21 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன் பகிர்ந்துகொண்ட  நினைவலைகள்.
21 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன் பகிர்ந்துகொண்ட  நினைவலைகள்.

சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன்

மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 21 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இணையவழியூடாக (ZOOM), ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில், அவரது நினைவு தினத்தன்று (16.9.2021) இடம்பெற்றபோது, சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன் பகிர்ந்துகொண்ட தனது சகோதருடனான நினைவலைகள்.
(ஏ.எல்.எம்.சலீம்)

சிறந்த கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமான இவர், முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரரும், சவூதி அரேபியா, ஜித்தாவுக்கான இலங்கையின் முன்னாள் கொன்ஸலர் ஜெனரலுமான ஏ,டபிள்யூ.ஏ. ஸலாமின் துணைவியாராவார்.

செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி ,எனது உடன் பிறந்த சகோதரர் எம்.எச்.எம். அஷ்ரப் எம்மை விட்டும், இந்த மண்ணை விட்டும் மறைந்து இருபத்தோராவது வருடம். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரின் வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது என் கடமை என்று நினைக்கிறேன்.

என் சகோதரர் தனது இளமைக்காலத்தில் மிக இளகிய மனமுடையவராகக் காணப்பட்டார். ஏழைகளுடன் மிகவும் அன்புடன் பழகி வந்தார். கோள் , புறம், பொய் பேசுவதை வெறுத்தார்.அவ்வாறு பேசத் தொடங்கும் போதே அது தாயாக இருந்தால் என்ன, தங்கையாக இருந்தால் என்ன அது வேறு ஒருவர் பற்றிய பேச்சாக இருப்பின் அந்தப் பேச்சை அப்படியே நிறுத்தச் சொல்வார். அதனை தொடர விடமாட்டார்.

அவரது "நான் எனும் நீ"' என்ற கவிதைத் தொகுப்பில் 'தங்கையே' என்ற ஒரு கவிதை உள்ளது. அதன் ஒரு பகுதி,

பொய்யை இறைக்காதே தங்கையே!

பொறுமை கொண்டிரு தங்கையே!

மெய்யை உரைத்திடு தங்கையே!

மேன்மை பெறலாம் தங்கையே

கள்ளம் அகற்றிடு தங்கையே

இப்படி அந்தக் கவிதை செல்கின்றது.

இந்தக் கவிதையை "நான் எனும் நீ"என்ற நூலில் பிரசுரிக்கத் தயாரான போது,

"இது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று என்னிடம் கேட்டார்.
நான் "இல்லை" என்றேன்.

"நீங்கள் சின்ன வயதில் நான் எழுதியது மறந்துவிட்டீர்களா ? " என்றார். அப்போதுதான் எனக்கு அது ஞாபகத்தில் வந்தது. அவரின் நினைவாற்றல் அற்புதமானது. அல்ஹம்துலில்லாஹ் .

எங்கள் குடும்பத்தில் ஒன்பது பிள்ளைகள். எங்களில் 5 பேர் சிறு வயதிலேயே மரணித்துவிட்டனர். மீதி நான்கு பேரில் அவர் மட்டும்தான் ஆண் பிள்ளை. எல்லோரும் எனக்கு மூத்தவர்கள். "சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை" என்பார்கள். அதனால் என் பெற்றோரின் அரிய பொக்கிஷமாக அவர் வளர்க்கப்பட்டார். பாசம், பணிவு, பொறுமை, கடமை போன்ற அத்தனை நற்குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவராக அவர் வளர்ந்தார். அவரின் சிறுவயதிலேயே அவரின் நற்குணங்கள் நன்றாக வெளிப்பட்டன என எனது தாய் அடிக்கடி கூறிப் பெருமைப்படுவார்.

அவர் சிறுவயதில் கடைக்குச் செல்லும் போதும் கூட , அடுத்தவர் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்து விட்டே வருவார் என எனது தாயார் அடிக்கடி சொல்வார். கல்வியிலும், விளையாட்டிலும் ,கலை உணர்வுகளிலும் சமமாகக் காணப்பட்டார். அவரின் திறமைகளை நான் சொல்வதிலும் பார்க்க நீங்கள் அதிகமாக அறிந்திருப்பீர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது.

பெற்றோருடனும் சகோதரிகளுடனும் அளவற்ற பாசம் கொண்டிருந்தார். ஒரு தந்தையைப் போன்று எங்களிடம் அன்பு காட்டினார். அதேபோல் தனது குடும்பத்தார் மகன் அமான், மனைவி ஆகியோர் மீது உயிரையே வைத்திருந்தார். ஒருவரைப் பற்றி அறிய வேண்டுமானால் அவரின் நண்பனைப் பற்றி அறி என்று சொல்வார்கள். என் சகோதரரின் நண்பர்கள் அத்தனை பேரும் மிகுந்த திறமைசாலிகள். நற்பண்புள்ளவர்கள். அவருக்கு எத்தனை முஸ்லிம் நண்பர்கள் இருந்தார்களோ, அதேபோல் அத்தனை இந்து கிறிஸ்தவ நண்பர்களும் இருந்தார்கள்.

அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். எங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களைப் போல் பழகுவார்கள். அவர்களிடத்தில் எந்தவொரு இன, மத, மொழி, வேறுபாட்டையும் நான் அன்று காணவில்லை. அவரின் இறப்பு வரைக்கும் அவர்களுடன் எனது சகோதரன் தன் நட்பைப் பேணிக் கொண்டேயிருந்தார். இப்போதும் கூட, அவர்கள் எனது சகோதரரை நினைவு கூர்ந்த வண்ணம் கண் கலக்குகின்றனர்.

பெண்களின் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். நான் உயர்கல்வி கற்க ஆசைப்பட்ட போது மிகவும் சந்தோஷப்பட்டார். எனக்கு சட்டக் கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் ஒரே நேரத்தில் அனுமதி கிடைத்த போது "அவற்றில் எதைத் தெரிவு செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டார் எனது சகோதரர். "இரண்டையும்" என்றேன் "இரண்டையுமா? எப்படி?" என்றார். "என்னால் இயலும்" என்றேன். "எதையும் சவாலாக ஏற்றுக் கொண்டால் இறைவன் துணையுடன் முடிக்கலாம்" என்று சொல்லி சந்தோஷப்பட்டார். இரண்டும் வேறு வேறு துறைகள் ஆன போதும் நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு என் கல்வியைத் தொடர்ந்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதற்கு ஊக்கமளித்து உதவியும் செய்தார்.

நான் சட்டத்தரணியாக வெளியேறிய மறுநாளே என்னை கல்முனை நீதிமன்றத்துக்கு பெருமையுடன் அழைத்துச் சென்றார். பல வருடங்கள் அவருடன் சேர்ந்து பணியாற்றிய பாக்கியம் பெற்றவள் நான். சட்டத்துறையில் என் வழிகாட்டியாக இருந்தார். என்னைப்போல் இளம் சட்டத்தரணிகள் அதிகமானோர் அவரிடம் தொழில் பயின்றார்கள். அவரிடம் வேலை பழகிய சட்டத்தரணிகள் பலர், பிற்காலத்தில் புகழ் பெற்ற நீதிபதிகளாகவும் சட்டத்தரணிகளாகவும் கடமையாற்றுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் 10 அல்லது 15 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி. கல்முனைக்குடியில் இருக்கும் எனது தாய் வீட்டில் தான் அந்தக் கட்சி பிறந்து வளர்ந்தது. அதனை வளர்ப்பதற்காக அவர் செய்த தியாகங்களும், என் பெற்றோரின் உறுதுணையும் எங்கள் குடும்பம் அடைந்த அவமானங்களும் கூட சொல்லிலடங்காது.

ஆரம்பத்தில் ஒரு சிலர் என் சகோதரரின் முகத்தில் காறித் துப்பினார்கள். அந்த உமிழ் நீரை தன் முகத்தில் கொட்டியவர் மீது சற்றும் சினம் கொள்ளாது, தன் கரங்களாலேயே அதைத் துடைத்தபடி மருதமுனையில் இருக்கும் என் சகோதரியின் வீட்டுக்கு வந்தார் என் சகோதரர். அப்போது நானும் எனது தாயும் அங்கிருந்தோம். தனக்கு நடந்ததைச் சொன்னதும் எனது தாய் வாய்விட்டு அழுதார். "ஏன் மகன் உனக்கு இந்த நிலை?, இப்படி ஒரு அரசியல் உனக்கு தேவைதானா? " என்று கேட்டார். அதற்கு அருகில் இருந்த அவரை அணைத்தவாறே , "இது ஆரம்பம் தான். இது போல எவ்வளவோ எச்சில்களையும் குப்பைகளையும் தாங்க வேண்டியிருக்கும் உம்மா" என்று கூறிய போது எங்களால் அதனை ஜீரணிக்க முடியவில்லை.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் முதன்முறையாகப் போட்டியிட்டது. அப்போது மருதமுனையில் ஒரு வாக்குச்சாவடிக்குச் சென்ற அவர் மீது அங்கிருந்தவர்கள் சிலர் கதிரைகளையும், வேறு பொருட்களையும் வீசி எறிந்தார்கள். அவர் அதைச் சகித்துக் கொண்டார். தனக்கு ஏற்பட்ட அவ்வளவு துன்பங்களையும் தன் மரணம் வரை சகிப்புத்தன்மையுடன் எதிர் கொண்டார். அவர் தேர்தலில் வென்ற பின்னர் யார் யார் அவரைத் தூற்றினார்களோ, துப்பினர்களோ, அவமதித்தார்களோ அவர்கள் அத்தனை பேரும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள் ; அரசியல் இலாபங்களை அனுபவித்தார்கள். எனது சகோதரனுக்கு பழிவாங்கும் எண்ணம் அறவேயிருக்கவில்லை. யாரையும் வஞ்சிக்கும் எண்ணமும் இருக்கவில்லை. எல்லோரையும் அரவணைத்துக் கொள்வார். அவரின் மனப்பக்குவம் எவருக்கும் இலகுவில் வராது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக!

என் சகோதரனின் இலக்கிய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், நிறையக் கதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். அதிலும் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் உள்ளவராகக் காணப்பட்டார். தனக்கு மிகவும் பிடித்த கவிஞரான பேராசிரியர் கவிஞர் எம்.ஏ.நுஃமானிடத்தில் கவிதைகளை முதலில் காட்டுவார். நுஃமான் என் சகோதரரின் கவிதைகளைப் படித்த பின் அதன் சிறப்புகளையும், குறைகளையும் எடுத்துச் சொல்வார். அதேபோல கவிஞர் ஈழமேகம் பக்கீர் தம்பி என் சகோதரருக்கு உறுதுணையாக இருந்தார். அவர் ஒரு பெரும் கவிஞர் ஆவார். அவர் எங்கள் சாச்சா முறையானவர். இவர் எனது சகோதரரின் கவிதைகளை சிறுவயதில் பத்திரிகைகளுக்கும் அனுப்பி ஊக்கமளித்தார்".மகன்" என்று அன்புடனும் உரிமையுடனும் அழைத்தார். கவிஞர் ஈழமேகம் பக்கீர் தம்பி, எனது சகோதரருக்காகப் பாடிய "வண்ணத்தமிழ் பேசு"என்ற கவிதையை நான் இங்கு பதிவிட விரும்புகிறேன். இதோ அந்தக் கவிதை:

காத்திருந்த என் கரத்தில்
கரும்பு வழிச் சாறு பிழிந்து பார்த்திருந்த
என் எதிர் கண் பாவை
மலர் தேன் சிந்த
வார்த் தெடுத்து
வடித்தெடுத்து
வண் தமிழில்
கோர்த்தெடுத்து

ஆர்த்த அழி
மொய்த்த மலர்
அழகு கவி
நீ மொழிந்தாய்.

பார்த்ததுமே என் இதயம்
பாகாய் உருகி விட ,
பூத்ததடா
கண்மணியே
பூரித்த என் உடலம்.

வேர்த்தடா உன்
கவியின்
வேகத்தைத்
தாங்காமல்

சோற்றுக்கும்
கூழுக்கும்
சொன்னாள் கவி
ஔவை
காற்றில் மிதந்த
கடிதம்
வரைந்தளித்தாய்.

சேற்றில்தான் நட்டாலும்
செழித்து வளருமடா
ஆற்றல் செறிந்த
மகன் அஷ்ரப்
நீ அளித்த கவி.

ஆயிரத்தில் நீ ஒருவன்
அழகுத் திருத் தமிழ்
கவிஞன்
பாயிரத்தில் காணா
பண்புக் கலையார்வம்
நீ ஒருத்தன்
பெற்று நினைத்தால்
அது எனக்கு
ஆயிரமோ கோடியோ
அதிலும்
பெரு மகிழ்ச்சி.

சே! இதற்கா
என்று சிரித்தேன்
கவி மகனே!
வாயிருக்கு மட்டும்
வண்ணத்தமிழ் பேசு.

அல்லாஹ்வின் அருளால் அவருக்கு இருக்கும் உயர்ந்த நினைவாற்றலும் நன்றி மறவாத மனப்பான்மையும் பிறருக்கு உதவி செய்யும் குணமும் அவரை இந்த மண்ணில் வளம் மிக்க மனிதனாக ஆக்கிச் சென்றது. அப்போதுதான், "நீ வாழ்ந்ததும் செய்ததும் போதும் . இனி என்னிடம் வந்துவிடு "என்று அவருக்கு இறைவனின் அழைப்புக் கிடைத்தது.
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"

ஒரு தாய்க்கு தன் மகன் கண் முன்னே மரணித்துவிட்டால் அந்த வலி எவ்வளவு மிகுந்தது என்பதை நானும் அறிவேன்: என் தாயும் அறிந்தார்.

எந்த நேரமும் சிரித்த முகத்துடன் இருக்கும் எனது தாய், தன் மகனைப் பிரிந்த ஒன்றரை வருடங்கள் அழுத கண்களுடனும்,நிறைந்த துயருடனும் மகனுக்காக சதா பிரார்த்தித்த வண்ணமே காணப்பட்டார். உயிருடன் இருந்தபோது ஒவ்வொரு நாளும் எனது சகோதரர் என் தாயைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் பின்னால் நிறைய அவரது ஆதரவாளர்கள் வருவார்கள். என் தாயோடு பேசுவார்கள். ஆனால், அவர் மரணத்த பின்னர் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே வந்தனர். அது ஒரு வேதனை மிகுந்த காலம். மகனின் மௌத்துக்குப் பின்பு ஒருவரையும் காணவில்லை. "அவர் வந்தாரா? இவர் வந்தாரா? " என்று எனது தாய் கேட்டுக் கொண்டே இருப்பார். ஆனால், பெரிதாக யாரும் வரவில்லை.
பழமரம் இல்லாதபோது பறவைகளுக்கு என்ன வேலை?

எனது தாய்க்கும் இயற்கையான கவிப் புலமை அதிகம். அவருக்கு எழுதத் தெரியாது. ஆனால், கிராமிய கவிதைகளை அவர் வாயால் சொல்லக் கேட்டிருக்கிறோம். என் சகோதரன் என்னிடம் அவற்றை எழுதித் தருமாறு வேண்டிக் கொண்டார். அவற்றை புத்தகமாகத் தொகுத்து வெளியிட அவர் விரும்பினார். நானும் எனது தாய் கூறக் கூற அவற்றை முழுவதுமாக எழுதி சகோதரரிடம் ஒப்படைத்தேன். அதன்பின் சில மாதங்களில் என் சகோதரரின் மரணம் நிகழ்ந்துவிட்டது ; அத்துடன் அவரது முயற்சியும் நின்றுவிட்டது.

குடும்ப உறவுகளை எனது சகோதரர் மிகவும் பேணி வளர்க்க உறவினரை இனம் காட்டிச் சொல்லித்தந்தார். என் சகோதரர் தாய் தந்தையின் ஆதி மூலங்களைத் தேடி 'பெமிலி ரீ' என்று மரம் ஒன்றைக் கீறி அதில் உறவுகளின் பெயர்களைப் பொறித்து வைத்திருந்தார். அவர்களை சந்திப்பதிலும் உரையாடுவதிலும் மகிழ்ச்சி கொண்டார். எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் மற்றவரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து பொறுமையுடன் கேட்பார். எல்லோரையும் அழைத்து அடிக்கடி விருந்து கொடுப்பதை வழக்கமாக்கி, அதில் மகிழ்ச்சி அடைந்தார். என் தாயாருடன் அதிக நேரத்தைச் செலவிட்டார்.. தாயின் நகைச்சுவைப் பேச்சில் அவரும் சேர்ந்து மகிழ்வார். தனது "நான் எனும் நீ' நூலில் எனது தாயை "சொர்க்கத்தின் பேரரசி" என்று வர்ணிக்கிறார். என் தாயிடம் இருந்து விடைபெறும் போது , அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. தாயின் பாதங்களை தனது தலை மேல் தூக்கி வைத்து முத்தமிட்ட பின்பே அவர் விடை பெறுவார். அது ஒரு பொற்காலம்.

வாழ்க்கையில் எத்தனையோ பேரை இழக்கிறோம். பலரின் இழப்புகள் அவரது குடும்பத்தினருக்கு மட்டும் தான் கவலையையும் நஷ்டத்தையும் கொடுக்கிறது. சிலரின் மரணங்கள் மட்டும் முழு சமுதாயத்திற்கும் இழப்பாகவும் துயராகவும் அமைந்து விடுகிறது. அத்தகைய ஒரு மரணம் தான் என் சகோதரரின் மரணம். இன்னும் அந்தத் துயர் ஓயவில்லை. இந்த மரணத்தையிட்டு அவர் தன் 'நான் எனும் நீ' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்: "இங்கிருந்து நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் இறப்பினையே நோக்கி வைக்கும் அடிகளாகும். சேவை சதா செய்யாமல் இருப்போரை செத்த இழிப் பிணங்களுடன் நாம் சேர்க்க வேண்டும்.

சேவை நிதம் செய்வோரே இறந்தும் வாழ்வர்" என்கிறது அவரின் கவிதை.

ஆகவே, இருக்கும் காலத்தில் சேவை
செய்து வாழ்வதே மனிதனின் குறிக்கோள். இதுவே அவரது ஆவலும் கூட!

ஆம்! மரணத்தின் பின்னும் எனது சகோதரர் உங்கள் மனதில் நிறைந்து இருக்கின்றார். அவர் மரணத்தைப்பற்றி என்றும் பயப்பட்டதில்லை. இதற்குச் சான்றாக ஒரு சம்பவத்தைக் கூற நினைக்கிறேன்.

மரணிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் எங்களிடம் வந்தார். என் கணவர் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருப்பதால் அவரோடு மனம் திறந்து பேசுவது என் சகோதரரின் வழக்கம். எனவே, அவர் இவ்வாறு கூறினார்:

"என்னைக் கொலை செய்வதாகப் பயமுறுத்துகிறார்கள். நான் இவர்களுக்கோ அல்லது மரணத்துக்கோ பயப்படவில்லை. மரணம் எப்போதும் எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். ஆனால், என்னை இவர்கள் விரைவாக இறைவனிடம் அனுப்பப் பார்க்கிறார்கள். இறைவனை மற்றவர்கள் சந்திக்க முன்பு நான் சந்திக்கப் போவது எனக்கு மகிழ்ச்சிதான்" என்று சொன்னபோது, நான் வாய்விட்டு அழுதுவிட்டேன்.

இறுதியாக, என் சகோதரனின் மரணத்தைப்பற்றி எல்லோரும் துயர் அடைந்தாலும்
என் தாயை தவிர,
வேறு யாருமே அது பற்றி போதியளவு வினாத் தொடுக்கவில்லை. என் தாய் மட்டும் மகனுக்கு என்ன நடந்தது என்று கேட்டுக்கொண்டே இருந்தார். "இதே போன்று வேறு ஒருவருக்கு நடந்து, என் மகன் உயிரோடு இருந்திருந்தால், நிச்சயமாக அதைப்பற்றிக் கேட்டிருப்பார்களே ஆனால், என் மகனைப் பற்றி யாராவது வாய் திறக்க மாட்டார்களா? "என்று வேதனையைக் கொட்டிக் கொண்டிருந்தார். எத்தனையோ வழக்கறிஞர்கள் என் மகனிடம் பயின்றும் ஒருவருக்காவது இது பற்றிக் கேட்க முடியாதா? என்று அழுதுகொண்டே இருந்தார்.

அந்த நாட்களில்தான் ஒரு நாள் ரவூப் ஹக்கீம் எம்.பி. எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரிடம் என் தாய் தன் ஆதங்கத்தை முறையிட்டபோது, அவர் அதனைச் செவிமடுத்தார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்து அவர் மூலம் ஓர் ஆணைக்குழுவை நியமிக்க ஏற்பாடு செய்தார். அதன் நடுவராக ஓய்வு பெற்ற மேல் உயர் நீதிமன்ற நீதிபதி லக்ஷ்மன் வீரசேகர கடமையாற்றினார். அரசு தரப்பில் சட்டத்தரணிகள் சிலர் மட்டுமே வாதாடினர். அவர்களோடு நான் மட்டுமே எனது சகோதரர் சார்பில் மூன்று மாதங்கள் தினமும் சென்று வந்தேன்.

அந்த மரணத்தை ஆராய அனுபவம் வாய்ந்ததொரு சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தேவைப்பட்டார். எனது சகோதரரின் சட்டத்தரணி நண்பர்களோ, அவரிடம் வேலை செய்தவர்களோ யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில்தான் என் கணவர் , ரவூப் ஹக்கீம் எம்.பி.யிடம் தாயாரின் இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்தார். உடனடியாக அவர் காலம் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி இக்பால் முஹம்மதைத் தொடர்பு கொண்டு அதில் வாதாட வைத்தார். இந்நிலையில் ரவூப் ஹக்கீம் எம்.பி.யின் உதவியை நினைவு கூர்ந்து இங்கு நன்றி பகிர்கிறேன்: மிக்க நன்றி! அத்துடன் இந்த வழக்கை தொடர்ச்சியாகப் பங்கெடுத்து இலவசமாக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி மர்ஹூம் இக்பால் முஹம்மதுக்கு எனது பிரார்த்தனைகள் என்றும் உண்டு என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் எனது சகோதரருக்கு மறுமையில் நல்லருள்புரிய வேண்டுகிறேன். இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களையும் , ஸலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

21 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன் பகிர்ந்துகொண்ட  நினைவலைகள்.

ஏ.எல்.எம்.சலீம்