உலகத்திற்கே சவாலாக உள்ள அரக்கு பாம்பினை அழிக்க மரியன்னையிடம் வேண்டுவோம் - ஆயர்

உலகம் , எமது நாடு அரக்கு பாம்புகளுக்குள் சிக்குண்டு சொல்லொண்ணா துயரத்தில் தவிக்கின்றது. இந்த அரக்கு பாம்பு அழிக்கப்பட வேண்டும் என நாம் மரியன்னையை நோக்கி வேண்டுவோம். அதேவேளையில் நாம் ஒவ்வொருவரும் அருள் நிறைந்தவர்களாக வாழ வேண்டும் என்று மரியன்னை எம்மை நோக்கி கேட்கின்றாள் என கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு அன்ரனி றஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மருதமடு ஆலய பெருவிழா திங்கள் கிழமை (15.08.2022) கொண்டாடியபோது இதில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு அன்ரனி றஞ்சித் ஆண்டகை தனது மறையுரையில்;

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் திருப்பதியில் வீற்றிருந்து அன்னையின் விழாவில் நாம் பங்குபற்றிக் கொண்டு இருக்கின்றோம்.

திங்கள் கிழமை (15.08.2022) அன்று திரு அவையானது மரியாளின் விண்ணேற்பு விழாவை நினைவு கூறுகின்றது.

மரியாள் தொடர்பாக திருஅவையானது நான்கு கோட்பாடுகளை முன்வைத்து அவைகளை பகிரங்கமாக பிரகடனம் செய்துள்ளது.

மரியாள் இறைவனின் தாய் என்று 431 ஆம் ஆண்டு மரியாள் என்றும், கன்னியானவள் என்றும், 553 ஆம் ஆண்டு மரியாள் அமல உற்பவியாக பிறந்தாள் என்று 1854 ஆம் ஆண்டும் பிரகடனம் செய்த திருஅவையானது இம் மூன்று கோட்பாடுகளையும் அடித்தளமாக வைத்து மரியாள் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என மிகவும் சுறுக்கமான வரையறையில் நான்காவது விசுவாச கோட்பாட்டை அதாவது மரியாளின் விண்யேற்பை காத்திகை மாதம் முதலாம் நாள் 1950 ஆம் ஆண்டு அன்றைய பாப்பரசராக இருந்த 12 ஆம் பத்திநாதர் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.

15.08.2022, திங்கள் கிழமை கொண்டாடப்படும் இவ் விழா எமது விசுவாசத்தின் விழாவாகும்.

இந்த விசுவாசத்தை இரண்டாம் வத்திக்கான சங்கம் இவ்வாறு கூறுகின்றது. உடலோடும் ஆன்மாவோடும் மாட்சிமைப் படுத்தப்பட்டுள்ள இயேசுவின் தாய் இவ்வுலகில் ஆண்டவர் வரும்வரை பயணம் செய்யும் இறை மக்களின் உறுதியான எதிர்நோக்குடனும் இருப்பதற்கு அடையாளமாக இருக்கின்றாள்.

பட்டத்தரசி இறைவனின் வலது பக்கத்தில் இருப்பது இந்த தாய்தான் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வலது புறத்தில் இருப்பது என்பது ஒருவருடைய கோட்பாடுகளை ஒருவருடைய விருப்பத்துக்கு அமைய வாழ்வது ஒரு பாக்கியம்.

இதனால்தான் நாம் கூறுவது இவர் இவருக்கு வலது கை என்று.

மரியன்னை இறைவனின் வலது பக்கத்தில் நிற்பது மரியாள் தனது தாழ்மையை வெளிப்படுத்துகின்றாள்.

நாம் வாழ்கின்ற சமூதாயத்திலே நாம் அரக்கு பாம்புக்குள் சிக்குண்டவர்களாக வாழ்கின்றோம். அரக்கின் பாம்பின் ஆட்சியை நாம் கண்டு கொண்டு இருக்கின்றோம்.

இது உலக ரீதியாக இருக்கலாம்; எமது நாடாக இருக்கலாம் எமது சமூதாயமாக இருக்கலாம்; எமது குடும்பமாக இருக்கலாம்; நாங்கள் தொழில் புரிகின்ற தொழில் நிறுவனமாக இருக்கலாம்; இவற்றுக்குள் அரக்கு பாம்பின் கொடூரம், அரக்கின் பாம்பின் ஆட்சி நடந்து கொண்டு இருப்பதையும் அதேநேரத்தில் அரக்கின் பாம்பின் இடையில் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

இருந்தபோதும் இந்த அரக்கு பாம்பு தோற்கடிக்கப்படுகின்றது. மரியாள் இயேசுவை பெற்றெடுத்தாள் அவர் மனுக்குலத்தை மீட்டெடுக்கின்றார்.

மரியாள் அருள் நிறைந்தவளாக இருந்தாள் ஆண்டவர் அவளோடு இருந்தார். இதனால்தாள் அனைத்தையும் அவள் வெற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

நாம் இந்த தாயிடம் வேண்டுவது இந்த அரக்கு பாம்பிடமிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டுவோம். இந்த நேரம் அன்னையானவள் எம்மிடம் கேட்பது நீங்களும் அருள் நிறைந்தவர்களாக வாழுங்கள்.

உங்களுடன் ஆண்டவரை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் நீங்கள் ஆண்டவரை வைத்துக் கொள்ளவில்லை என்றால், நாளுக்கு நாள் அருள் நிறைந்து வாழ முற்படாவிட்டால் நீங்கள் அரக்கு பாம்புக்கு இரையாக வேண்டிய நிலை ஏற்படும்.

நாம் இந்த நேரத்தில் நாட்டில் நிலவுகின்ற சொல்லொண்ணாத் துன்பங்கள் மத்தியில் வாழ்கின்ற வேளையில் இந்த அரக்கு பாம்புகளை இறைவன் அழிக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.

உலகத்திற்கே சவாலாக உள்ள அரக்கு பாம்பினை அழிக்க மரியன்னையிடம் வேண்டுவோம் - ஆயர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)