
posted 29th April 2022
சலரோகம் (Diabetes) எனும் நோயானது ஒரு நீண்டகால நோய்களில் ஒன்றாகும். இந்நோய் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கூட்டும் தன்மையானது. அதற்கு, உடலில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் எனும் ஹோமோனின் பற்றாக்குறை அல்லது சுரக்கும் இன்சுலின் ஹோமோனை கலங்களால் உணரும் தன்மை இல்லாமல் போவது காரணமாக இந்நோய் ஏற்படுகின்றது. இன்சுலின், எமது இரத்தத்திலுள்ள சீனியை கலங்களுக்குள் செலுத்தி எமக்கு நல்ல சக்தியைத் தருகின்றது. இந்தப் பொறிமுறை ஒழுக்கமற்றுப் போவதால் ஒருவருக்கு அந்நோய்க்குரிய அறிகுறிகளும், அதன் அகோர விளைவுகளும் உண்டாகின்றன.
இந் நோய் ஏற்பட முன்பு அநேகமானவர்களுக்கு அறிகுறிகள் ஒன்றும் தெரியாது. ஆனால், ஒரு சில பேருக்கு மாத்திரம், உடல் மெலிதல், அசாதரணமாக வேர்க்குதல், சிறுநீர் அதிகம் போதல், களைப்பு, போன்ற அறிகுறிகளைக் காட்டி நோயாளிகளை உடனே வைத்திய ஆலோசனைக்கு அழைத்துச் செல்லும்.
நோயாளர்கள் ஆரம்பத்தில், உணவு கட்டுப்படுத்தும் முறைமூலம் அல்லது அவர்களின் சீனி அளவைப் பொறுத்தும் அவர்களுக்கு வைத்திய முறைகளை வைத்தியர் ஆரம்பிப்பார்.
உணவுக் கட்டுப்பாடு + அப்பியாசம் என்பதில் ஆரம்பித்து பின்பு இவற்றுடன் கூடி மருந்துகளும் பாவிக்க வேண்டிவரும்.
இந்நோய்க்கு ஒரு இயல்பான தன்மை உள்ளது. அதாவது, இரத்தத்திலுள்ள கொலஸ்ரரோலின் அளவைக் கூட்டுவதாகும். கொலஸ்ரரோலின் ஒருவகையானது, கெட்ட கொலஸ்ரரோலாகும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இக் கட்டுரையின் உட்கருத்து.
எனவே, சலரோகம் உள்ளவர்கள், குளிசைகளும் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில், அவர்கள் கொலஸ்ரரோலைக் கட்டுப்படுத்தும் குளிசைகளைப் பாவிக்க வேண்டும்.
ஆனால், அநேகமானோர் தாங்களாகவே குளிசைகளைப் பாவிக்காமல், இயற்கை முறைப்படி கொலஸ்ரரோலைக் குறைப்பதற்காக வெந்தயம் பாவிக்கின்றார்கள்.
அவர்கள் வெந்தயத்தை, வெறுமனமே, தூளாக்கி அல்லது முதல்நாளே ஊறவைத்து அதில் ஒரு தேக்கரண்டியை வெறும் வயிற்றில் உட்கொள்வார்கள்.
இவ்வாறாக வெந்தயம் தினமும் பாவிப்பதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ரரோலின் அளவு குறைவுறுவதை நானும் பரீட்சித்துப் பார்த்திருக்கின்றேன். அத்துடன் பலபேர் பாவித்து தங்களது அனுபவத்தை என்னிடம் கூறியும் உள்ளார்கள்.
ஆனால், இவ் வெந்தய வைத்தியம் இரத்தத்தின் மொத்தக் கொலஸ்ரரோலின் அளவைக் குறைக்குமே தவிர, ஈரலினால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அளவைக் குறைக்குமா என்பதில் ஆய்வு செய்யப்பட்ட ஆதாரங்கள் இல்லாதபடியினால் தெட்டத் தெளிவாக்க கூறமுடியாமல் உள்ளது. அதாவது, இருதய குழாய்களில் கொலஸ்ரரோலின் படிவுகள் ஏற்பட்டு சத்திரச் சிகிச்சைக்கு உட்பட்டுள்ளார்கள்.
எனவே, உணவுக் கட்டுப்பாட்டுடன், மாத்திரைகளும் பாவிப்பது இருதய நோய்களிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
இக்குளிசைகளினால் பாதிப்புகள் (பக்க விளைவுகள் - adverse effects) இருப்பது உண்மைதான். ஆனால், இக் குளிசைகள் இல்லாமல் ஏற்படும் பாதிப்புகள் உதாரணமாக, மாரடைப்பு, பாரிச வாதம் என்பன நிரந்தரமானவையும் மிகவும் உயிர் ஆபத்து உள்ளவைகளுமாகும்.
எனவே, சலரோகம் என மருத்துவர் உறுதியாகக் கண்டுபிடித்து விட்டால், நீங்களாகவே அவரிடம் இக் குளிசை விபரத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
இந்த கொலஸ்ரரோல் குளிசையானது எவ்வகையான கொலஸ்ரரோலைக் குறைக்க வேண்டும்?
கெட்ட கொலஸ்ரரோலை (Bad Cholesterol) த்தான் குறைக்க வேண்டும்.
அதாவது, non-high density lipoprotein cholesterol (non-HDL) த்தான் குறைக்க வேண்டும்.
மார்ச் மாத British Medical Journalலில் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், Rosuvastatin, Simvastatin குளிசைகள் தான் மிகவும் வீரியமாகக் கெட்ட கொலஸ்ரரோலைக் குறைக்கக்கூடியனவாகும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, உங்கள் சுகாதாரத்திற்கு நீங்களே பொறுப்பு - ஏதாவது சிறிய வித்தியாசமான அறிகுறி அல்லது அறிகுறிகள் தெரியுமாயின் உடனே அண்மையிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.
சுடுதண்ணீர் குடிப்போம், இது வாயுதானே, கலந்துவிடும் என்று நாங்களே எம்மைத் தேற்றுவதும், நமக்கு நாமே வைத்தியம் பார்ப்பதும் நாங்கள் எங்கள் வாழ்க்கையிலெடுக்கும் சரியற்ற முடிவாகவும் மாறலாம்.
தேனாரம்
வளமுடன் வாழ்க!