
posted 28th September 2021

மதகுருமார்கள் வெறுப்பூட்டுகின்ற பேச்சுக்களை பேசுவதற்கு தூண்டப்படுவதும், செயற்படுவதும் சம்பந்தமாக அவர்களை தண்டிப்பது என்பது ஒருபுறம் இருக்க, அவர்களுக்கான அனுசரணை வழங்குவதை இந்த அரசாங்கம் தவிர்த்துக் கொள்ளவதை வெளிப்படையாகவே இவ்விடயத்தில் காண்பித்தல் வேண்டும். அரசு சார்பு ஊடகங்கள் தான் இவற்றிற்கான அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (28) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில், இலங்கை வந்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் இந்தச் சந்திப்பில் பங்குபற்றினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற மிக மோசமான மனித உரிமைகள் மீறல்கள் சம்பந்தமாக இன்று என்னை சந்திக்க வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் குறித்த தூதுக்குழுவானது, என்னுடைய தரப்பிலிருந்து கருத்துக்களை கேட்டறிந்துக்கொள்ள விரும்பினார்கள்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக பலரை பழிவாங்குவதற்கான முயற்சி மிகவும் வெளிப்படையாகவே இடம்பெறுகின்றமை தொடர்பில் பல விடயங்களை கதைத்திருக்கின்றோம்.

குறிப்பாக, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களை தகுந்த காரணங்கள் இன்றி, சோடிக்கப்பட்ட காரணங்களைக் காட்டி கிட்டத்தட்ட ஒன்றறை வருட காலம் இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம், இதுவரையில் எவரையுமே இவ்வாறு தடுத்து வைக்கப்படாத நிலையில், தடுத்து வைத்திருப்பது என்பது வேண்டுமென்றே பழிவாங்கும் முயற்சி என ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற பிரேரணையிலும் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.
மிக விரைவில் அவருக்கு பிணை வழங்கப்பட்டு அதற்கு பின்னால் அவருடைய வழக்கை தேவையானால் கொண்டு செல்லுமாறு சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.
இதுபோன்று நிறைய இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் கூட போதிய காரணங்கள் இன்றி, பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்டதாகச் சொல்லி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். உரிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவிடுத்து அவர்களை விடுவிப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம்.
முஸ்லிம் சமய விவகாரங்கள் சம்பந்தமாக குறிப்பாக, விவாகம், விவாகரத்து சம்பந்தமான சட்டத்தில் கொண்டுவரப்பட இருக்கின்ற திருத்தங்கள் குறித்த சர்ச்சை சமூகத்திலிருந்து தீர்க்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும், மீறி இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற தனியான சட்ட நடைமுறையை வேண்டுமென்றே தலையிட்டு இல்லாமல் செய்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற விவகாரத்தில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை நாங்கள் மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றோம்.
இதற்காக நீதி அமைச்சரோடு இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். தேவையற்ற முறையில் சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் பறிக்கின்ற விடயமாக இவை மாறிவிட இடமளிக்கக் கூடாது என்ற விடயத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மிகத் தெளிவாக முன்வைத்திருக்கின்றோம்.
இதேவேளை, பெண்கள் சம்பந்தமான உரிமைகளை நாங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளிலும் உடன்பாடுகளை கண்டிருக்கின்றோம் என்பதையும் அவர்களிடத்தில் கூறியிருக்கின்றோம்.
மேலும், இந்த நாட்டில் கருத்து உரிமை சுதந்திரத்திற்காகவும், ஆர்ப்பாட்டங்களிலும், அரசுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை வேண்டுமென்று கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்த ஆட்சியாளர்கள் செய்து கொண்டு, தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவசரகால சட்டத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு மேலும் இந்த அவசரகால சட்டம் நீடிக்க விடப்படக் கூடாது என்பது குறித்தும் நாங்கள் கூறியிருக்கின்றோம்.
மக்களுக்கு இருக்கின்ற இந்த பிரச்சினைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசுகின்ற மதகுருமார்களின் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது இருப்பது விசனத்துக்குரியது என்றும் நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.
கேள்வி - இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படவுள்ள விவகாரம் தொடர்பில் கூற முடியுமா?
பதில் - உண்மையில், ஜி.எஸ்.பி. சலுகைகள் சம்பந்தமான விவகாரத்தில், இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை தவிர்ப்;பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான் ஜி.எஸ்.பி.சலுகைகள் நீடிக்கப்படலாம் என்ற ஒரு நிலைவரம் இருக்கின்றது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் எதிர்கட்சியினரும், நேர்மையான ஜனநாயகத்தில் கரிசனையுள்ளவர்கள் என்றடிப்படையில், அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் யாவும் திருப்திகரமாக இல்லை என எங்களுடைய முறைப்பாடுகளை நாங்கள் செய்திருக்கின்றோம்.
எனவே அது சம்பந்தமான மாற்று நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்வதன் மூலம் இந்த அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம் என ஒன்றியத்திடம் கோரியிருக்கின்றோம்.
கேள்வி – மதகுருமாரின் வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் செய்துள்ளீர்களா?
பதில் - மதகுருமார்கள் வெறுப்பூட்டுகின்ற பேச்சுக்களை பேசுவதற்கு தூண்டப்படுவதும், செயற்படுவதும் சம்பந்தமாக அவர்களை தண்டிப்பது என்பது ஒருபுறம் இருக்க, அவர்களுக்கான அனுசரணை வழங்குவதை இந்த அரசாங்கம் தவிர்த்துக்கொள்ளவதை வெளிப்படையாகவே இவ்விடயத்தில் காண்பித்தல் வேண்டும். அரசு சார்பு ஊடகங்கள் தான் இவற்றிற்கான அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
அதேநேரம் அரச உளவுத்துறைக்கும், அரசாங்க மேலிடத்திற்கும் சார்பாக தன்னுடைய பேச்சுக்களை பேசுவதன் மூலம் பலத்த சந்தேகம் நிலவுகின்றது. இந்த நடவடிக்கையின் பின்னால் அரசாங்கம் செயற்படுவதாக மிகத் தெளிவாகவே புலப்படுகின்றது. அரசாங்கம் வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது.
என்னைப் பொறுத்தமட்டில் எந்த மதகுருமாரையும கைது செய்வது சம்பந்தமான விவகாரத்தில் நான் அதிகமாகப் பேசப் போவதில்லை. ஏனென்றால், பௌத்த தர்மத்தில் இருக்கின்ற அடிப்படை விடயங்களை மீறி நடந்துவிடுகின்ற மதகுருமார்கள் சம்பந்தமாக எங்களுடைய கவலையையும், விசனத்தையும் தான் கொண்டிருக்கின்றோமே தவிர, அவர்கள் தங்களுடைய போக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
எனவே இதை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை தூண்டிவிட்டு ,அவர்களை மென்மேலும் கஷ்டத்திலும், பிரச்சினைகளிலும் மாற்றிவிடுகின்ற முயற்சிகளை நாங்களாகவே வலியப்போய் மாட்டிக்கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடாகும்.
கேள்வி – ஜி.எஸ்.பி.சலுகைகள் எங்களுக்கு கிட்டுமா?
பதில் - அது எங்களுக்கு மீளவும் கிடைப்பதும், இல்லாமல் போவதும் இந்த அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது. அரசாங்கம் தான்தோன்றித்தனமாக மனித உரிகைளை மீறி மிக மோசமாக சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குட்படுத்தப்படும் போது இந்த சலுகைகள் கூட சந்தேகத்திற்கிடமான நிலைமைக்குத்தான் தள்ளப்படும்.
எனவே ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவகாரங்களில் மிகத் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரு அம்சமாகத்தான் இன்று எங்களைப் போன்ற அரசியற் கட்சிகளின் அபிப்ராயங்களை கோரியிருக்கின்றார்கள். மிகத் தெளிவாக இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்பது குறித்த எங்களுடைய பலத்த விரோதத்தை தெரிவித்திருக்கின்றோம்.
கேள்வி – எல்.என்.ஜி. மின்சக்தி ஒப்பந்தம் சம்பந்தமாக என்ன கூற நினைக்கின்றீர்கள்?
பதில் - இந்த ஒப்பந்தமானது மிக இரகசியமாக இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறன விடயங்களில் இதற்கு முன்னரும் எம்.சி.சி ஒப்பந்தத்தையெல்லாம் பொய்யான காரணங்களை சொல்லி நாட்டின் தேர்தலை வெல்வதற்காக பிரசாரம் செய்த இந்த அரசாங்கம் இன்று பின்கதவால் சென்று அமெரிக்க முதலீட்டாளர்களை அழைத்து வந்து பின் கதவாலேயே முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குகின்ற முயற்சியின் பின்னால் பெரிய ஊழல் இருப்பதற்கான சந்தேகம் மக்களுக்கு மத்தியில் எழுந்திருக்கின்றது. இதற்கு பதில் கூற வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
கேள்வி – அரிசி விலை நிர்ணயம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில் - ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மக்களுக்கு எந்த பிரயோசனமும் கிடைத்தபாடு இல்லை. வர்த்தமானி எதைச் சொன்னாலும் அதை கட்டுப்பாட்டு விலைக்கு எந்தப் பொருளையும், எங்கும் வாங்க கிடைப்பதும் இல்லை. கறுப்புச் சந்தையில் தான் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடியவாறு விலைகளும் கூடிச் செல்லுகின்றன.
எனவே மக்களுடைய அடிப்படை தேவையான பொருட்களில் விலைவாசியை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் முழுமையாக தோற்றுப் போய்விட்டது. தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக அடிக்கடி வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதன் மூலம் மக்களுடைய அதிருப்தியிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் மீள முடியாது என்பதே மிகத் தெளிவான விடயமாகும்.

ஏ.எல்.எம்.சலீம்