கால் நூற்றாண்டாகியும் முகாம்… முதல் பரிசு பெற்ற தாப்பாத்தி முகாம் ரிசானா
கால் நூற்றாண்டாகியும் முகாம்… முதல் பரிசு பெற்ற தாப்பாத்தி முகாம் ரிசானா

(செய்திக் கட்டுரை)

கால் நூற்றாண்டாகியும் முகாம்… முதல் பரிசு பெற்ற தாப்பாத்தி முகாம் ரிசானா

( வாஸ் கூஞ்ஞ) 16.04.2022

இலங்கை உள்நாட்டு கலவரத்தின் காரணமாக புலம்பெயர்ந்து, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று பல்வேறு கவன ஈர்ப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக இந்தியாவின் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு முகாம் தன்னார்வலர்கள் இணைந்த விழிப்புணர்வு குழு என்ற குழுவினர் மூலம் முகாம்களுக்கு இடையேயான மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரான மாண்புமிகு திரு. செஞ்சி மஸ்தான் அவர்கள் தலைமையில் 12.04.2022 அன்று பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம் சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறுகதைப் பிரிவில் முதல் பரிசினை பெற்ற தாப்பாத்தி முகாமைச் சேர்ந்த ரிசானா என்பவர் எழுதியிருந்த சிறுகதை பின்வருமாறு...

கால் நூற்றாண்டாகியும் முகாம்...
- ரிசானா தாப்பாத்தி முகாம்.

நகர வாழ்க்கையிலிருந்து தள்ளி 400 குடும்பங்கள் கொண்ட இலங்கைத் தமிழர்கள் வாழும் ஊர் அது. யாரும் ஊர் என்று அழைத்து பழக்கமில்லை முகாம் என்றால்தான் அனைவருக்கும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அதிகாலைப்பொழுதில் 5 மணிக்கு முகாமின் பிள்ளையார் கோவிலில் ஒலிக்கும் ஓன்பதுகோளும் எனத்தொடங்கும் பாடல்தான் அனைவருக்குமான பொது அலாரம். பத்துக்கு பத்து வீட்டிற்குள் தொடங்குகிறது நிலவனின் அன்றைய வழக்கமான வாழ்க்கை. தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து முடித்து குளிக்க தயாராகிக் கொண்டிருந்தான் நிலவன்.

காய்கறி வெட்டிக்கொண்டிருந்த நிலவனின் மனைவி மதி ஏங்க ஞாபகம் இருக்கா 30 ம் தேதி மகிழினிக்கு 4வது பிறந்தநாள். துண்டை தோளில் போட்டபடி பிள்ளையோட பிறந்தநாளை மறப்பேனா என்று கூறிவிட்டு சோப்பை தேடிக்கொண்டிருந்தான் நிலவன்.

சோப்பு தேடுறீங்களா அந்த ஜன்னல் ஓரம் இருக்குது பாருங்க என்றாள் மதி. ஜன்னல் விழும்பில் தேய்ந்திருந்த சோப்பு நிலவனுக்கு மாதக்கடைசியை ஞாபகப்படுத்துவதாக இருந்தது. படகுபோல் வளைந்திருந்த சோப்பைப் பார்த்ததும் மதி இங்க பாருங்க உங்கட அம்மா அப்பா இலங்கையிலிருந்து வந்த போட் என்றான் நிலவன். அது எங்க அம்மா அப்பா வந்த போட் இல்ல எங்க மாமா மாமி வந்த போட் பத்திரமா குளிங்க என்று சமையலறையிலிருந்து எடக்காக பதில் குரல் கொடுத்தாள் மதி.

மதியின் பதிலைக் கேட்டுக்கொண்டே கொல்லைக் கதவை சாத்தினான் நிலவன். கொல்லைக் கதவை சாத்தியவுடன் நிலவனின் மனக்கதவு திறந்தது. மகளுக்கு பிறந்த நாளுக்கு என்ன கொடுக்கலாம். ஏதேதோ நினைவில் வந்தது பரிசு பொருட்கள் நினைவில் வரும்போதே அதன் பட்ஜெட்டும் மனத்திரையில் வந்தது. சாத்தியமில்லாதவைகளை தவிர்த்துகொண்டே வந்தான். இறுதியில் ஒன்றில் நின்றான் கடந்த வாரம் தனது வயதொத்த யாழினி வீட்டிலிருப்பது போன்ற கரடி பொம்மை வேண்டுமென்று கேட்டாளே விலை 2000 ரூபாய் என்று யாழினியின் அப்பா சொன்னதும் நிலவனுக்கு ஞாபகம் வந்தது.

குளித்துவிட்டு வந்து துவட்டிக்கொண்டிருந்தவனிடம் பிறந்தநாளுக்கு மகளுக்கு என்ன வாங்கிக்கொடுக்கப்போறீங்க என்றாள் மதி தலையை சிலுப்பிக்கொண்டே கர கர குரலில் கரடி பொம்மை என்றான்.

சரிதான் துரை உடம்புக்கு முடியாம இருந்துட்டு ஒருவாரத்திற்கு பிறகு இன்றைக்குதான் வேலைக்கு போறீங்க. அந்த கரடி பொம்மை 2000 ரூபாய்னு யாழினி அப்பா சொன்னது ஞாபகம் இருக்கா? என்று கேட்டாள் மதி. நியாபகம் இருக்கு மதி இன்றைக்கு தேதி 24 தான் ஆகுது. தங்கு வேலைக்குத்தான் போறேன் 29 தேதி திரும்பி வரும்போது கரடி பொம்மையோடுதான் வருவேன் என்றான் நிலவன்.

வீட்டில் எந்த பொருளும் இல்லை காலையில குளிக்கும் போது சோப்பை பார்த்ததீங்கதானே சோப்பு மட்டும் இல்ல வீட்ல நிறைய பொருளுக்கும் அதுதான் நிலமை. நிறைய செலவிருக்கு விளையாடாதீங்க. வீட்டுச் செலவுக்கு வச்சிருந்த காசிலதான் பாதியைத்தான் உங்களுக்கு பஸ்சுக்கு தாரேன் என்றாள் கொஞ்சம் கோபத்தோடு.

எப்பவுமா மதி இப்படி செலவு செய்யுறோம். குழந்தைப்பருவத்தில் பிள்ளைகளை எதுக்கும் ஏங்க வைக்க கூடாது மதி. அகதியா வந்த புதிதில் நீயும் நானும் குழந்தை பருவத்தை எவ்வளவு ஏக்கத்தோடு கடந்திருப்போம்னு நினைச்சிபாரு நான் சொல்றது உனக்கு புரியும் என்று நிலவன் சொல்லி முடித்தபோது, மதியும் நிலவனோடு உடன்பட்டிருந்ததை அவளது அமைதி உணர்த்தியது.

என்னமோ பாத்துக்குங்க வீட்டு செலவுகளும் நிறைய இருக்கு என்று சொல்லிமுடித்து. நிலவனின் கையில் சாப்பாட்டு தட்டை கொண்டுவந்து கொடுத்தாள் மதி. சாப்பிட்டு முடித்தவன் தூங்கிக்கொண்டிருந்த மகளை உச்சி முகர்ந்து கொஞ்சிவிட்டு போய்ட்டு வருகிறேன். பிள்ளையை கவனமா பாத்துக்கோ மதி என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி நடந்தான் நிலவன். 29ம் தேதி வீட்டுக்கு திரும்புவதையும், கரடி பொம்மையை கண்ட மகளின் மகிழ்ச்சியையும் மனதிற்குள் நினைத்து மகிழ்ந்து கொண்டே நடந்தவன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். நிலவன் வரவும் அவன் செல்ல வேண்டிய பேருந்து வரவும் சரியாக இருந்தது. பேருந்தில் ஏறி வேலைக்கு பயணமானான் நிலவன்.

வீட்டில் அப்போதுதான் சோம்பல் முறித்து அழுது எழுந்தாள் மகள் மகிழினி. மகிழினியின் அழுகை சத்தம் கேட்டு துணி மடித்துக்கொண்டிருந்த மதி எழுந்து ஓடிவந்தாள். அச்சச்சோ செல்லம் ஏன் அழுறீங்க? பிள்ளைக்கு யாழினி பாப்பா வீட்ல இருக்கிற மாதிரி பெரிய கரடிபொம்மை வாங்கி வர அப்பா போயிருக்காங்க என்று மதி சொல்ல மகிழினியின் அழுகை மெல்ல அடங்கியது. அழுகை அடங்கிய கையோடு மகிழினியை குளிப்பாடடுவதற்கு தயாரானாள் மதி.

முகாம் மக்களுக்கு ஓர் அறிவிப்பு என்று பொது ஒலிப்பெருக்கி அலறியது. நின்று அறிவிப்பை கவனித்தாள் மதி. வருகிற 26ம் தேதி குடியரசு தினம் என்பதால் முக்கிய தலைவர்கள் தமிழகம் வரவிருக்கிறார்கள. ஆகவே முகாம் மக்கள் அனைவரும் 25, 26, 27 ஆகிய மூன்று தினங்கள் முகாமில் ஆஜரில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அலறி அடங்கியது பொது ஒலிப்பெருக்கி.

ஓலிப்பெருக்கியின் அலறல் முடிந்து சிறு அமைதிக்குப்பின் தனது நைட்டி பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து அழுத்தினாள் மதி. பேருந்தில் பயணமாகிக்கொண்டிருந்த நிலவனின் பாக்கெட்டில் இருந்த போன் அலறியது. போனின் பச்சை பொத்தானை அழுத்தி சொல்லு மதி என்று கேட்டவனிடம் என்னங்க நாளையிலிருந்து மூணு நாளைக்கு முகாமில் செக்கிங்காம். எல்லோரும் கண்டிப்பா இருக்கனும்னு சொல்றாங்க. அடுத்த ஸ்டாப்ல இறங்கி வீட்டுக்கு வந்திருங்க என்று கூறிவிட்டு போனை அணைத்தாள் மதி.

நிலவன் பயணமாகிக்கொண்டிருந்த பேருந்தில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது தமிழா தமிழா நாளை நம் நாளே... தமிழா தமிழா நாடும் நம் நாடே... பெரும் ஏமாற்றத்தோடு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சாலையின் எதிர்திசை நோக்கி நடந்தான் நிலவன்.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சிறு கனவுகளை கூட இந்த முகாம் வாழ்க்கை சிதிலமாக்கப்போகிறது என்ற பெருமூச்சுடன் வெந்நீர் கலந்து வைத்திருந்த நீரை மகிழினியின் மேல் ஊற்றினாள் மதி.

அம்மா எனக்கு சுடுது என்றாள் மழலை மொழியில் மகிழினி. எனக்கும் சுட்டது. உனக்கும் சுடுகிறது. நாளை உனது குழந்தைக்கும் சுடுமோ? இந்த முகாம் வாழ்க்கை என்ற கேள்வியை தனக்குத்தானே மனதிற்குள் கேட்டுக்கொண்டவாறு கலந்து வைத்த நீரில் மீண்டும் தண்ணீர் கலந்து மகிழினியை குளிப்பாட்டி முடித்து கொல்லைக் கதவை சாத்தி வெளியே வருகையில் வீட்டு வாசலில் வந்து நின்றான் நிலவன்.

நிலவனைக் கண்டதும் கரடி பொம்மை எங்கப்பா என்றாள் ஏக்கத்தோடு மகிழினி. பதில்கள் ஏதுமின்றி கால் நூற்றாண்டு முகாம் வாழக்கையில் கனவுகள் சிதைந்த சாட்சியாக நின்றிருந்தான் நிலவன். அழுகையை ஆரம்பித்திருந்தாள் மகிழினி ஏமாற்றம் மகிழினிக்கு இன்னும் பழகவில்லை.

குழந்தையிடமிருந்து பொம்மையை பறித்துக்கொள்வதுபோல் அனைவரின் எதிர்காலத்தையும் பறித்து வைத்துக்கொள்கிறது கால் நூற்றாண்டு முகாம் வாழ்க்கை.

கால் நூற்றாண்டாகியும் முகாம்… முதல் பரிசு பெற்ற தாப்பாத்தி முகாம் ரிசானா

வாஸ் கூஞ்ஞ