
posted 23rd August 2022
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக நேற்று (22) திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 141 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், ரத்தினம், கீதா குமாரி, அவர்களது குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு (7) பேர் மற்றும் மன்னாரைச் சேர்ந்த சாகுல் ஹமீது ஒருவர் என மொத்தம் 8 பேர் மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு நேற்று திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி பாலம் அருகே இறங்கினர்.
தனுஷ்கோடி சென்ற இலங்கை தமிழர்கள் தாங்களாக ஓட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு சென்றனர்.
இதனை அடுத்து மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், தாங்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக தமிழகத்திற்கு அகதியாக வந்து குடியாத்தம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மேலும் தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)