமூகங்கள் இரண்டும் அர்த்தமற்று அதற்குள் அள்ளுப்பட்டுக் கொண்ட போது ஏற்பட்ட அவலங்களை நாம் அனைவரும் கண்டிருக்கின்றோம்.
மீண்டுமொரு முறை இந்த இரண்டு சமூகங்களும் ஒன்றித்து பயணிக்கின்ற காலம் நெருங்கி வந்திருப்பதை நான் அண்மைக் காலமாக மிகவும் வலியுறுத்தி வருகின்றேன். ஆனால் இதைப் பற்றி பொதுவெளியில் பேசுவதை சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்தாலும் கூட , என்னுடைய உள்ளுணர்வு இன்று பரவலாக தமிழ் , முஸ்லிம் மக்களுக்கிடையில் பிராந்திய ரீதியில் இருக்கின்ற உள்ளார்ந்த முரண்பாடுகளை அடிக்கடி தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கக் கூடாது எனக் கூறுகின்றது.

பரஸ்பரம் கலந்துரையாடி, இணக்கப்பாட்டிற்கு வந்து அவற்றிலிருந்து சுமுகமான முறையில் விடுபட்டு, அதற்கப்பால் சென்று நமது இரண்டு சமூகங்களையும் அடித்து, நொறுக்கி, நாசமாக்கி அதற்கு மேலால் பயணிக்க விழைகின்ற மிக மோசமான மேலாதிக்க அணுகுமுறை தற்போது தோற்றமளிப்பதைப் பற்றி ஒன்றாக இருந்து சிந்திக்க வேண்டிய தருணம் வந்திருக்கின்றது.
தந்தை செல்வாவுக்கு பின்னார் தமிழ் அரசியலில் உருவான வன்முறை கலாசாரத்தின் விளைவுகளில் ஒன்றாக, எவ்வாறு உள்ளார்ந்த ரீதியாக முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சகோதர படுகொலைகளை தமிழ் சமூகத்தின் ஆயுத குழுக்கள் செய்தனவோ, அதேபோன்று ஆன்மீக அடிப்படையில் முஸ்லிம்களுக்கு உள்ளேயும் ஒரு சில முரண்பாடுகள் வன்முறையின் வெளிப்பாடாக வந்தபோது அவற்றைச் சாதாரணமான சலனங்கள் என்று தான் நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் அதனை மிக லாவகமாக இந்தப் பேரினவாதம் பயன்படுத்திக் கொண்டது.
எவ்வாறு பேரினவாதம் தமிழர்களுக்கிடையில் இருந்த சகோதர படுகொலைகளைப் பயன்படுத்தி "கோடாரிக் காம்பு"களையும் பாவித்து போராட்டங்களை முன்னெடுத்ததுவோ,அதேபோன்று நடைபெற்று விடுமோ என இன்று முஸ்லிம் சமூகத்துக்கிடையிலும் மீண்டும் தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் குறித்து இன்று கத்தோலிக்க சமூகம் யதார்த்தத்தைப் புரிந்திருக்கின்றது. பேராயர் உட்பட அந்தச் சமூகம் மிகத் தெளிவாக அதன் பின்னணியில் இடம்பெற்றுள்ள சூழ்ச்சி, சூட்சுமம் என்பன பற்றி வெளிப்படையாகப் பேசத் தலைப்பட்டிருக்கின்றது.
போதாக் குறைக்கு ஆட்சியாளர்கள் மறைக்க நினைப்பதற்கு மேலும் வலுச் சேர்க்கின்ற வகையில், நேற்றைக்கு முன்னைய தினம் காவியுடை தரித்த, வழமையாகவே வலிந்துவந்து வம்புக்கிழுக்கின்ற இன்னுமொரு "பிரபலம்" மீண்டும் பேசத் தொடங்கியிருக்கின்றார். மிக விரைவில் இன்னுமொரு தாக்குதல் நடைபெறப் போகின்றது என்றும், முஸ்லிம் தீவிரவாதிகள் வந்து அதைச் செய்ய போகின்றார்கள் என்றும் அந்தப் "பிரபலம்"ஆரூடம் கூறியிருக்கின்றார்.
இந்த ஆரூடத்திற்குப் பின்னால் இருக்கின்ற மிகப் பெரிய திட்டமிடலை மிகச் சரியாக அடையாளம் கண்டு, பேராசிரியர் ராஜன் ஹூல் "EASTER SUNDAY ATTACK AND DEEP STATE " என ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதி இருக்கின்றார். அது ஒரு முக்கியமான நூல் அதனை அனைவரும் வாசிக்க வேண்டும். அதில் தெளிவாக பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன்படி நாட்டின் உளவுத்துறை எவ்வாறு செயற்படுகின்றது, சில விடயங்கள் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன என்பதை பற்றிய சந்தேகங்கள் பலமாக மேலெழுந்திருக்கின்ற சூழ்நிலையில் தான் புதிதாகவும் இவ்வாறான சில ஆரூடங்கள் வெளிவருகின்றன.
எனவே, மிக விரைவில் மீண்டுமொரு கலவரத்திற்கு வழிகோலுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இன்றைய பொருளாதார சிக்கல்களிலும் இந்த மோசமான சுகாதார சூழலிலும் வேறு வழி தெரியாமல் மீண்டுமொரு முறை முஸ்லிம்களை வன்முறையாளர்களாக எடுத்துக் காட்டி நாடகமொன்றை அரங்கேற்றுவதற்கு தயாராகி வருகின்றதை போன்ற அச்சம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கின்றது.
விரைவில் என்னுடைய சக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளேன். ஆளுங்கட்சிக்கு இன்று சாமரம் வீசிக் கொண்டிருக்கின்ற எம்மவர் உட்பட ஏனையவர்களையும் சேர்த்து எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பேசி, அண்மைய காலமாக நாங்கள் எதிர்நோக்கி வரும் எங்களுடைய பாரம்பரிய சட்டங்களான விவாக மற்றும் விவாகரத்து சட்டம், தனியார் சட்டங்கள் போன்றவற்றில் இஸ்லாத்தின் அடிப்படை சட்ட வரையறைகளைப் பேணி, அவற்றின் நடைமுறைகளில் சேர்க்க வேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றி எமது சமயத் தலைமைகளுடனும்,துறைசார் சட்ட வல்லுனர்களுடனும்,சமூக செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடி நாங்கள் உடன்பாடு கண்ட விடயங்கள் உள்ளன.அவற்றைச் செயற்படுத்த முன்வர வேண்டும்.
இச்சட்டங்களில் தங்களுக்கு வேண்டிய விதத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு மிக மோசமான அழுத்தத்தை தற்போதைய நீதியமைச்சருக்கு மேல் செலுத்திக் கொண்டிருக்கின்ற தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்பர்களை நாங்கள் வென்றாக வேண்டும். அதற்கு நாங்கள் ஒன்றுபட வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று இல்லாமல் எல்லோரையும் ஒன்றுபடுத்தி ஓர் அணியாக நின்று, அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தில் இதற்கும் அப்பால் அரசியல் திருத்தங்களை, சட்டங்களை மாற்றி தேர்தல் முறையினூடாக சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை காவு கொள்கின்ற மிக மோசமான நடவடிக்கைகளுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான சமிக்ஞைகள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய சிக்கலான நிலைமையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பற்றி , தாங்கள் சோரம் போய்விட்டது பற்றிய எதுவித விவஸ்த்தையும் இல்லாமல் இன்னும், இன்னும் நொண்டிச் சாட்டுக்கள் சொல்லிக் கொண்டிருக்காமல், பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்களும், போராளிகளும் ஆதங்கத்தோடும், ஆத்திரத்தோடும் இந்த விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவர்களது நிலைப்பாடுகள் நிச்சயமாக இந்த சமூகத்தின் விருப்பத்திற்குரியதல்ல என்பதைப் புரிந்து கொண்டு மறைந்த எமது தலைவருக்கு செய்கின்ற மிகப் பெரிய நன்றியறிதலாக அவர்களுடைய அத்தகைய போக்கில் இருந்து விடுபட வேண்டும்.
ஆணித்தரமாக இந்த சமூகத்தின் அரசியலின் ஆன்மா முஸ்லிம் காங்கிரஸ் என்ற விடயத்தை நாங்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்கு தவறு விட்டு இருக்கின்றோம் என்பதை மீண்டுமொரு முறை திரும்பிப் பார்த்து பழைய தடையங்களை நாங்கள் நாடிச் செல்வபவர்களாக மாற வேண்டும். அதுவே தலைவரின் நினைவு நாளில் அவருக்கு செலுத்துகின்ற மாபெரும் நன்றிகடனாக இருக்கும்.
ஆருயிர் தலைவரின் வசீகர வதனம் என்றுமே எங்களை விட்டு மறைந்து விடாமல் இன்றும் நிலையாய் நிற்பதற்கு அவருடைய அரசியல் ஆளுமையின் பல்பரிமாண செயற்பாடுகள் காரணமாக இருந்தாலும், அவருடைய மனித நேயம் என்பது எவராலும் மறுதலிக்க முடியாத ஒரு விடயமாகவுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளராக இருந்து அவர் படிப்படியாக அரசியல்வாதியாகப் பரிணமித்து வந்த சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கால கட்டங்களில் எவ்வாறு அவருடைய ஆன்மீகம் வெளிப்பட்டுள்ளது என்பது பற்றியும் “நான் எனும் நீ" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது .
தலைவருடைய சொல்லாண்மை எவ்வளவு வளமானதோ, வசீகரமானதோ அதுபோல அவருடைய ஆன்மீகமும் அலாதியானது, பிரத்தியேகமானது என்று நம்புகின்றவன் நான். இந்த நூலில் இருக்கின்ற கவிதைகளை மீள வாசிக்கின்ற போது இன்னும் வியப்படைகின்றளவுக்கு அதனுடைய அம்சங்கள் பொதிந்திருக்கின்றன.
அந்த நூலின் முன்னுரையில் “ஒரு மனிதனின் வாக்குமூலம்” என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் யாவும் அவருடைய பரிணாம மாற்றத்தினை ஒழுங்காக காட்டுவதற்காக சித்திரித்த வசனங்களாக உள்ளன. இதில் தலைவருடைய ஆன்மீகத்தை பற்றிய தெளிவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தலைவருடைய அத்திம காலத்தில் ஆஸ்வாசத்தினால் உந்தப்பட்டு, ஆன்மீகப் பரப்பை புரிந்து கொண்டதுதான் அவருக்கும் சூபித்துவத்திற்கும் ஏற்பட்டிருந்த தொடர்பாடல்.
தலைவரை மீள்வாசிப்புச் செய்கின்ற போது அவருடைய ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுவது பிழையான விடயமாக கருதப்பட மாட்டாது. 1983ஆம் ஆண்டு இந்த கவிதை தொகுதியை எழுத ஆரம்பித்த போது எழுதியவற்றை இறுதியாக இணைத்துள்ளார். அதில் ஏகத்துவத்தில் ஆழ வேரூன்றி, தனது ஆன்மீகத்தை தொடங்கி காலப்போக்கில் அவருடைய ஆன்மா ஆண்டவனை அடையக் கூடிய விதத்தில் சூபித்துவத்தின் பால் சென்றது பற்றி அவரை அருகிலிருந்து பார்த்த பலரும் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம்.
தெரிந்த உலமாக்களும் அவரிடத்திலிருந்த தெளிவான சூபித்துவ கோட்பாடுகளை உணர்ந்து வைத்திருந்தார்கள் .அது தான் உண்மை.
அதை சார்ந்து “நான் எனும் நீ” என்ற அவரது கவிதை இத்தொகுப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதே மாதிரி 1996 முதல் 1999 வரை ஒவ்வோர் ஆண்டும் தன்னுடைய ஆன்மீக பரிணாமத்தில் ஏற்பட்டு வருகின்ற புதிய மாற்றத்தை மிகத் தெளிவான வார்த்தைகளால் மிக அழகானதும் கனதியுமான கருத்துச் செறிவோடும் கவித்துவ வான்மையோடும் அவர் வெளிக்கொண்டு வந்தார்.
அதில் முக்கியமாக “வெள்ளைக் கிழவன்” என்ற கவிதையையும், 1997ஆம் ஆண்டு எழுதப்பட்ட “உன்னை தேடி அழுகின்றேன்” என்ற கவிதையையும் கட்சி தொண்டர்கள், தோழர்கள் மற்றும் அவருடைய ஆன்மீகம் பற்றிய ஆய்வைச் செய்கின்றவர்கள் மீண்டும் வாசிக்க வேண்டுமென நான் நினைக்கின்றேன்.
இன்னொரு கவிதை “விடியாத இரவு” என்ற கவிதை .அதுபோல “நான் இலா நீ“ என்ற கவிதை இறுதியாக “நான் எனும் நான்” என்ற கவிதை. அவை ஓர்ஆன்மா ஆண்டவனை நாடுவதற்கு அங்கலாய்க்கின்ற அவஸ்த்தையை வெளிக்கொண்டு வருகின்ற பாங்கில் சூபித்துவ கொள்கையை அடியொட்டி வரையப்பட்ட கவிதைகள் என்பதில் எனக்கும் இதனை வாசிக்கின்ற எவருக்கும் எதுவித சந்தேகமும் எழாது.
எனவே எல்லாம் வல்ல இறைவன் அவருக்குரிய சரியான இடத்தை ஜென்னத்துல் பிர்தௌஸில் வழங்குவான் என்ற நம்பிக்கையோடு , இந்த தலைவரின் பாசறையில் வளர்ந்த நாங்கள் இன்று எங்கு போய்க் கொண்டிருக்கின்றோம் என்பது தொடர்பில் மீளவும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தலைவருடைய கவிதைகளில், தன்னுடைய மறைவை எதிர்வு கூறுகின்ற விடயத்தை அவர் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்ற பல கவிதைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் தெரிந்த , பேராளிகள் அனைவரும் இன்றும் விரும்பிப் படிக்கின்ற அவருடைய குரலில் ஒலிப்பதிவு செய்து எங்களுக்கு தந்துவிட்டு சென்றிருக்கின்ற “போராளிகளே புறப்படுங்கள்” என்ற கவிதை முக்கியமானது. அதுபோல் “பிரியாவிடை” என்ற கவிதையில் உள்ள சந்த செயற்பாடுகள், சந்தத்தை எப்படி தன்னுடைய கவிதைகளில் கொண்டு வருகின்றார் என்பது உண்மையில் பிரமாதமாகும்.
கவிதை என்று வருகின்ற போது அதன் மண்வாசனை மாறாமல், தென்கிழக்கின் மண்வாசனையை கிராமத்து பாடல்களினூடாக கொண்டு வருகின்ற லாவண்யம் என்பது மிகவும் மெச்சத்தக்கது. "புதிய வெளிச்சம்" என்ற பாடலாக தலைவருடைய காலத்தில் பாடலாக வெளியாக்கினோம். அதுபோல நாட்டுப்புற பாடலில் “வரம்பிலே வாப்பா மௌத்தானார்” என்ற கவிதை உண்மையில் நாட்டுப்புற மணம் கமழ்கின்ற தென்கிழக்கு சொல்லாடலை அழகாக வர்ணிக்கின்ற வகையில் அமைந்துள்ளது .
இவ் இணையவழி நினைவேந்தல் நிகழ்வில் சென்னையிலிருந்து கவிஞர், நடிகர் வ.ஐ.ச.ஜெயபாலன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், லண்டனிலிருந்து இலக்கிய ,சமூக செயற்பாட்டாளர் எம்.பௌசர், கட்சியின் ஸ்தாபத் தலைமர்ஹூம் அஷ்ரபின் சகோதரி சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன், வைத்திய கலாநிதி தாஸிம் அஹ்மட், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர்,கவிஞர் நபீல் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம்