
posted 11th October 2021

மு.கா.ஊடகப் பிரிவு
மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 21ஆவது நினைவேந்தல் நிகழ்வு இணையவழியூடாக(Zoom) , அவரது நினைவு தினத்தன்று(16.9.2021), முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில், இடம்பெற்றபோது, எழுத்தாளரும் கவிஞரும் சென்னையில் வசிக்கும் குணசித்திர நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன், மர்ஹூம் அஷ்ரபைப் பற்றி பகிர்ந்து கொண்ட நினைவலைகள்.
என்னுடைய தோழரும் , முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், எனது பல்கலைக்கழக தோழன் மன்சூர் ஏ காதிர், எனது நீண்ட கால நண்பர் பௌஸர் போன்ற பலர் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்.
மறைந்த அஷ்ரபை தந்தை செல்வநாயகத்தை விட்டுவிட்டு தனியே நினைவு கூருவது சாத்தியமில்லை. மறைந்த செல்வநாயகமும் அஷ்ரபும் இன விடுதலையின் ஆன்மீக முகங்களாகத் திகழ்ந்தவர்கள். கிறிஸ்தவரான செல்வநாயகத்தை பொதுவாகத் தமிழர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.அந்த நாட்களில், அல்லது 70களுக்கு முன்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பக்தி மார்க்கம் மேலோங்கி இருந்தது. பக்தி மார்க்கம் மேலோங்கிய இருந்த அந்தக் காலகட்டம் மிக முக்கியமானது. சிறந்த பேச்சாளரான ] அஷ்ரப், தன்னுடைய வழிகாட்டிகளில் தந்தை செல்வாவும் ஒருவர் என என்னிடம் கூறி இருக்கிறார்.அஹிம்சை வழியில் இலக்கை நோக்கிப் பயணிப்பதில் தந்தை செல்வாவும்,தலைவர் அஷ்ரபும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
முஸ்லிம் மக்கள் மத்தியில் 70 களுக்கு முன்னர் மேலோங்கி இருந்த சூபித்துவம் என்றறியப்பட்ட பக்தி மார்க்கத்துடைய மகிமைதான் முக்கியம். பக்தி மார்க்கத்தை தமிழ்,முஸ்லிம் தரப்புக்கள் இரண்டும் இழந்த காலப்பகுதிதான் துயரம் நிறைந்த கால கட்டங்களாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இச்சந்தர்ப்பத்தில் அஷ்ரபுடைய கவிதைகள் மிகவும் முக்கியமானவை என்பதை ஏ.எல். தவம் ஆற்றிய உரையைக் கேட்ட போது உணர்ந்தேன்.
அஷ்ரபுடைய அரசியல் தொடர்பான தேடலில் எங்கள் இருவருக்குமிடையே இருந்த தொடர்பாடல் குறிப்பிடத்தக்கது. நாங்கள் அடிக்கடி சந்தித்ததில்லை. ஆனால், எங்களுடைய முக்கியமான இரண்டு சந்திப்புகள் ஒரே மாதிரியானவையாக இருந்தன. ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் கண்ட கனவுகளையும் அதை நனவாக்கக் கூடிய ஆய்வுகளையும் பற்றி ஓர் இரவு முழுக்கப் பேசினோம். இறுதியாகச் சந்தித்தபோதும் இரவிரவாகவும்,பகலிலும் பேசினோம்.
அவருடனான முக்கிய சந்திப்பு, அம்பாறை கலவரத்தில் தப்பியோடி வந்த நகரச்சுத்தி தொழிலாளர்களை பாதுகாக்கும் பணியில் நான் கல்முனையில் இருந்தபோது நிகழ்தது.அம்பாறை செல்லும் வழியில் அவர்களை பலாத்காரமாகக் கொண்டு செல்ல இராணுவம் முயன்ற போது என்னுடைய உடலின் மீதுதான் நீங்கள் அவர்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நான் அவர்களோடு மோதினேன். அதனால் பகலில் முகாமிலும் இரவில் உயிர் அச்சத்தோடும் இருக்கும் சூழலில் ஒரு நாள் எனக்குப் பாதுகாப்பாக திடீரென்று அஷ்ரப் வந்து தன்னுடைய வீட்டுக்கு வருமாறு என்னை அழைத்துச் சென்றார்.
அப்போது எனது கையில் 'தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்' எழுத்துப் பிரதி இருந்தது. அவர் திருமணமான புதிது. மனைவியோடு வந்திருந்தார். அப்படி இருந்தும் கூட, அன்றிரவு முழுக்கவும் பேசிக் கொண்டிருந்தோம். என்னுடைய எழுத்துப் பிரதியை அவர் வாசித்தார். பிறகு நாங்கள் நிறைய ஆய்வு செய்து கடந்த கால, எதிர்கால சம்பந்தப்பட்ட விடயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுதேயே தமிழ் இளைஞர்கள் மத்தியிலிருந்து பாரம்பரியமான ஆன்மீக விழுமியங்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலும் அத்தகையதொரு போக்கு ஆரம்பமான காலம். இவற்றைத் தாண்டி தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்தி, அரசியல் செய்வது பற்றிய கனவுகளோடு நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் பௌஸர் பற்றியும் என்னிடம் அவர் கூறி இருக்கிறார். அந்தச் சந்திப்பில் நாங்கள் பேசிய விடயங்கள் அலாதியானவை.
கடைசிச் சந்திப்பு அவரது இறுதி நாட்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர். 2000 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஒரு குறுகிய பயணத்தில் கொழும்பு வந்திருந்தபோது நிகழ்ந்தது.அடுத்த நாள்; பின்னேரம் நான் நோர்வே செல்ல வேண்டியிருந்தது. அவர் அழைத்ததற்கிணங்க,நான் அவரைச் சென்று சந்தித்தேன். பகலெல்லாம் பேசினோம். அவர் பிறகு என்னை விடவில்லை. அன்று மாலை அங்கிருந்த எல்லோரையும் போகச் சொல்லிவிட்டார். "நான் ஜெயபாலனோடு தனியாகப் பேசப் போகிறேன்"எனக் கூறி விட்டார்.
நாங்கள் இரவு அமர்ந்திருந்து பேசினோம். அவரது மனைவி உணவு பரிமாறினார். விடியும் வரை பேசினோம். அந்த விடயங்கள் கூட முந்திய சந்திப்பில் பேசிய விடயங்கள் போன்று எதிர்கால, சமகால முஸ்லிம் அரசியல் பற்றியதாகும்.இறுதிச் சந்திப்பில் பேசிய விடயங்கள் , முஸ்லிம்களின் எதிர்கால முன்னெடுப்புகளை, அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்புதல் தொடர்பான உபாயங்கள் பற்றியதாகும். விடிய 5 மணிக்கு என்னை காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பினார். திரும்ப 6 மணிக்கு திரும்ப வரச் சொல்லி கார் அனுப்பியிருந்தார் . அப்போது அதை மறுக்க முடியாது நான் திரும்ப போனேன். அவர் சொன்னார் "ஜெயபாலன் உங்களுக்கு எயார்போர்ட் போவதற்கு ஒரு கார் தருகின்றேன். இன்னும் பேச வேண்டி இருக்கிறது. என்னுடன் கண்டிக்கு வாருங்கள்" என்றார். என்னை கண்டிக்கு அழைத்துச் சென்றார். என்னுடைய 'தேசிய இனப் பிரச்சினை முஸ்லிம் மக்கள்' என்ற புத்தகத்தையும் எனது இன்னொரு புத்தகத்தையும் தன்னுடைய முகவுரையோடு வெளியிடப் போவதாகச் சொன்னார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அன்று காலையில் கண்டிக்கு என்னை அழைத்துச் சென்றது தோழர் ரவூப் ஹக்கீமை அறிமுகப்படுத்துவதற்காகத்தான் என்று நினைக்கிறேன். அந்தச் சந்திப்பில் மாவனெல்லை என்ற இடத்தில் ஒரு வீட்டுக்குப் போய் உணவருந்தி விட்டு, ரவூப் ஹக்கீமை அறிமுகப்படுத்தியதுதான் அதில் முக்கியமானது. அதுதான் என்னுடைய கடைசிச் சந்திப்பு. இந்த இரண்டு முக்கிய சந்திப்புகளிலும் நாங்கள் பகிர்ந்து கொண்ட விடயங்கள் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன்.
தந்தை செல்வா - அஷ்ரப் இருவருடைய அரசியலிலும் பல நூற்றாண்டுகளாக தமிழர்கள், கிறிஸ்தவர்கள்,சைவர்கள்,முஸ்லிம்கள் ஆகியோரை ஐக்கியமாகப் பிணைத்;து வைத்திருந்த பக்தி மார்க்கம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.சைவர்கள் மத்தியில் இன்றிருப்பது மாதிரியான மதவாதப் போக்குகள் தலைதூக்குகின்ற தன்மை பெரிதாகக் காணப்படவில்லை. . ஆறுமுக நாவலர் போன்ற சிலருடையதை வாசிக்கும் போது அது கிறிஸ்துவத்திற்கு எதிராக இருந்தாலும், அது பெரிதாக இருக்கவில்லை. அதில் பக்தி மார்க்கம் இருந்தது. முஸ்லிம் மத்தியிலும் சூபித்துவம் பக்தி மார்க்கமாக மேலோங்கியிருந்தது.
இதுதான் வரலாறும் , ஒருமைப்பாடும் .நாங்கள் இன்றைக்கு நினைத்து ஏங்குகிற அந்தக் கால கட்டத்தின் மகிமை எனக் கூறலாம்.எங்களுக்கிடையிலான அந்த இரண்டு சந்திப்புகளிலும் அவர் தான் ஒரு சூபி என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இதை ஒரு செய்தியாக இங்கு நான் உங்களிடம் குறிப்பிட வேண்டும்.
இரண்டு தரப்புகளிலும் விடுதலைக்கான போக்குகள் இருந்தன.தமிழர்களின் தோல்விக்குக் காரணம், வெறுமனே போராட்டம் சார்ந்ததல்ல. அவர்களுடைய உள்வாரியான விடயங்களில் வன்முறையைக் கையாண்டதுதான் .அதனால் வன்முறை ஒரு சித்தாந்தமாக மாறி விடுகிறது. உள்வாரியான விடயங்களை ஒன்றாக இருந்து பேசுவதை விடுத்து,அண்ணன் தம்பி கூட மனம் விட்டுப் பேச முடியாத ஒரு சூழலுக்கு நாங்கள் பழக்கப்பட்டுப் போனால், அதற்கான சூழலை உருவாக்கி விட்டால் வன்முறை ஒரு சித்தாந்தமாக மாறிவிடும்.
இவ்வாறாக70 களில் தமிழர்களின் மத்தியிலும் 70க்குப் பிறகு முஸ்லிம்கள் மத்தியிலும் உள்ளார்ந்த வன்முறைகள் கட்டுப்படுத்தப்படாததன் விளைவாக முக்கியமான பல சம்பவங்கள் நடந்தன. நீங்கள் அதிகமாகப் பேசுவதில்லை ; அதிகமாக உணர்வதில்லை. ஆனால், சர்வதேச சஞ்சிகைகளில் வந்த கட்டுரைகளை நீங்கள் இணையத்தில் Google இல் தேடினீர்கள் என்றால், காத்தான்குடியைப் பற்றி நிறைய கட்டுரைகள் இருந்தன. சின்னச்சின்ன உரசல்கள் வந்த நேரத்தில் அத்தகைய வன்முறைகள் அமுக்கப்பட்டிருக்கும் என்றால் , இன்று முஸ்லிம் சமூகம் மிக உயர்ந்த நிலையில் இருந்திருக்கும். இதேபோன்றுதான் தமிழர்களுக்கும். தமிழர்களின் உள்ளார்ந்த வன்முறைகளும். தங்களுக்கு உள்ளே உள்ள பிரச்சினைகளை அடித்தடக்குவதற்கு ஒருவரும் தயாராக இருக்கவில்லை. எல்லோரும் வெறும் பார்வையாளர்களாக இருந்தமையும் தமிழர்களின் அழிவுக்கு ஒருவிதத்தில் காரணமாக இருந்தது. இந்த விடயத்தைப் பற்றி நாங்கள் பேசினோம். இந்த விடயத்தின் பின்னணி எப்படி வந்தது என்று பேசினோம்.
1970 களில் தமிழ்ப்பகுதிகள் உட்பட இலங்கை முழுவதிலும் பொருளாதாரத் தடை இருந்தது. அந்தத் தடையால் சிங்கள மக்கள் பெரிதாகப் பாதிக்கப்பட்டாலும், தமிழர்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்தவரையில் பொருட்களின் விலையேற்றத்துடன் பல்வேறு விடயங்கள் நடந்தன.முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில் தமிழர்களில் மத்திய தர வகுப்பினரின் வளர்ச்சி சற்று வேறுபட்டது. மிஷனரிகளுடைய காலங்களில் ஆரம்பித்தது.அந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக 70 'களில் ஏற்பட்ட பஞ்சங்களினால் மலையகத் தமிழர்களில் ஒரு சாரார் அநாதைகளாக வீதியில் அலைய நேர்ந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் மத்திய தர வர்க்கத்தினரின் வளர்ச்சி இருந்தது.
கிழக்கிலும் உரப்பசளை பயன்பாடுகள் வந்ததினால் நெல் விளைச்சலில் நல்ல நிலை தோன்றியது.இந்த சூழலில் முஸ்லிம் மக்களுடைய மத்திய தர வளர்ச்சி ஏற்பட்ட போது தமிழர்களைப் போல் தொடர்ச்சி இருக்கவில்லை. முஸ்லிம்களில் பெரிய நில உடமையாளர்களும், ஓரளவு வர்த்தகர்களும் இருந்தனர்.கிழக்கில். தொடர்ச்சியாக முஸ்லிம்களைப் பற்றி பேசுகிற போது வடகிழக்கு முஸ்லிம்களைப் பற்றியும் தான் பேசுகிறோம். ஆனாலும் வடகிழக்கு முஸ்லிம்களின் அனுபவம் தென் இலங்கை முஸ்லிம்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அங்கிருந்த பெரும்பான்மைச் சமூகத்தில் திடீரென்று அவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்ச்சியும் மத்திய தர வளர்ச்சியும் ஏற்படும் போது அது கொஞ்சம் உரசல்கள் உள்ளதாகத்தான் இருந்தது. எனக்குத் தெரிந்த வகையில் அஷ்ரபுடன் பேசிய விடயங்களைத்தான் சொல்கிறேன்.
அந்த நேரத்தில் அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூதுடைய பங்களிப்பினால்,கல்வி வளர்ச்சி ளற்பட்டது.அதிகமான முஸ்லிம் ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். அதேபோன்று சவூதி அரேபியாவில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. சவூதி அரேபியாவிலிருந்து நிறைய தொழில் வாய்ப்புகள் வந்தன ; செல்வம் கொழித்தது. கூடவே அங்கிருந்து சில சித்தாந்தங்களும் இங்கு வந்து சேர்ந்தன.
எங்களது மத்தியதர வர்க்கத்தினர் வளர்ந்த பிறகு இன ஒடுக்குதல் சார்பான விடயம் மேம்பட்டிருந்ததால், செல்வநாயகத்தினுடைய கால அரசியலில் இருந்து போராட்டத்திற்கு நாங்கள் போய் இருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.
கல்வி சார்பான இன ஒடுக்குதல் இருந்ததால், ஏற்கனவே நான் கூறிய மத்திய தரத்தினரின் வளர்ச்சி இருந்ததால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 70 களிலேயே அவுஸ்திரேலியாவுக்கும் லண்டனுக்கும் வேறு நாடுகளுக்கும் சென்று படிக்கக்கூடியதாக இருந்தது. அவர்களின் காலத்திலேயே ஈரோஸ் போன்ற அமைப்புகள் உருவாகின.
இவ்வாறிருக்க,எங்களுடைய மரபு சார்ந்த தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவுகள்
, உள்வாரியான பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கின்ற ஆன்மீக ரீதியான நல்லியல்புகள் போன்ற எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவசர கதியில்தான் எங்களின் விடுதலை வேட்கை எழுந்தது.அத்தோடு,இரு பக்கத்திலும் சமகாலத்தில் வன்முறையை ஒரு சித்தாந்தமாக கருதும் போக்கு வளர்ந்தது. இதனுடைய விளைவாக 1985 அம்பாறைக் கலவரமாகவும் 1991 இல் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்களை பாதகமாக வெளியேற்றிய நிகழ்வாகவும் உச்சம் பெற்றது.
எனக்கு அஷ்ரபினுள் இருந்த ஆளுமை பற்றி நம்பிக்கையிருந்தது.1990 இல் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 5 ஆண்டு நினைவு நாளில் நான் ஒரு கவிதை வாசித்தேன்.அதில் நான் அறம் பாடியதாகக் கருதப்பட்டது. இத்தகைய ஒரு பண்பை என்னிடம் வளர்த்ததில் தலைவர்அஷ்ரபுக்கு பெரிய பங்கு உள்ளது.
1985 ஆம் ஆண்டு கலவரத்துக்குப் பிறகு அவர் விட்ட அறிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. அதில் அவர் "மருதமுனையைச் சார்ந்த இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தமிழர்களுடைய இடங்கள், கோயில்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படுவதைப் பார்க்கிறேன். முஸ்லிம் என்று சொல்வதை வெட்கப்படுகிறேன் " என்று அரசியலைத் துறந்து கொழும்பு செல்கிறார். உண்மையிலே என்னைப் பொறுத்தவரை,அவரது அந்தக் கூற்றின் தாக்கம் நான் இறக்கும் வரையும் இருக்கும். மறையும் வரை என்னை மனிதனாக வைத்திருக்கும்.
இறுதியாக நாங்கள் பேசியதில், முஸ்லிம்களுடைய எதிர்காலம் பற்றி கதைத்த விடயங்களில் முஸ்லிம் மக்களுடைய பெரிய பிரச்சினையாக இருப்பது பிளவுபட்ட பூமியில் உயிர் வாழ்வது என்பதாகும். பொதுவாக முழு முஸ்லிம்களைப் பற்றியதானாலும், வடகிழக்கை மையப்படுத்தியதாகத்தான் அதிகம் பேசினோம். முன்னைய காலங்களில் பக்தி மார்க்க ஐக்கியம் இருந்ததால் பிளவு அவர்களைப் பெரிதாகப் பாதித்திருக்கவில்லை.
முன்னரெல்லாம், தமிழர்கள் பருத்தித்துறையில் இருந்து பொத்துவில் வரை எங்கள் பூமி என்று சொல்கின்ற நிலையில் இருந்தார்கள். முஸ்லிம்களும் பருத்தித்துறையில் இருந்து அம்பாறை வரை எங்களுடைய பூமி என்ற சொல்கிற சூழலில்தான் இருந்தனர். பக்தி மார்க்க காலங்களுக்குப் பிறகு , அரசியல் மோதல் வந்த காலங்களில் இந்தப் பிளவு நிதர்சனமாகிவிட்டது. . இந்தப் பிளவை சீர்செய்து நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, புவியியல் ரீதியில் இணைப்பதை மேல் மட்ட அரசியலால் செய்ய முடியாது என்பதால் ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசங்களிலும் துடிப்பான இளைஞர்களை உள்ளடக்கிய கிளைகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதைப் பற்றியும் நாங்கள் பேசினோம். அந்தக் கிளைகளை புதிய தொழில்நுட்பம் மூலம் முஸ்லிம் பிரதேசங்களை இணைந்ததொரு புவியிலாக மெய்நிகராக மாற்றுவதைப் பற்றிப் பேசினோம்.
அவர்கடைசியாகப் பேசிய முக்கிய விடயம், முஸ்லிம் மக்களுடைய குடியிருப்புகள் பற்றியதாகும். நானும் அதனை வலியுறுத்தினேன். 10, 20 பேர் சேர்ந்து நவீன தொடர் மாடியாகக் கட்டங்களைக் கட்டியெழுப்பி ,வளவுகளை மிச்சப்படுத்த வேண்டும். காத்தான்குடிக்குப் போனால் எனக்கு கண்ணீர் வரும். மூச்சு விடக் கூட இடம் இல்லாதமாதிரி இருக்கும் அந்த ஊரில் பிள்ளைகள் விளையாடுவதற்கு, மழை நீர் நிலத்தடிக்கு வழிந்தோடுவதற்கு , எல்லாவற்றிற்கும் மேலாக வளவை மிச்சம் பிடிப்பதன் அவசியம் பற்றியும் தொடர்மாடி வீடுகள் உருவாக வேண்டும் என்றும் பேசினோம்.
தொடர்ந்து பேசுவதற்கு இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன. நேரம் கருதி சுருக்கிக் கொள்கிறேன்.
மொத்தத்தில்,எனது பார்வையில் தலைவர் அஷ்ரபும், தந்தை செல்வாவும் இன ஐக்கிய- சர்வ மத சமரசப் பார்வையின் இரண்டு முகங்கள் என்பேன்.

ஏ.எல்.எம்.சலீம்