
posted 7th October 2021
நெஞ்சு நோவு பற்றிய சில விடயங்களை நான் இங்கு பகிர விரும்புகிறேன். இவற்றில் பல விதமான நோவுக்கள் சாதாரணமானவைதான். ஆனால், இவற்றுள் எவை சாதாரணமானவை, எவையெவை கடுமையானவை என்று பரீட்சித்துப் பார்த்து முடிவு சொல்லுமட்டும் எவருக்கும் தெரியாது.
ஆனால் நான் இங்கு கூறுவது முக்கியமான தொன்று. இது எந்த விதமான புத்தகங்களிலும் இல்லை. இவ்வாறும் இது உருவாகலாம் என்று படிக்கவுமில்லை அல்லது அதை நான் நினைக்கவுமில்லை. இது எனது சொந்த அனுபவத்தில் இருந்து நான் உங்களுக்குத் தருகின்றேன். அனைவருக்கும் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
எல்லாவற்றிற்கும் முன்பு நான் ஒரு சில உதாரணங்களைச் சொல்லுகின்றேன். இவை அனைத்தும் உண்மைச் சம்பவங்கள்; இவற்றையிட்டுப் பயப்பட வேண்டாம். ஆனால், முன்னெச்செரிக்கையாக இருக்கலாமல்லவா?
உதாரணம் 1 - நான்தான் - எனக்கு காஸ்றிக் பல தகாப்தங்களாக இருந்தது. சின்ன வயசில ஆயுள்வேத மருத்துவம் செய்ய எனது தாய் கூட்டிச் செல்வா. கொஞ்ச நாள் சுகமாக இருக்கும். பிறகு ஆங்கில வைத்தியம் தான். பல விதமான குளிசைகளும், கூட்டுக் குளிசைகளையும் எடுத்துக் கொள்வது வழக்கம்.
குறிப்பு:- நான் பெற்ற இந்த அனுபவம் உங்களுக்கும் பிரயோசனமாகவும் இருக்கலாம். இல்லாவிட்டால், நீங்கள் இது தப்பானது என்றால் இதைக் கணக்கெடுக்காமலும் விடலாம். நான் சொல்லுபவற்றை முழுதாக நம்ப வேண்டுமென்றும் இல்லை.
முதலில் நான் நெஞ்சு நோவைப் பற்றி சொல்லுவது அநேகமாக எல்லாரும் அறிந்ததே. ஆனால்,கடைசியாகச் சொல்லுவது உங்களுக்குத் தெரியாதவை. அதற்காக கடைசியானதை மட்டும் வாசித்து விட்டு சாதாரணமாக உள்ளதை அறியாமல் உங்கள் வாழ்க்கையை நீங்களே கோட்டை விட்டு விட வேண்டாம்.
இப்போது சாதாரணமாக ஏற்படும் நெஞ்சு நோவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
நெஞ்சு நோவு என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் உண்டாகும். அதுவும் இரவிலே நெஞ்சு நோவு வந்தால் அதுவும் குறிப்பாகச் சாமத்தில் நெஞ்சு நோவு உண்டானால் சொல்லத் தேவையில்லை. பயத்திலேயே அரைவாசி உயிர் கூட வீட்டில் இருப்பவர்களுக்குப் போய்விடும். இதனாலேயே நோவு வந்தவருக்கு வந்த நோவு மிகவும் அதிகமாகியும்விடும். கடைசியாக, வீட்டிலே உள்ள எல்லாருடைய நிம்மதியும் போய்விடும். எல்லாரும் மனநிலையால் உடைந்து போய்விடுவோம். அந்தச் சமயம் அவரவருடைய உயிர் அவரவர்வகளிடம் இருக்கவே இருக்காது. வீட்டில் உள்ள எல்லாரும் மரணத்தின் விளிம்பிற்குப் போனது போன்ற ஒரு நிலைமை உருவாகும். எல்லா விதமான கை வைத்தியங்களையும் பாவிப்போம். எப்போது நோவு சுகமாகுதோ அப்போதுதான் எல்லாரும் பெருமூச்சு விட்டுக்கொண்டு வீட்டின் மூலையிலே குந்தின காலங்களும் உண்டு.
நெஞ்சு நோவு அதிகமாக பலவித காரணங்களுக்காக ஏற்படும். அதிகமான காரணங்கள் எல்லாம் சாதாரண வருத்தங்களுடன் சம்பந்தமானதாக இருக்கும். நமது அறிவிற்கு எட்டிய நெஞ்சு நோக்களின் வகைகளையும் அவற்றின் குணங்களையும் பற்றிப்பார்ப்போம். அத்துடன், அவை வெகு பயத்தை உண்டாக்கினாலும் இலகுவாகக் குணமாகிவிடுவதுண்டு. பலவித காரணங்களாகக் கூறப்படுன இவற்றினில் ஒன்றாக இருக்கலாம் அல்லது ஒன்றுடன் ஒன்று சேர்ந்தனவாகவும் இருக்கலாம்.
இவற்றை நாங்களே நோய்க்கண்டறிதல் (diagnosis) செய்து கை மருந்தையும் (home remedy) செய்து குணமாக்கிக் கொண்ட காலங்களும் உண்டு. அப்போது நம்மை நாமே தேற்றிக் கொற்ளுவோம். அதை மற்றவர்களுக்கும் சொல்லி அவர்களையும் காப்பாற்றவும் செய்வோம்.
இவற்றில் பொதுவாக (Common) உள்ள நெஞ்சு நோக்களைப் பார்ப்போம். ஆனால் இவை இதயத்துடன் சம்பந்தமானது அல்ல. என்றாலும் இவை எவ்வாறு சம்பந்தமாகிறது என்பதையும் பார்ப்போம்.
அவையாவன;
i) காஸ்றிக் என்று சொல்லுவோம் - இதனால் உண்டாகும் நெஞ்சு நோவு
ii) சளி வந்தபோது அல்லது இருமலுடன் சேர்ந்து உண்டான சளி நெஞ்சில் கட்டுவதால் உண்டாகும் நெஞ்சு நோவு என்று கூடச் சொல்லுவோம்
iii) நெஞ்சில் உள்ள சதை (muscle) நெரிவினால் உண்டான நெஞ்சு நோவாக இருக்கலாம்
iv) வாயு அல்லது உறைப்புச் சாப்பாடு சாப்பிட்டதால் இருக்கலாம் - அதாவது, எரிவினால் உண்டாகும் நோவாகக்கூட இருக்கலாம்
இப்படிப் பல விதமான தற்காலிக காரணங்களாநெஞ்சு நோவு உண்டாகலாம்.
காஸ்றிக் என்பது சாதாரணமாக ஒரு வருத்தமாக இருந்தாலும் ஆனால், ஒரு சிலருக்கு அது இருதயத்துடன் சம்பந்தமாக இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அநேகமானவருக்கு இருதயத்தின் இரத்தக்குளாய்களின் சுருக்கத்தினாலான உண்டாகும் நோவு காஸ்றிக்கால் மறைக்கப்பட்டுவிடும். எனவே, அடிக்கடி காஸ்றிக் வருத்தம் இருக்குமானால் பார்மசியில் மருந்துகளை வாங்கிக் குடிப்பதை விட்டு அதற்குரிய வைத்திய ஆலோசனையப் பெறுவது நல்லது.
சாதாரணமாக, இருதயத்துடன் சம்பந்தமான நெஞ்சு நோவின் அறிகுறிகளாக;
நடு நெஞ்சில் நோவு வரும். இந்த நோவு குறிப்பாக இடது பக்கமும் வரலாம். அத்துடன் அந்த நோவு இடது கைக்கு பரவவும் செய்யும்.
இந்த நோவு சிலருக்கு நடக்கும் போதோ அல்லது வேலை செய்யும் போதோ வரலாம். அல்லது வந்த நோவு கூடலாம். இவ்வாறு நோவு வரும்போது நடப்பதையோ, வேலை செய்வதையோ உடன் நிற்பாட்ட வேண்டும். அத்துடன் உடனடியாக வைத்தியசாலைக்குப் போக வேண்டும் (அம்புலன்ஸிற்கு ஆளைப்பு விட வேண்டும்)
ஆனால், சில சமயம் இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் கவலையீனமாக இருக்க வேண்டாம்.
- நீண்ட கால (பல வருடங்களாக) காஸ்றிக் - இதற்கு வயிற்று நோவு வரவேண்டுமென்றல்ல. வாயு (அடிக்கடி ஏப்பம்) வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
- இடக்கை விறைப்பு. உதாரணமாக, உங்கள் கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு நித்திரை கொள்ளும் சிலரின் இடக்கையில் கொஞ்ச நேரத்தில் விறைப்பு ஏற்படலாம்
- தொடர்ந்து இருந்து வேலை செய்பவருக்கு (அலுவலக வேலை செய்பவர்) - அவர்களது இடக்கால் விறைப்பு ஏற்படுமானால் - கவனத்தில் கொள்ளுங்கள்
- நெஞ்சு நோவு ஏற்படும் போது அது இடக்கைக்கோ அல்லது முதுகுக்கு பரவுவதை விட்டு, இடக்கையின் முளங்கை உளைவு ஏற்பட்டால் கவனத்தில் கொள்ளுங்கள் - இவ்வாறான நோவு அதிகமாக கணணியில் வேலை செய்பவர்கள் அதற்குரியவாறு இருந்து (positioning) வேலை செய்யாவிடில் அவர்களுடைய முளங்கையில் நோவு ஏற்படலாம்.இதனால் நாங்கள் கவலையீனமாக இருந்து விடுவோம்.
இந்த அறிகுறிகள் வேறுபட்டதாக இருந்தாலும், நெஞ்சு நோவு, நடக்கும் போதோ அல்லது வழமையாக செய்யும் வேலை செய்ய முடியாமல் போனாலோ, அந்த நெஞ்சு நோவு நடந்து போவதை நிறுத்தினாலோ அல்லது செய்யும் வேலையை நிறுத்தும் போது குறைந்தாலோ, இந்த நெஞ்சு நோவு இதயத்துடன் சம்பந்தமெனக் கண்டறிந்து, தேவையான பரிசோதனைகள் செய்து முடித்து இருதய வருத்தமெனக் கண்டறிந்து சிகிச்சை செய்து முடிந்ததும் இருந்த அறிகுறிகள் அனைத்தும் இல்லாமல் போய் விட்டதனால், மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருதய வருத்தத்துடன் சம்பந்தப்பட்டதென நாங்கள் கவனத்தில் கொள்ளலாம்.
எனவே, ஆரம்பத்திலிருந்து எமது உடலில் வரும் வித்தியாசங்களை அவதானித்து வந்து அதற்கு உடன் நடவடிக்கை எடுத்தால் நாம் சுகாதாரமாக வாழலாம்.
இதனைப்பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் எமக்கு எழுதலாம்;
Email: articles@thaenaaram.com