இலவு காத்த கிளிபோல் இலங்கை அகதிகள் ஆகக்கூடாது தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் அமைச்சரிடம் விண்ணப்பம்.

இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டபின்பு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு தூதரகங்கள் மூலம் தமிழக முகாம்களில் வசித்துவரும் மக்கள் நாடு திரும்புவதற்கான பொன்னான வாய்ப்புகள் உருவாகி உள்ளது என்று கூறி நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டபோதும் இலவு காத்த கிளிபோல் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கவலை தெரிவித்து நிற்கின்றனர்.

இது தொடர்பாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம், கஸ்தம்பாடி திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் டேவிட் அனோஜன் என்பவர் தனது குழுவுடன் இலங்கை அகதிகள் தொடர்பாக தமிழக அரசு அமைத்த அமைச்சரவையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராகவும், தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு அமைத்துள்ள ஆலோசனைக்குழுவில் முதன்மைக் குழுவின் தலைவராகவும், பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர். திரு.செஞ்சி மஸ்தான் அவர்களை சந்தித்து வழங்கியுள்ள மகஜரில் தெரிவித்திருப்பதாவது;

இலங்கை உள்நாட்டுப் போரின் காரணமாக உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் பல இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளிலும் இந்தியாவிலும் தஞ்சம் அடைந்தனர்.

அவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் ஏறத்தாள 58,500 பேர் தமிழக முகாம்களிலும் 34,000 பேர் தங்கள் சொந்த விருப்பதில் முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருகிறார்கள்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்து முடியும்வரை தமிழகத்தில் வசிக்கும் அகதிகள் மத்தியில் என்றோ ஒருநாள் நமக்கான விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால் போரின் எதிர்பாராத முடிவு தமிழகத்தில் வசிக்கும் அகதி மக்கள் மத்தியில் தங்கள் எதிர்காலத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டபின்பு, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு தூதரகங்கள் மூலம் தமிழக முகாம்களில் வசித்துவரும் மக்கள் நாடு திரும்புவதற்கான பொன்னான வாய்ப்புகள் உருவாகி உள்ளது என்று கூறி நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் இது தொடர்பாக முகாம்களில் நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் பற்றிய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு அவை இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நாடு திரும்புதல் செயல்பாடு பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தது எனவும்
அவ்வாறு தன்னார்வமாக திரும்பி செல்லுதல் என்பது பல்வேறு கட்டங்களாக பின்வருமாறு நடைபெற்று வந்துள்ளதுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 2002 முதல் 17,718 நபர்களும் 2010 முதல் 2020 வரை 10,541 பேரும் 2016 இல் மட்டுமே முகாம் அல்லாத அகதிகளை திருப்பி அனுப்புவது தொடங்கியது. அதில் 809 நபர்கள் புறப்பட்டனர் .
பின் மார்ச் 2020 இல் கோவிட் -19 ஏற்பட்ட பின்பு சொந்த விருப்பத்தில் நாடு திரும்புதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
தொண்டு நிறுவனங்கள் கூறிய நம்பிக்கையான வார்த்தைகளை நம்பி இலங்கையில் அமைதி பூத்து விட்டது என நம்பி நாடு திரும்பிய அகதிளில் பலர் இன்றும் தமது உறவினர்களின் வீடுகளில் ஒட்டி வாழும் துயரமே தொடர்கின்றது.

'சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் வாருங்கள்' என அழைத்த இலங்கை அரசும் போர்க்கால அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கான மீள் குடியேற்றம் மற்றும் வாழ்வாதார தேவைகளை முழுமையாக இன்னும் செய்துகொடுக்கவில்லை என்பதே உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானாக முன்வந்து இலங்கை திரும்புவோருக்கு பல சவால்கள் இலங்கையில் உள்ளன என்று தமிழக முகாமில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை திரும்பியுள்ள தமிழ் எழுத்தாளர் ஒருவர் இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

ஆரம்பத்தில் இடம்பெயர்வு காரணமாக ஏற்படும் உளவியல் தாக்கம் மிகப்பெரியது. படிப்படியாக தனது உறவினர்கள், மற்றும் நண்பர்களின் ஆதரவுடன்தான் அதை சமாளிக்க முடிந்தது 'என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த சூழ்நிலைகளை சமாளிக்க முடியாமலும், இலங்கை சென்று அங்கு சரியான வாழ்வாதார வசதிகள் கிடைக்கப்பெறாமலும், மீண்டும் தமிழகத்திற்கு அகதியாக வந்து நம்மோடு முகாம்களில் வசித்துவரும் நபர்கள் கூறும் தகவல்கள் நாடு திரும்புதல் என்ற கூற்றின் மீது அதிக நம்பிக்கையை இங்குள்ளவர்களுக்கு அளிக்கவில்லை.
மேலும் முகாம்களில் வசிக்கும் மக்களில் 3 விதமான நிலைப்பாடுகளில் மக்கள் இருக்கிறார்கள். இவை அரசு அதிகாரிகளின் முகாம் ஆய்வுகளின்போது வெளிப்பட்ட முக்கிய விடயங்களாகும்.
முதலாவது, மீண்டும் தாயகம் திரும்பி சொந்த இடங்களில் குடியேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளவர்கள்.

இரண்டாவத, மீண்டும் தாயகம் திரும்ப முடியாது; இந்தியாவில் குடியுரிமை பெற்று வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.

மூன்றாவது, இலங்கையில் நிலைமை சீரடையும் போது தாயகம் திரும்பலாம்; அதுவரை இந்தியாவில் அனைத்து உரிமைகளுடன் கௌரவமாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள்.
முகாம்களில் வாழும் மக்கள் ஏன் நாடு திரும்புவதில் அதிக அக்கறை கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள்.
1. பல வாக்குறுதியின் அடிப்படையில் தமிழக முகாம்களில் இருந்து இலங்கை சென்று அங்கும் முகாம்களிலே வாழ்ந்து மீண்டும் தமிழகம் வந்து அகதியாக வாழ்ந்து வருபவர்கள், மற்றும் அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்தவர்கள் இலங்கை செல்வதில் அக்கறை காட்டவில்லை.
2. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமலேயே உள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி கூட எந்த ஒரு தீர்க்கமான தீர்வும் நிறைவேற்றப்படவில்லை. உலக நாடுகள் ஒரு அரசியல் தீர்விற்கு இலங்கை அரசை வலியுறுத்தியும் இலங்கை அரசு இதுவரை எந்த முயற்சியும் முழுமையாக முன் எடுக்கவில்லை.
3. தங்கள் உறவினரையும் உடமைகளையும் இழந்து வந்து மன விரக்தியோடு வாழ்ந்துவரும் குடும்பங்கள் மீண்டும் அங்கு சென்று வாழ விரும்பவில்லை.
4. தாயகம் திரும்புமாறு வலியுறுத்தும் அரசியல் தலைவர்களும், தொண்டு நிறுவனங்களும் நாடு திரும்ப விரும்பும் மக்களின் விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை உள்ளடக்கிய வெளிப்படையான வாழ்வாதார திட்டங்களை முன்வைக்காமல் செயல்படுவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
5. அரசியல் புவியியல் பொருளாதார பாதுகாப்பு இன்றும் அங்கு உறுதி செய்யப்படவில்லை. எதுவுமே முடிவாகத நிலையில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்புவது பற்றி எவ்வாறு முடிவு செய்ய முடியும்.
6. இங்கு வந்து பிறந்து வாழ்பவர்களும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் என்று ஒரு மூன்றாம் தலைமுறை இங்கு வாழ தொடங்கியுள்ள நிலையில் பூத்துக் காய்க்கும் மரத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவது எவ்வளவு சாத்தியம் இல்லையோ அதுபோல இங்கு வளர்ந்துவரும் இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பெரும்பாலானவர்கள் நாடு திரும்புதல் என்பதை விரும்பவில்லை.
7. இலங்கையில் நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்கள் அம்பாந்தோட்டையில் சீனக் குடியேற்றமும் விமான நிலையமும் என்று தொடரும் சீனாவின் ஆதிக்கம் மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடிகள் போன்றவை நிச்சயம் இல்லாத நிலையை அங்கு தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்பதை அண்மைய செய்திகள் மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளதும் ஒரு காரணங்களில் ஒன்றாகும்.
8. அங்கு வாழும் 15 ஆயிரம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீதியில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அண்மையில் வெளிவந்த ஒரு செய்தியின் மூலம் அறிய முடிகிறது. அப்படி இருக்கும்போது இங்கிருந்து செல்லும் பட்டதாரிகள் நிலை அங்கு என்னவாக இருக்கும் என்ற அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
9. மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து விட்ட போதும் இங்கு ஏதோ ஒரு தொழிலைச் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் அகதிகள் அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு தாயகம் திரும்பினால் எல்லாவற்றையும் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மீண்டும் அங்கு தொடங்க வேண்டும் என்ற கட்டாய நிலை உள்ளது.

10. அங்கு சென்று தங்களால் வாழ முடியுமா என்று ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டு இருக்கும் உளவியல் சந்தேகம் நாடு திரும்புவதில் மக்கள் முடிவெடுக்க அச்சப்படுகின்றனர்..

மேற்கண்ட காரணங்களால் பெரும்பாலானவர்கள் இலங்கை செல்ல விரும்பாமல் இங்கேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புகிறார்கள் என்பது அண்மையில் தமிழக அரசின் அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளின் முகாம் ஆய்வுகளின்போது தெளிவாக வெளிப்பட்டது.

ஆனால் குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்கள் சொந்த விருப்பத்தில் இலங்கை செல்ல விரும்புகிறார்கள் என்பதும் இந்த ஆய்வுகளின்போது வெளிப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பாக சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் இலங்கையின் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக தலைவர் போன்றவர்கள் கலந்துரையாடி உள்ளதாகவும் செய்தி வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து செல்லும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக இந்த செய்தி உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று இதன் மூலம் அறிய முடிகிறது.

தங்கள் சொந்த விருப்பத்தில் நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் என்று சுமார் 4000 நபர்களின் விபரங்கள் ஏற்கனவே இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் கையளிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி தாமதமாகிக்கொண்டே செல்கிறது.

தங்கள் சொந்த விருப்பத்தில் நாடு திரும்ப விரும்புபவர்களை அங்கு அழைத்துச் செல்லும் செயல்பாடுகள் மீண்டும் முன்னெடுக்கப்படும்போது பின்வரும் பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு ஆவன செய்தால் அது நாடு திரும்பும் மக்களுக்கு பாதுகாப்பான உத்திரவாதமான வாழ்கையை அங்கு ஏற்படுதிக்கொடுக்கும் என்று நம்புகிறோம்.

1. கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட நாடு திரும்புதல் செயல்பாடுகள் போல் அல்லாமல் இனிவரும் காலங்களில் சொந்த விருப்பத்தில் நாடு திரும்ப விரும்பும் மக்களை அரசு கணக்கெடுத்து இந்திய-இலங்கை அரசுகள் ஏற்றுக்கொள்ளும் ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் நாடு திரும்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்தும் உடன்படிக்கை எந்த விதத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழகத்தில் தொடந்து தங்கியிருக்க விரும்பும் மக்களை அவர்களது விருப்பம் இல்லாமல் நாடு திரும்ப வலியுறுத்துவதாக இருக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கவனம் கொள்ள வேண்டும்.

3. தமிழகத்தில் இருந்து தங்கள் 'தாயகத்துக்கே திரும்பிச் செல்ல விரும்புவோர் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அவர்களை கணகெடுத்து மத்திய அரசு அனுமதி பெற்று இலங்கைக்கு திருப்பி அனுப்ப மாநில அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழகத்தில் இருந்து அழைத்து வருவோரை அவரவர் பூர்வீக நிலங்களில் குடியமர்த்தி அவர்களுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வீடு கட்டிக்கொடுக்க திட்டங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இலங்கையில் மறுகுடியமர்த்துதல் என்பது மிகவும் சிரமமான பணியாக இருந்து வருகிறது. யாருடைய நிலம் யாருக்குச் சொந்தமானது யார் யாருடைய வாரிசு என்பதெல்லாம் தேடிக்கண்டடைய முடியாத விஷயங்களாக இருக்கின்றன என்று வடக்கு மாகாண முதல்வர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் அண்மையில் கூறியிருந்தார். எனவே இங்குள்ள மக்கள் இலங்கை திரும்பும் முன் அவர்களது காணி நிலங்களை இலங்கை தூதரகம் மூலம் முன்கூட்டியே உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

5. தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு அங்கே முதல் கட்டமாக வீடுகள் காணிகள் ஒதுக்கப்படவும் அதை இப்போதே பத்திரப்பதிவு செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு திரும்ப உள்ளவர்களுக்கு இலங்கையில் வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை இந்தியாவில் அவர்கள் உதவித்தொகையுடன் தங்கியிருக்கவும் வீடுகள் கட்டி முடித்த பிறகு குடிபெயரச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6. நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் இங்கே உயர் கல்வி படித்துக் கொண்டிருந்தால் அவர்கள் படித்து முடிக்கும்வரை அவர்களது குடும்பமோ அல்லது குழந்தைகள் மட்டுமோ இங்கு தங்கியிருக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

7. இந்தியாவில் பட்டப் படிப்புகள் முடித்துள்ளவர்களின் கல்விச் சான்றிதழ்களை இலங்கை அரசு அங்கீகரிப்பதாக உத்தரவாதமளிக்கும் ஒப்பந்தங்கள் இதுவரை இரு நாடுகளிடையே ஏற்படவில்லை. அதனால் இங்கு கல்வி கற்று முடித்தாலும் அந்த நாட்டில் வேலை வாய்ப்பைப் பெற முடியாத நிலை உள்ளது. இலங்கை தூதரகத்தால் சான்றிதல்களில் சிகப்பு முத்திரை இடும் பணிகளை அவர்கள் நாடு திரும்பும் முன்பே செய்து முடிக்கப்பட வேண்டும்.

8. இலங்கையின் மட்டக்களப்பில் மிகப் பெரிய தொழில்பேட்டை ஒன்று உருவாக இருப்பதாகவும் அதில் தமிழகத்தில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு திட்டம் இருப்பின் மீள்குடியமர்வுக்காகத் திரும்பிச் செல்ல விருப்பம் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் இங்கு சுய தொழில் செய்து வருபவர்கள் இலங்கை சென்று தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவும் கடன் உதவிகள் பெற்று தொழில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திலேயே நேர்காணலை நடத்துதல் மற்றும் தொழில் செய்வதற்கான கடன் போன்றவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

9. தமிழகத்தில் அகதிகளின் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளை இலங்கை தூதரகத்தில் பிறப்புச் சான்றிதழை இலங்கை அரசின் பிறப்பு-இறப்பு பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் பதிவு செய்து அதற்கான சான்றிதழைப் பெற்ற பின்னரே இலங்கை திரும்ப அனுமதிக்க வேண்டும்.

10. இலங்கையில் இருந்துவந்த பலர் தங்களின் இலங்கை பாஸ்போர்ட் கூட தற்போது இல்லை என்ற நிலையில் உள்ளனர். மேலும் குடியுரிமையைப் பொறுத்தவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அவை சரிபார்ப்புக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க குறைந்தது ஒரு வருட காலம் ஆகிறது. அதை எளிதாக்கி நாடு திரும்பும் நபர்கள் தங்கள் கடவுச் சீட்டையும் குடியுரிமையையும் விரைவாகவும் எளிதில் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

11. ஐக்கிய நாடுகள் சபையின் உதவியோடு விமானங்களில் பலர் இலங்கை திரும்பி செல்கிறார்கள். அவர்கள் சுமார் 30 கிலோ எடையிலான உடைமைகளையே எடுத்துச் செல்ல முடிகிறது. அதனை மாற்றி இங்கு தாங்கள் வைத்துள்ள அசையும் சொத்துக்கள் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்ல தனியாக கப்பல் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

12. அசையும் சொத்துக்களில் தாங்கள் இங்கு வாங்கி பயன்படுத்திவரும் இருசக்கர மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகங்களை உரிய சான்றுகளுடன் இலங்கைக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த உரிய அனுமதியும் அந்த வாகனங்களை ஏற்றுமதி இறக்குமதி வரிகள் இல்லாமலோ அல்லது குறைந்த கட்டணத்தையோ நிர்ணயித்து அவற்றை அங்கு கொண்டு சென்று பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படுபவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.30000 வழங்க அரசு திட்டமிடுவதாக தகவல் தெரிகிறது. இந்த தொகை மீள் பரிசீலிக்கப்பட்டு அந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை குறைந்தது ஓர் ஆண்டாவது சமாளிக்கும் விதத்தில் வழங்க வேண்டும். அல்லது அவர்களை அங்கு நிரந்தரமாக குடியமர்துதும்வரை இங்கு அவர்களக்கு வழங்கப்படுவதுபோல் மாதாந்திர பணக்கொடை மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக தாங்கள் பொறுப்பேற்ற பின்பு மேற்கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழர் முகாம்களின் ஆய்வுகளுக்கு பின்னர் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இலங்கை அனுப்பமாட்டோம் அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் அவர்களுக்கு என்றும் பாதுகாப்புடன் நாங்கள் இருப்போம்' என்று தாங்கள் கூறிய வார்த்தைகள் மீது நாங்கள் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன் மூலம் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக அரசு அமைத்த அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராகவும் தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு அமைத்துள்ள ஆலோசனைக்குழுவில் முதன்மைக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்.திரு.செஞ்சி மஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவு காத்த கிளிபோல் இலங்கை அகதிகள் ஆகக்கூடாது தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் அமைச்சரிடம் விண்ணப்பம்.

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House