
posted 29th June 2022
இப்போது உலகமே கணணி மயமாகி, கணணி இல்லையென்றால் உலகமே நிசப்தமாகிவிடுமளவுக்கு, கணணிதான் உலகம், கணணி இல்லையேல் உலகம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு தவித்துக்கொண்டிருக்கும் நிலையாகிவிட்டது.
அனேகமானோருக்கு கணணியின் நன்மைபற்றி கூறச்சொன்னால் ஆயிரமாயிரம் கட்டுரைகள் அவர்களால் எழுதமுடியும். ஆனால், அதனால் நமக்கு உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன என்று கேட்டால் கொஞ்சம் தடுமாறுவார்கள். ஏனென்றால், கணணியால் நாம் அடையும் நன்மைகள் எண்ணிலடங்காதவையாக உள்ளபடியால், அவற்றால், உருவாக்கப்படும் தீமைகளை எவராலும் சிந்திக்கவே முடியாது.
இத் தீமைகள், நோய்கள், ஒரே நாளில் திடீரென நமக்கு வருபவையல்ல. அனால், அவை மெதுவாகவே உருவாக்கப்படுபவையாகும்.
எனவே, நான், இங்கு கணணியினால் உருவாகும் அதாவது எமது உடலைத் தாக்கும் வியாதிகள் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன? அவற்றை எப்படி முளையிலேயே கிள்ளி விடலாம்? என்று மட்டும் கூறவிரும்புகிறேன்.
அவற்றை நன்கு கவனித்து அதன்படி ஒழுகுங்கள். நலம் பெறுவீர்கள்.
கணனியைப் பாவிப்பதால் நோய்களும் உண்டாகும் என்றால் நம்பவே முடியாததொன்றாகத்தான் அநேகருக்கு இருக்கும். ஆனால், இது உண்மையிலும் உண்மை. இவற்றைப் பாவிப்பதற்கென ஒழுங்குமுறைகளே உண்டென்றால் பாருங்களேன். அதனை நான் இன்னொரு கட்டுரையில் தருவேன்.
கணனியை அதன் முறைப்படி பாவிக்காமல் விட்டால், பலவித நோய்களை உருவாக்கும். அதிலிருந்து தப்பவே முடியாது. அந்நோய்கள் ஆரம்பத்தில் இடைக்கிடையே அவற்றின் அறிகுறிகளைக் காட்டினாலும், அவை சிறிதாகவே இருப்பதனால் நாம் அதை கவலையீனமாகவும் கவனிக்காதும் விட்டுவிடுவோம்.
ஆனால் இவ்வாறு விடப்பட்ட இந்நோய்கள் நாளடைவில் விஷ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிடும். அந்த நேரம்தான் நாம் கண்விழிப்போம். ஆனாலும் இந் நோய்கள் எதனால்தான் வந்ததென்று நமக்கு மறந்தே போயிருக்கும்.
எமது நினைவினை அவ் வருத்தங்கள் எப்போது உறுத்துகின்றனவோ அப்போதிலிருந்து நாங்கள் குடும்ப வைத்தியரைப் பார்க்க ஆரம்பித்து, பலவிதமான பரிசோதனைகளையும் செய்து, அவ்வருத்தங்களுக்கு மருந்துகளும் பாவிக்கத் தொடங்கி விடுவோம்.
ஆனால், சாதாரணமாக, யாராலும் இந்த நோய்கள் கணணியினால்தான் வந்தன என்று ஊகிப்பதற்குரியது சந்தர்ப்பம் அப்போது தோன்றாமலிருக்கும்.
ஆனால் சிகிச்சைகளும், அப்பியாசமும் அப்பப்ப கொஞ்சம் சுகமளித்தாலும், மீண்டும் மீண்டும் நமது ஆரோக்கியத்திற்கு ஒரு சவாலாக அவை அமைவதும், நமது நாளாந்த வேலைகளைச் செய்யமுடியாமல் இருப்பதும், அடிக்கடி நமது வேலைக்கு லீவு போட்டு நிற்பதுவும் அவை நமக்கு வழமையாகி விடுவதனால், அவை பழக்கமாகியும் ஆகிவிடும்.
எனவே, கணணியினால் ஏற்படும் நோய்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
- கழுத்து நோவு
- முதுகுநோவு
- தோள்மூட்டு நோவு
- கை உழைவு
- தலையிடி
- கண் நோவு
- விரல்களில் ஏற்படும் நோவு
இவற்றில் ஏதாவது ஏற்பட்டால் உடனே கவனம் எடுங்கள். இல்லாவிடில் இவையெல்லாம் பழைய நோவுகளாக நம்மைக் கஷ்டப்படுத்துவதைத் தவிற்கமுடியாது.
இந்த நோய்க் குணம் குறிகள் வேறு நோய்களின் ஆரம்பக்கட்டங்களாவோ அல்லது வேறு நோய்களின் இடைப்பட்ட வெளிப்பாடுகளாகவும் இருக்கலாம். அவைகள் இந்தக் கட்டுரையுடன் சம்பந்தமானவை அல்ல.
இந் நோய்களாவன, ஒருவர் கணணியை தினமும் அல்லது ஒரு மணி நேரமாகத் தொடர்ந்து அல்லது அதற்கும் கூடுதலாகப் பாவிப்பவராக இருந்தால் இவை அவர்களுக்குப் பொருந்தும்.
இவ்வகையான நோய்கள் கணணி பாவிப்பதனால் எவ்வாறு உருவாகின்றன? என்ற கேள்வி அனைவரின் மனதில் உதிக்கலாம்.
இதனைப்பற்றி சுருக்கமாக இங்கு தருகிறேன்.
- ஏற்படப்போகும் ஆபத்துகளை ஏற்கனவே கண்டுபிடிக்கத் தவறும்பட்சத்தில்;
- தனிப்பட்ட தொழிலாளியைப்பற்றிய வேலை சம்பந்தமான பதிவுகள் செய்யாமை:
- கணணியைப் பாவிப்பவர், கணணியை எவ்வாறு, எந்த நிலையினில் வைத்திருக்க வேண்டும் என்பதனைத் தவறும் பட்சத்தில்:
- கணணியைப் பாவிப்பவர், எவ்வாறு இருந்து வேலையினைச் செய்ய வேண்டும் என்பதனை சரிவரச் செய்யாவிடின்
- எவ்வளவு நேர இடைவெளியில் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதனைத் தவறும்பட்சத்தில்
இந்நோய்கள் ஏற்படச் சந்தர்ப்பங்கள் அதிகமாகின்றன.
இவற்றை எவ்வாறு தடுக்கலாம்?
1. நீங்கள் வேலை செய்யும் இடம் தேவையான அளவு இடவசதி உடையதாக இருக்க வேண்டும். அதாவது, உங்களுடைய வேலைக்குத் தேவையான பத்திரங்களை மேசையில் வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
2. உங்களுடைய முன்கை (Forearm) கிடைமட்டமாக (horizontal) மேசையுடன் ஒட்டியதாக இருக்க வேண்டும்.
3. உங்கள் ஆவணத்தைப் பிடித்துக் கொள்ளுவதற்கு ஆவண கோல்டர் (document holder) ஐப் பாவித்தால், கழுத்தும், கண்களும் ஒழுங்கு முறையற்ற நிலை (awkward position) யிற்குத் தள்ளப்படாமல் சரியான நிலையினிற்கு சரிசெய்து கொள்ளும்.
தொடர்சியாகவரும் தொடரில் வாசித்துப் பலன் பெறலாம்.