உமா வரதராஜனின் உரை
உமா வரதராஜனின் உரை

உலகரிந்த பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன்

பிரபல கவிஞர் மறைந்த பாண்டியூரனின் கவிதைகள் கொண்ட “பாண்டியூரன் கவிதைகள் எனும் நூல் ஒன்றை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியட்டுள்ளது
இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு கல்முனையில் நடைபெற்ற போது நிகழ்வுக்கு தலைமை வகித்த உலகறிந்த பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் ஆற்றிய தலைமை உரையின் தொகுப்பு

அனைவருக்கும் வணக்கம்.

1980 களின் பின் பிறந்த பலருக்கும் கவிஞர் பாண்டியூரனின் பெயரும் அவருடைய கவிதைகளும் தெரிந்திருக்க நியாமில்லை. ஏனெனில் பாண்டியூரனின் மரபுக்கவிதைப் பாணி இன்று அருகிப் போன ஒரு வடிவம் ஆகி விட்டது. எங்களைப் போன்றோர் எழுத வந்த எழுபதுகளின் மத்தியில் தமிழ்க் கவிதை என்பது வேறு திசை நோக்கி நகரத் தொடங்கி விட்டது. 1970 களின் பின்னர் தமிழ்க் கவிதை சொல்லப் படும் முறையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தளைகளைக் களைந்த, அல்லது இறுக்கங்கள் தவிர்த்த வசன கவிதைகளும் பேச்சோசைக் கவிதைகளும் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன.

தமிழின் தனித்துவமான அடையாளம் கவிதை மரபு.
கிட்டத்தட்ட 2500 ஆண்டு கால வரலாற்றினைக் கொண்டது அது. காலந்தோறும் அது தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. வித்துவச் செருக்கும், பண்டிதத் தனமும் நிரம்பிய கருகலான செய்யுள் வடிவத்துக்கு விடை கொடுத்து நவீன காலத்துக்குரிய உள்ளடக்கங்களைக் கொண்டதாக மரபுக்கவிதை மாற்றமடைந்திருந்தது.

ஆனால் எப்போதும் போல், பழமையில் பற்றுறுதி கொண்ட சில வித்துவான்களும் பண்டிதர்களும் மரபுக்கவிதைப் பாணியையும் , செய்யுள், வெண்பா வடிவங்களை பழமையின் சாயல் அகலாமல் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருந்தார்கள். அதன் எச்ச சொச்சங்களை மேடை, வானொலி, தொலைக்காட்சிக் கவியரங்குகளில் இன்றைக்கும் நாம் காணக் கூடியதாக இருக்கிறது.

பாண்டியூரனும், பாண்டியூரன் போன்ற இன்னும் சிலரும் மரபுக் கவிதைப் பாணியைக் கை விடாதவர்களாக இருந்த போதிலும் வாழ்வியல் அம்சங்களையும், நவீனத்துவ வாழ்க்கையின் நெருக்கடிகளையும், அரசியல் சூழலையும் பேச முற்பட்டதால் நம் கவனத்துக்கு உரியவர்கள் ஆகின்றார்கள்.

மரபுக் கவிதைகளா, புதுக் கவிதைகளா உயர்ந்தவை என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு காலத்தில் மிகவும் உக்கிரத்துடன் பேசப்பட்டன. கற்பில் சிறந்தவள் கண்ணகியா, சீதையா போன்ற வகையறாவைச் சேர்ந்த இந்த சர்ச்சை அநேகமாக இன்று தேய்ந்து போன ஒன்றாக ஓய்ந்து விட்டது, ‘பழையன கழிதல்-புதியன புகுதல் என்ற உலக வரலாற்று உண்மைக்கு இணங்க தமிழில் வசன கவிதை அல்லது புதுக் கவிதை என்ற வடிவம் தவிர்க்க முடியாத ஓர் இடத்தை இன்று பெற்று விட்டது. இது இன்று தமிழ்க் கவிதைத் துறையில் ஒரு தாராள மயத்தை உருவாக்கியிருக்கிறது. எல்லோரும் இந் நாட்டு மன்னர் என்ற ஜனநாயக வாதத்தைப் போல ‘எல்லோரும் இந் நாட்டில் கவிஞர்’ அல்லது ‘வீட்டுக்கொரு கவிஞர்’ என்ற நிலைமையை இது உருவாக்கித் தந்திருக்கிறது.

தமிழ்க் கவிதைத் துறையில் நிகழ்ந்த இத்தகையதொரு மாற்றத்தை ஏற்றுக் கொண்ட கவிஞராகப் பாண்டியூரனைக் கொள்ள முடியாது. புதுக்கவிதை வெறுப்பாளர் என்ற வகைக்குள்ளேயே அவரை நாம் அடக்க வேண்டியிருக்கும்.
அவர் எழுதிய இந்தக் கவிதை வரிகளே இந்தக் கூற்றுக்கு சான்றாக அமைகின்றன.

‘புதுக் கவிதை எழுதிட நான் புறப்பட்டேன்
தமிழணங்கே புலம்பா தே நீ !
மதுக்கலயம் தந்தமதி மயக்கத்திற்
பேனை பிடித் தெழுதி னாலும்.....
புதுக்கவிதை பிறந்ததிலை புரளியெழும்
உனக்கும் என துணர்வுக்கும்- பின்
புதுப்புதிய பிறவிகளே பிரசவிக்கும்
யாப்பணியுள் ; முயற்சி வீணே !

வரி சிலதை மேல்கீழாய் மடக்கிமுறித்
தெழுத்தாக்கி ‘ மங்க மாய்ந்து’
அரைகுறைவேக் காட்டோடு படைத்து விட்டால்
அம்பலத்தார் அருமை என்பார்
பிரசவத்தின் பயனதுவே , பேப்பருக்கும்
புதுக்கவிதை மோகம் ! இன்று
அரிவாளை யேந்துவதால் அடுக்கு மொழிச்
சோடிப்பு கவியாகாதோ !

இன்றைக்கு கவிதையும் கவிதை பற்றிய ரசனையும் மிகவும் மாறி விட்டன. ரொமான்டிஸம், படிமம் ,மிகை அழகியல் போன்ற தன்மைகளை எல்லாம் உதறி விட்டு எளிய மொழியை , வாழ்வின் அபூர்வ கணங்களை அது வரித்துக் கொள்ள முனைகின்றது. உதாரணமாக ‘இசை’ என்ற ஒரு கவிஞரின் கவிதையை இங்கே வாசித்துக் காட்டலாம் என நினைக்கிறேன்.
கவிதையின் தலைப்பு ‘நைஸ்”
-----------------------------------------------------
எதேச்சையாக பட்டுவிட்டது

உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன

இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா

இதற்காகத்தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா

இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா
இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டைப் போட்டு மூடுகிறார்களா
இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா

இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா
இந்த நைஸிற்காகத்தான் "வைகறை வாளாகிறதா"

இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா

இதற்காகத்தான்
தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா

அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம், அதே நைஸ்தான் வேண்டுமோ.

இன்றைய கவிதைகளின் தன்மைக்கும் போக்குக்கும் மேலே நான் வாசித்த கவிதை ஒரு சின்ன உதாரணம்.
இன்றைக்கு வெளியாகும் பாண்டியூரனின் கவிதைகள் நூலை இப்போதைய இளைய தலைமுறைப் படைப்பாளிகளும், வாசகர்களும் எவ்விதம் எதிர்கொள்வார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இன்றைய மாறிப்போன ரசனையின் அடிப்படையில் இந்தக் கவிதைகள் அருங் காட்சியகத்தின் பொருட்களாக அல்லது குறிப்பிட்டதொரு காலத்தின் ஆவணமாக அவர்களுக்குத் தென்படக் கூடும். சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தொகுப்பு காலம் தப்பிப் பெய்யும் மழை, அல்லது காலம் பிந்தி விளைந்த பயிர். ஆனாலும் எப்போது பெய்தாலும் மழையை வெறுப்பவர் உண்டோ? எப்போது விளைந்தாலும் பயிரின் பச்சையை விரும்பாதோர் உண்டோ ?
அப்படியேதான் பாண்டியூரனும் இன்றைக்குத் தோன்றுகிறார்.
ஒரு நிதானமான வாசகனாக அவரை அணுகுகையில் மரபென்ற பெயரால் அவருக்குப் போர்த்தப் பட்டிருக்கும் தடித்த திரைகள் அகல்வதைக் காணலாம். மரபுக் கவிதையென்றால் மிகவும் வலிந்து சொற்களை இழுத்து வந்து, மொழியின் கழுத்தைத் திருகி ,கருகலானதோர் சொற்கூட்டத்தை சட்டகமொன்றுக்குள் அடைப்பது என்ற எண்ணத்தைப் பாண்டியூரனின் மொழி லாவகம் தகர்த்தெறிகின்றது. மொழியைக் கையாள்வதில் அவருக்குள்ள தேர்ச்சி வியக்க வைக்கின்றது. இன்று முகநூலில் கவிதை என்ற பெயரில் வதை செய்யும் பலரையும் பார்க்கும் போது பாண்டியூரன் போன்றோரின் மேன்மை பளிச்சிடுகின்றது. அவருடைய சொல்லாட்சி ,கற்பனை வளம், வாழ்க்கை பற்றிய நோக்கு ,சமகாலம் குறித்த பிரதிபலிப்பு, அநீதி குறித்த தார்மீக ஆவேசம் என்பன பாண்டியூரனின் கவிதைகளுக்கு இன்றைக்கும் மரியாதை செய்யத் தூண்டுகின்றன.

இவையெல்லாம் காலம் கடந்த கவிதைகள் என ஒரு விரல் சொடுக்கில், உதட்டு நெளிப்பில் கடந்து சென்று விடுவது பெரிய காரியமல்ல. ஆனால் எல்லா இலக்கியப் படைப்புகளையும் காலம் கடந்துதான் செல்லப் போகின்றது. ஆயினும் கால வெள்ளத்துடன் எதிர்நீச்சல் போடும் படைப்புகளே நம் கவனத்துக்குரியதாகின்றன.

அந்த வகையில் பாண்டியூரன் ஒரு முக்கியமான படைப்பாளியாகவே இவ்வளவு வருடங்கள் கழிந்தும் புலப்படுகின்றார்.

நமது இசையுலகின் பாடகர்களை சற்று உற்று நோக்கிப் பாருங்கள். எவ்வித அலட்டலுமின்றி மிகவும் சிரமமான பாடல்களைக் கூட அனாயசமாகப் பாடி விட்டுச் செல்லும் பாடகர்களைப் பார்த்திருக்கிறோம். சில பாடகர்கள் முகத்தை அஷ்ட கோணலாக்கி, உடலை நெளித்து சுருட்டி மடக்கிப் பாடியும் உச்சஸ்தாயியில் சறுக்கி விடுவார்கள். கவிஞர் பாண்டியூரன் முதலாவது ரகம். முற்றத்தில் கொட்டும் பூச் சொரியல் போல வார்த்தைகள் அவருக்கு சர்வ சாதாரணமாக வந்து விழுவதைப் பார்க்கின்றோம்.

மரபுக் கவிதையை சிறப்பாகக் கையாண்ட இந்தப் பிரதேசத்தின் முக்கிய கவிஞர்களில் பாண்டியூரனும் ஒருவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கவியரங்குகளில் பொதுவாக மரபுக் கவிதைகள் அவற்றின் ஓசையினால் சிறப்பிடம் பெறுகின்றன. துணுக்குகளை, மரண அஞ்சலியை திருமண வாழ்த்தைக் கூடத் தங்கள் குரலோசையின் ஏற்ற இறக்கத்தினால் கவிதையாக நினைக்கும்/ கவிதையாகப் பார்க்கும் ஏராளமான கவிஞர்கள் நம் பிரதேசத்தில் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்.

‘தை மகளே வா....
கை நிறையப் புக்கை தா !’ என்றோ

‘சித்திரைப் புத்தாண்டு வந்தது
நித்திரை கலைந்து நானெழுந்தேன்
பத்தரை மணிக்கு நான்
கத்தி படத்துக்குப் போவேன்’

என்றோ குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் நமது கவிஞர்கள் மத்தியில் உலகளாவிய ஒரு பார்வையைக் கவிஞர் பாண்டியூரன் கொண்டிருந்தார் என்பது வியப்பூட்டும் அம்சம்.

இயற்கை, காதல் ,மொழிப்பற்று , இன உணர்வு, பக்தி, ஊர் ,உலக நடப்புகள் எனப் பல அம்சங்களையும் அவருடைய கவிதைகள் பிரதிபலித்திருக்கின்றன. மண்டேலா போன்றோரைப் பாடியிருக்கிறார்.

‘ நைஜீரியா புதைகுழி நிரம்புகின்ற போர்க்களம் ஆவதேனோ ’ எனத் தன் கவிதையில் மனம் குமுறியிருக்கிறார்.

கவிஞர் பாண்டியூரன் என்னுடைய நெருங்கிய உறவினர். மிக அழகன். பந்தா இல்லாத சாதாரணன். அவர் மீது ‘மூத்த மனிதர்’ என்ற மரியாதை இருந்ததுண்டு. அவ்வளவாக நெருங்கிப் பழகியதில்லை.

1989 ல் என்னுடைய ‘உள்மன யாத்திரை’ சிறுகதைத் தொகுப்பு வெளியான போது பாண்டிருப்பு மகாவித்தியாலய மண்டபத்தில் ஓர் அறிமுக விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் கவிஞர் பாண்டியூரன் என்னை வாழ்த்தி ஒரு கவிதை பாடினார். அந்தக் கவிதையில் அவர் என்னைப் பற்றிக் குறிப்பிட்ட நல்லியல்புகள், வர்ணனைகள் எல்லாம் எனக்குரியவைதானா என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கேட்டுக் கொண்டேன். கவிஞர்கள் என்றால் பொய்யுரைப்பவர்கள்தானே எனப் பதிலையும் கூறி ஆறுதலடைந்தேன்.

1990 ல் அவர் மறைந்தார். பலருக்கும் தெரியும். காலத்துக்கு முந்திய மரணம் அது. அவர் தன் வாழ்நாளில் கவிதைத் தொகுப்பைப் பார்த்திருக்க வேண்டியவர். உன்னதமான படைப்பாளிகள் பலருக்கும் நிகழ்ந்தது போலவே தன் வாழ்நாளில் அது அவருக்கு சாத்தியமாகவில்லை. அவர் மறைந்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தொகுப்பு வெளியாகின்றது. இந்த நூல் இன்று அச்சுருவில் வெளிவருவதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் இருவர்.

ஒருவர் தம்பி, சிவ வரதராஜன். இந்த நூலாக்க முயற்சியின் பின்னாலிருந்த அவருடைய உழைப்பு சாதாரணமானதல்ல. பிரசுரங்களைத் தேடி சேகரித்தமை, தட்டச்சு செய்வித்தமை, முன்னுரையாளருக்காக அலைந்தமை, இந்த முயற்சிகளில் அவர் சாணேறுவதும் முழம் சறுக்குவதுமாக சிரமப்பட்டமை எல்லாம் எனக்குத் தெரியும்.

இந்த நூல் வெளிவருவதில் முக்கிய பங்காற்றிய இன்னொருவர், கிழக்குப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மதிப்புக்கும் அன்புக்குமுரிய தம்பி திரு.நவநீதன் சரவணமுத்து அவர்கள் இந்த ஸ்தானத்தில் இல்லாதிருந்தால் இந்த நூலாக்கம் இவ்வளவு விரைவில் சாத்தியமாகியிராது. அவர் நமது பிரதேசத்தை சேர்ந்த ஒரு கலைஞர் – படைப்பாளி என்ற வகையில் இந்த நல்ல முயற்சிக்கு முன்னுரிமை தந்தார்.
அவர் பணிப்பாளராகவிருக்கும் காலத்தில் இந்தத் திணைக்களத்தின் நடவடிக்கைகளில் ஓர் உற்சாகத்தையும், புத்துணர்வையும், மக்கள் தொடர்பையும் காண்கிறேன். பத்தாம் பசலித் தனங்களை ஊக்குவிக்காமல் சமகால கலை-இலக்கியங்களின் பால் அவர் காட்டும் அக்கறையை இத்தகைய திணைக்களங்கள் சந்திப்பது குறிஞ்சி மலர் பூப்பதற்கொப்பானது.

இந்நூல் வெளி வருவதில் அவர் ஆற்றிய பங்குக்கு சம்பிரதாயங்களை மீறிய நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. எனினும் அவற்றுள் ஒரேயொரு கவிதையை இங்கே வாசித்துக் காட்ட விரும்புகிறேன். பெண்ணுடல் சார்ந்த மாயப் பிம்பங்களையும், மிகை வர்ணனைகளையும் கொண்ட கவிதைதான் இது. ஆனாலும் கவிஞரின் சரளமான சொல்லாட்சி கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.
கவிதையின் தலைப்பு சிற்பி
---------------------------------------------------
கண்களா அவைகள்.....? ஏழு
கடலினை உண்ட நீலக்
குண்டுகள்! எனது கண்ணைக்
குறு குறுத் துண்ணுங் காதல்
வண்டுகள் ! வேட்டைக் கென்றே
வடித்தகூர் வேல்கள் வாவிக்
கெண்டைகள் காதல் வீச்சிற்
கிசைந்திடுங் கயல்கள் அன்றோ !

கொங்கையா அவைகள் .....? இல்லைக்
கூர்நுதிக் கோபுரங்கள் !
மங்கையின் அகத்தில் உந்தி
வளர்ந்த பேராசைக் கோட்டை!
தங்கமாம் கலசம் ! கோயிற்
தழிசை சேர் புக்கைக் கட்டி
அங்கமாய் எழுந்த நெற் போர்
அந்தரத் தெங்கின் காய்கள்!

கன்னமா அவைகள் ? போதைக்
கட்குடம் கனிந்த மா! ஒண்
மின்னலை உருக்கிச் சேர்த்து
மிளிர் கலைப் பளிங்குக் கிண்ணம் !
செந்நிறத் தந்தி வானச்
சித்திரம் ! கவிதை யூறும்
பொற்கலம் ! புலவர் நெஞ்சிற்
பொதிந்துள கருவின் கோலம் !

இதழ்களா அவைகள்...? தேனை
இயைந்தபோ திறைக்கும் ரோசாக்
கதவுகள் ! பவளக் கல்லிற்
கடைந்த இன் கீற்று! கன்னக்
கதுப்பிலே சுரந்த ஊற்றிற்
காய்ச்சிய தோடம் மிட்டாய்!

உதவுவதாலோ வைத்தார்
உதடுகள் என்று உண்ண...?

பற்களா அவைகள்...? இல்லை
பவளத்திற் பதித்த முத்து !
விற்கணைக் கொப்பாய் பாயும்
விரிசுடர் மின்னல் வீச்சு !
முற்றிடா மாதுளையின்
முளையினால் றொடுத்த ஆரம் !
கற்பனைக் கடங்கா தானாற்
கண்களுக்கடங்கும் சிற்பம் !

இடையென ஒன்றும் உண்டோ....
இல்லையே! இல்லா தான
படியிறாற் றானோ சொல்லிற்
படைத்தனர் இடையென் றஃதை?
கடைந்தவன் எவனோ இந்தக்
கவின்பெறு தெய்வந் தன்னை....?
படைத்தவன் எவனோ இன்பம்
படைத்திடுஞ் ‘சிற்பம்’ தன்னை

கூந்தலா ....அவைகள்? மாரிக்
குளிர்மழைக் கால்கள் ! மார்பிற்
சார்ந்தது தவழ்ந்து ஆடும்
சாரலின் முகில்கள் ! அஃது
காந்தளா ? பிஞ்சு வெண்டிக்
காய்களா ....விரல்கள் தொட்டாற்
காந்தமாய்ப் பற்றும் பொன்னின்
கம்பிகள் ! கனிகள் ! கண்டீர்

கால்களா அவைகள்....? இல்லை:
கதலியின் குற்றி ! சீனாப்
பாலிலே செய்த பாவை !
பசும் பொன்னின் பஞ்சுத்தண்டு!
சூலிலே முதிர்ந்த செந்நெற்
குடலையின் தாள்கள்! இல்லை ;
நூலிழை யிடையிற் றொங்கும்
நூதனம் காணீர்! காணீர் !

பாதமா அவைகள் ...? இல்லை
பனிமலர் மென்மை கற்கும்
சாதனம் ‘பாரதம்’ என்ற
பண் கலை பிறந்த பீடம் !
வேதநா யகனார் பொன்னை
விளங்கிடப் பெண்ணுக் கீந்த
ஆதனம்! கலைஞர் நெஞ்சில்
ஆடிடும் ‘சிற்பம்’ ; அஃதே!
1965 ல் இந்தக் கவிதையை அவர் எழுதியிருந்தார்.

நன்றி. வணக்கம்.

உமா வரதராஜனின் உரை

ஏ.எல்.எம்.சலீம்