
posted 15th August 2022

இலங்கையின் வட பகுதியில் ஒரு அழகிய கிராமம் தான் அவள் பிறந்து, வளர்ந்து, ஓடிவிளையாடி, கும்மி அடித்து, ஊஞ்சலாடி, பெரியவளாகி, அன்பிலே உருவான அவள் உறவுகளோடு பாசமாக வளர்ந்த அந்த ஊர்.
அன்றாட அவள் தந்தையின் உழைப்புத்தான் வறுமையின் விளிம்பினை இறுகக் கட்டிப் பிடிச்சிட்டு இருப்பினும், அவர்கள் அனைவரையும் செழித்திட்டு வாழ்ந்திட வைத்த உரமாச்சு.
சூரியனின் அஸ்தமனம் வலுக்கட்டாயமான அவர்களின் இரத்த தானத்தின் ஆரம்பம். ஆதவனின் அவதாரம் இடைநிறுத்தாமல் அவர்களை அரவணைத்துத் தளுவும் இலையான்களின் அன்புத்தொல்லைகளின் அட்டகாசம். இவைகள் அவர்கள் வாழ்க்ககையில் ஒன்டறக் கலந்த இணைபிரியா அழையாவிருந்தாளிகள். அனுதின கால அட்டவணைகளின் ஓட்டத்தில் ஒருநாள், உறவினனான ஒருவன் உயரத்தில் அவளை மிஞ்சியவனாக வந்தான் அவர்கள் வீட்டிற்கு.
அவன் வருகை அவளுக்கு ஏதோ சுறுக்கென்று ஓர் இனம் தெரியா உணர்வை முதல் நாளில் இருந்து துளிர்க்க வைத்தது. அவனோ ஒருவகையில் உறவினன் அவர்களுக்கு. அவனது வருகை நாளுக்கு நாள் அதிகமாயிற்று.
நாட்கள் வினாடிகளாய்ப் பறந்தன. ஏனென்று அப்ப அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கு வயது 17. உணர்வுகள் உயிர்த்தன. உதடுகள் ஊமையாகின, விதையாக இருந்த அவள் உள்மனம் ஓட்டையும் உடைத்துக்கொண்டு தளிர்க்கத் தொடங்கிற்று. அவள் அவளாக இல்லை. உருக்கிலும் பலமாக இருந்த அவள் மனம் ஆதவன் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் உருக்குலையும் பனிபோன்று கரைந்ததை உணர்ந்தாள். அப்போ தன் முன் வந்தவன் ஆதவன்தானா? என்ற ஒரு கேள்வி கீறலாக அவள் உள்ளத்தில் கோடே போட்டிற்று. வார்த்தைகள் குறுங் கதைகளாக அவளையும் அறியாமல் உதட்டின் வழியாகக் கசியத் தொடங்கிற்று. தன்னையும் இரசித்தாள், சுவரில் தொங்கிய பாதரசம் பகுதி பகுதியாகக் கொட்டிய அந்த கண்ணாடியும் அவள் மனம் கசங்கிடக் கூடாதென்றெண்ணி அவள் அழகுக்கு மெருகூட்டிக் காட்டிற்று. அப்போதுதான் அந்தச் சொந்தக்காரன் அவளது இடக்கையைப் பிடித்தான். அவளோ அதை அவனிடம் எதிர்பார்க்கவில்லை. அவள் உடம்பிலுள்ள எல்லாக் கலங்களும் ஒட்டுவிட்டு உதிரத்தொடங்கியதை உணர்ந்தாள். அவளையும் விஞ்சியது அவளின் உணர்வுகளின் வெளிப்பாடு. அட அப்பகூட அவளுக்கு அவன்ர கையை உதறனும் போல வரவே இல்லை. ஏன்? அவளுக்கே தெரியலையே! அது அந்தக் காலத்தின் கட்டாயமா? அல்லது காதலின் அஸ்த்திவாரமா? ஒரு மண்ணும் புரியல. என்ன என்று சிந்திக்க முன்பு அவன் கையினுள் அவள் உடல்பூராவும் அடங்கிற்று.
விதை மரமாயிற்று, மனப்பூங்குயில் தோகையை விரித்தாடிற்று. பச்சைக்கிளிகளின் பிஞ்சு மொழியும் அப்ப விளக்கிச்சு. புதுவித உணர்வு, ஏக்கம், அடக்கம், அச்சம் எல்லாம் வந்திற்று. எங்கே இருந்தன இவை எல்லாம் இவ்வளவு நாளும்? தெரியல. இப்போ மாதங்கள் வினாடிகளாகப் பறந்தன.
ஒரு நாள், அவள் கிராமமோ அதிர்ந்தது, நாடே கலங்கிற்று. எங்கும் அழுகுரல், குமுதினிப் படகின் கொடூரக் கொலைகள் ஒருபுறம், பண்ணைப் பாலத்தில் தினம் தினம் பிணக்குவிப்பு மறுபக்கம். இவையெல்லாம் அவள் மனதில் ஒன்டும் பண்ணல. அப்போ அவள் வேற்றுக்கிரக வாசி போன்று ஒன்றையும் அவளால் உணரக் கூட முடியவில்லை. அப்போது அவளது கண்களால் இவற்றையெல்லாம் உற்றுப் பார்க்கணும் என்று கூடத்தோணல. ஏனென்டா அப்பவும் அவளுக்கும் தெரியல.
அவர்கள் கலாச்சாரத்தையும், நாட்டின் கட்டுப்பாடுகளையும் சிம்பிளாக மீறினார்கள். மேலத்தேய நாட்டு வாழ்க்கையை அப்போது வாழ்ந்தார்கள். இப்போ நினைக்க கேவலமாகவும், அசிங்கமாகவும் இருந்தது. காதலராய் இருந்த அவர்கள் கணவன் மனைவி போன்று வாழத் தொடங்கி பல காலங்கள் கழிந்தி போயிற்று. உணர்வுகளுக்கு அடிமையாக்கப்பட்ட அவள் வெட்கத்தின் கனம் எவ்வளவு என்று இப்போது தெரிந்தது அவளுக்கு. ஏன் தெரியுமா?
அந்தநாள் இரண்டாம் தரம் வந்தது. ஆனால் வேற்றுருவமாய் தோற்றமெடுத்திருந்தது. அவளுக்கு வந்தது ஒரேயொரு சோதனை, அதுவும் ஒரேயொரு கேள்வி மூலமாக. ஆம் அல்லது இல்லை என்பதுதான் பதில். இவ்வளவுதானா வெரி சிம்பிள் என்று துணிந்தாள். கேள்வி என்னென்று தெரியுமா?
“நீ இரச்சிக்கப்பட வேண்டும். உன்னால் முடியுமா? “ என்பதுதான் அந்தக் கேள்வி.
அவன் கேட்டதை அவள் எதிர்பார்க்கவேயில்லை. அந்த அறையின் மூலையில் இடி ஒன்று அவள் உச்சஞ்தலையில் விழுந்தவிட்டாற்போல தொப்பென்று உக்கார்ந்தாள்.
அவளது குடும்பமோ பரம்பரை பரம்பரையாக றோமன் கத்தோலிக்கர் - நீ இரச்சிக்கப் படவேண்டும், என்றால், அவள் குடும்பம் ஒருவருக்கும் விளங்கவேயில்லை. விசித்திரமாகவே இருந்தது அவன் கேட்ட கேள்வி. அவளுடன் எல்லாரும் இருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் எல்லாரும் திகைத்தார்கள். கூடிக்கூடிக் கதைத்தார்கள். பின்புதான் விழங்கியது றோமன் கத்தோலிக்க சமயத்திலிருந்து அவன் விலகிவிட்டான் என்று. அவள் குடும்பமே ஒட்டுமொத்தமாக அவனுடைய கேழ்விக்கு எதிர்த்து நின்றது. அவளும் துணிந்து நின்றாள். மனதைத் திடப்படுத்திக் கொண்டவளாய் என்ன முடிவு வருமென்று கூட சிந்திக்க அவகாசம் குடுக்காமல் எழுந்து நின்றவளாய் ஒரே வார்த்தையாக இல்லை என்றே சொல்லிவிட்டாள் அவனுக்கு. அவனோ இந்தப் பதிலை எதிர்பார்த்தவனாய் எப்படி வந்தானோ அப்படியே திரும்பினான், போனவன், போனவன்தான். வீட்டிலுள்ள எல்லாரும் உறைந்தே போனார்கள்.
‘இல்லை’ என்று அவள் சொன்ன ஒரு சொல்லு அன்று அவள் வாழ்க்கையில் சூணாமியை ஏற்படுத்தியது. அவள் மனதில் வளர்ந்து வியாபித்த அந்த மாமரம் வேரோடு அள்ளிச் செல்லப்பட்டதை அவள் கண்கள், அதே கண்கள் எப்போ வருவார் என்று விழிவைத்த அதே கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன.
கண்கள் கண்ணீரை விட மறக்கவும் இல்லை. அவளுக்கென்று இருந்த வாழ்க்கையை வாழனுமென்று அவள் நினைக்கவுமில்லை.
அவள் எப்பவும் பாடுவாள் அவன் கூப்பிடு தொலைவுக்குச் சென்றால் கூட. அதுவோ இப்போ நிரந்தர கீதமாயிற்றது போலும்.
“எங்கிருந்த போதும் உன்னை மறக்கமுடியுமா என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்கமுடியுமா?....”
அப்போதெல்லாம் அவள் தன்னை மறந்து விடு வாள்......
அவன் தோளில் அடைக்கலம் புகுந்து அயர்ந்து விடுவாள். இருவரையும் தாங்கிய அந்த உயிரற்ற மரத்தூண் அவளின் உணர்வுகளை மதித்து இப்பவும் அவளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. இப்பவும் கனவில் வாழும் அவளை நினைப்பானா அவன் ஒரு கணம்? இப்போதெல்லாம் வினாடிகள் வருடங்களாக்க கழிந்தன. அதே வீடு. அதே அழையா விருந்தாளிகள். அவளின் மனதில் தொடரும் அந்தப் பாடல் அவளை ஒரு கணம் அயர வைத்தது. கன நாட்களின் பின்பு தூக்கம் அவளைத் தாலாட்டிக்கொண்டிருக்ககையிலே,
“அடி பிள்ளை இங்க வாவன்”, என்ற அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டெழுந்தவள் அவர்களின் ஓட்டைக் குசினியை நோக்கி நடந்தாள் அடைக்கவே முடியாத சில்லம்பலமான அவளின் வாழ்க்கையினூடாக.
- நான்தான் -